'சார்.. டம்மி துப்பாக்கி இல்ல!'- அரியலூர் போலீஸை பதறவைத்த ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி | ariyalur Election officer Gun Shoot Issue

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:47 (01/04/2019)

'சார்.. டம்மி துப்பாக்கி இல்ல!'- அரியலூர் போலீஸை பதறவைத்த ஹரியானா ஐபிஎஸ் அதிகாரி

தேர்தல் அதிகாரி குடி போதையில் வானத்தை நோக்கி 9 முறை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்று போலீஸார் விசாரணையில் இறங்கியுள்ளனர். 

                                           
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகள்,மற்றும்  தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் உஷ்ணத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பார்வையாளர் நடந்துகொண்ட விதம், அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது 

                                          

     
என்ன நடந்தது என்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சில காவலர்களிடம் பேசினோம்.  ”சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் பார்வையாளராக  ஹரியானாவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஷேமந்த் என்பவரை நியமித்துள்ளது தேர்தல் ஆணையம்.  நேற்று மாலை தேர்தல் தொடர்பான வேலைகளை முடித்துவிட்டு அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருக்கிறார். அப்போது இவர் மட்டும் மது அருந்தியுள்ளார். போதை தலைக்கு ஏறியதும் அவருக்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினரிடம் நான் ஒரு ஐ.பி.எஸ் கேடர். எங்கள் மாநிலத்தில் எப்படி எனக்குப் பாதுகாப்பு கொடுப்பார்கள் என்று தெரியுமா இங்கு என்னையா பாதுகாப்பு கொடுக்கிறீர்கள் என்று காவலர்களிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அத்தோடு நீங்கள் வைத்திருக்கும் துப்பாக்கி சுடுமா என்று கேட்டுள்ளதோடு, டம்மி துப்பாக்கியால் எனக்குப் பாதுகாப்பு கொடுத்திருக்கிறீர்களா எனக் கிண்டலாகப் பேசியிருக்கிறார் அதற்கு அந்த காவலர்களும்  இது டம்மி துப்பாக்கி இல்ல சார். இது சுடும் என்றும் சொல்ல, கொண்டு வா நான் பார்த்துச் சொல்கிறேன் என்று கேட்டிருக்கிறார் அவர் துப்பாக்கியை தர மறுத்து விலகிச் சென்றிருக்கிறார். அவரிடம் மல்லுக்கட்டி துப்பாக்கியைப் பிடிங்கி மதுபோதையில் ஒன்பது சுற்றுகள் வானத்தை நோக்கி சூட்டிருக்கிறார். இரவு நேரத்தில் துப்பாக்கி சுடும் சம்பவம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வெளியே வந்துள்ள பார்த்துள்ளனர். இச்சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,  ஐபிஎஸ் அதிகாரி ஷேமந்த் துப்பாக்கியால் சுட்டாரா என ஆட்சியர், எஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.