"தேனி போயஸ் கார்டனில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!"– செண்டிமெண்ட் காரணமா? | EVKS Ilangovan Stayed in Theni Boise Garden

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:10 (31/03/2019)

"தேனி போயஸ் கார்டனில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்!"– செண்டிமெண்ட் காரணமா?

தேனி போயஸ் கார்டனில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்.! – செண்டிமெண்ட் காரணமா?

“நான் தேனி தொகுதி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி ஆனால், தேனியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி, மக்கள் பணியாற்றுவேன்” என்று பேட்டியளித்தார் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன். அந்த பேட்டி அளிக்கப்பட்ட இடம், தேனி போயஸ் கார்டன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம்.

தேனி

ஜெயலலிதா தேனிக்கு வரும் போதெல்லாம் தங்கக்கூடிய இடம் என்றால், அது தேனியின் முக்கிய பகுதியான என்.ஆர்.டி நகரின் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 22ம் நம்பர் வீடு. கடந்த 2002ம் ஆண்டு ஆண்டிபட்டியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொண்டார். அப்போது ஆண்டிபட்டி தொகுதியின் தேர்தல் பணிகளை இந்த வீட்டில் தங்கியிருந்து தான் கவனித்துவந்தார். ராமானுஜம் என்பவருக்குச் சொந்தமான இந்த வீட்டில் ஜெயலலிதா தங்குவதற்காக பிரத்யேகமாக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சென்னையில் உள்ள போயஸ் கார்டனுக்கு இணையான வசதிகள் செய்யப்பட்ட பின்னர், ஜெயலலிதா இந்த வீட்டிற்கு வந்தார். இந்த வீட்டின் ராசி தான் அவரை ஆண்டிபட்டியில் வெற்றிபெறவைத்தது என்று தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரத்தில் பேசப்படுவது மட்டுமல்லாமல், இந்த வீட்டை தேனியின் போயஸ் கார்டன் என்றே அழைக்கின்றனர். ஜெயலலிதா தங்கியிருந்து தேர்தல் பணிகளை முடித்து வெற்றியோடு சென்னை திரும்பிய பின்னர், அந்த வீட்டில் சொல்லிக்கொள்ளும் படியாக யாரும் தங்கவில்லை. தற்போது காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தங்கியிருக்கிறார். தேர்தல்  செண்டிமெண்டில் தான் தற்போது அந்த வீட்டில் அவர் தங்கியிருப்பதாக தேனி மாவட்ட தி.மு.க., காங்கிரஸ் வட்டாரத்தில் பேசப்படுகிறது.