'இந்தத் தேர்தல் காந்திக்கும் கோட்சேவுக்குமான போராட்டம்' - சஞ்சய் தத் | congress secretary sanjay dutt About Lok sabha Election 2019

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:47 (01/04/2019)

'இந்தத் தேர்தல் காந்திக்கும் கோட்சேவுக்குமான போராட்டம்' - சஞ்சய் தத்

டெண்டர் விசயங்களில் முதல்வர், துணை முதல்வர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர்கள் மீது குட்கா வழக்குகள் உள்ளன. தமிழக அரசை மோடி அரசு பொம்மலாட்டம்போன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது என காங்கிரஸ் தேசிய செயலாளர் சஞ்சய் தத் கூறினார்.

சஞ்சய் தத்


காங்கிரஸ் தேசிய செயலாளரும், தமிழக காங்கிரஸ் பார்வையாளருமான சஞ்சய் தத் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "15 லட்சம் ரூபாய் மக்களின் வங்கிக்கணக்கில் போடுவதாக கூறியதை செய்யவில்லை. பணம் மதிப்பிழப்பின்போது நாட்டில் அசாதாரணமான சூழ்நிலை நிலவியது. வங்கிகளில் கடன் வாங்கிக்கொண்டு மோசடி செய்த நிராவ் மோடி, விஜய் மல்லையா போன்றவர்களை வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார்கள். காவலன் என தன்னை அழைத்துக்கொள்ளும் மோடி கார்ப்பரேட் முதலாளிகளான அதானி, அம்பானிகளுக்கும், நீரவ்மோடி, விஜய் மல்லையா போன்றவர்களுக்கு காவலனாக உள்ளார். சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அதிகரித்துள்ளன. பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தினர்.

 

சஞ்சய் தத்

கடந்த ஐந்து ஆண்டுகளாக பிரதமர் வெளிநாட்டில்தான் இருந்தார். அவர் என்.ஆர்.ஐ. பிரதமராக இருந்தார். இந்த தேர்தல் காந்திக்கும், கோட்சே விற்கும் இடையே நடக்கும் போராட்டம். காங்கிரஸ் ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்டத்தில் எத்தனை தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட்டன என கேட்கிறீர்கள். ஆனால் நாங்கள் வருங்காலத்தில் என்ன திட்டங்கள் செய்யவேண்டும் என்பது குறித்து பேசுகிறோம். தமிழகத்தில் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரத்தில் சிறுபான்மையினருக்கு கூட்டணியில் சீட் ஒதுக்கியுள்ளோம். 

இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ஆகியோர் மோடியிடம் சரணடைந்துள்ளனர். டெண்டர் விசயங்களில் முதல்வர், துணை முதல்வர்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அமைச்சர்கள் மீது குட்கா வழக்குகள் உள்ளன. தமிழக அரசை மோடி அரசு பொம்மலாட்டம்போன்று ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. ராகுல் காந்தி அறிவித்துள்ள ஏழை மக்களுக்கான குறைந்தபட்ச ஊதிய திட்டத்தில் 14 கோடி ஏழைகள் பயன்பெறுவார்கள். பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஜி.எஸ்.டி.யை மறு சீரமைப்பு செய்வோம். கல்விக்கான நிதி ஒதுக்கீடு மூன்று சதவீதத்தில் இருந்து ஆறு சதவீதமாக அதிகரிக்கப்படும்" என்றார்.