'கண் கலங்கிய கணேசமூர்த்தி; தேற்றிய வைகோ!' - வாக்குச் சேகரிப்பில் நெகிழ்ச்சி | Erode Candidate Ganesamoorthy Emotional in Election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:40 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:44 (01/04/2019)

'கண் கலங்கிய கணேசமூர்த்தி; தேற்றிய வைகோ!' - வாக்குச் சேகரிப்பில் நெகிழ்ச்சி

வைகோ

தி.மு.கவிலிருந்து வைகோவுடன் விலகிச்சென்று இன்றுவரை அவருடன் செயல்பட்டு வருபவர் கணேசமூர்த்தி. இவர் ஒரு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை எம்.பியாகவும் இருந்திருக்கிறார். தற்போது தி.முகவினுடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் ஈரோடு தொகுதி வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார். இவருக்கு ஆதரவாக கடந்த இரண்டு நாட்களாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஈரோட்டில் தங்கி முகாமிட்டு, பிரசாரம் செய்து வருகிறார்.

அந்தவகையில், நேற்று ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற பிரசாரத்தின் போது கணேசமூர்த்தி பேசுகையில், "இந்த மொடக்குறிச்சி தொகுதிக்கு 1977-ல் தி.மு.க எம்.எல்.ஏவாக வந்தவன், தொடர்ந்து உங்களுடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். விவசாயம் சம்பந்தமான பிரச்னைகளாக இருந்தாலும், எந்த சமூக நல பிரச்னைகளாக இருந்தாலும் உங்களுடன் சேர்ந்து போராடி வருகிறேன். இதுவரை எனக்கு கிடைத்த வாய்ப்பை தொகுதியினுடைய முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன். அரசியலில் நேர்மை, பொதுவாழ்வில் தூய்மை ஏற்றுக்கொண்டிருக்கிற லட்சியத்தில் உறுதி என்கின்ற கோட்பாட்டின் அடிப்படையில் என்னுடைய அரசியல் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவன் நான். நான் எம்.பியாக இருந்த போது தொகுதி மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கினேனே தவிர, யார் வேலை செய்தார்கள், என்ன நடந்தது என எங்கும் சென்று பார்த்ததில்லை, யாரிடமும் நான் கை நீட்டியதில்லை. சுத்தமானவனாக இருந்து வருகிறேன்" என்று சொல்ல, கூட்டத்திலிருந்து 'நீங்கள் சொல்வது நூறு சதவிகிதம் உண்மை' என்ற குரல் பலமாக எழுந்தது.

வைகோ

மக்கள் மத்தியில் இருந்து எழுந்த இந்த ஆதரவைக் கேட்டு கலங்கிய கணேசமூர்த்தி பேசமுடியாமல் திக்கித்து நின்றார். மைக்கில் பேச நினைத்தும் அவரது தொண்டை கணத்தது. உணர்ச்சிவசப்பட்டு கண்கள் கலங்கிய நிலையில் மேற்படி பேச முடியாமல் மைக்கை வைகோவிடம் கொடுத்துவிட்டார்.

அதன்பிறகு வைகோ பேசுகையில், " என்னுடைய ஆருயிர் சகோதரர் கணேசமூர்த்தி வாழ்நாளெல்லாம் அண்ணாவுடைய தம்பியாக எவரிடமும் பிரதிபலன் எதிர்பாராது கொள்கைக்காகவே வாழ்ந்து பலவருடம் சிறைக்கு சென்றிருக்கிறார். நான் 54 ஆண்டுகாலமாக கணேசமூர்த்தியுடன் பழகி வருகிறேன். விவசாயிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் முதல் சிப்பாயாக போய் நிற்பவர் கணேசமூர்த்தி, மொடக்குறிச்சி கணேசமூர்த்தி என்றால் தான் அந்தக்காலத்தில் எனக்கே தெரியும். நடைபெற இருக்கின்ற தேர்தலுக்குப் பிறகு நாட்டில் ஜனநாயக ஒளி பரவ வேண்டுமா அல்லது பாசிச இருள் நம்மை சூழ வேண்டுமா என்பதை மக்களாகிய நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.