சிறுமி கொலையை மறைக்க பாட்டியையும் கொன்றாரா சந்தோஷ்? - கோவை பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல் | Police doubt on Santhoshkumar in coimbatore child murder case

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:27 (05/04/2019)

சிறுமி கொலையை மறைக்க பாட்டியையும் கொன்றாரா சந்தோஷ்? - கோவை பாலியல் வழக்கில் அதிர்ச்சி தகவல்

தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கோவை சிறுமி பாலியல் கொலை வழக்கில், சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்குத் திருமணமாகியிருந்தாலும், கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சந்தோஷ்குமார் தனது பாட்டியுடன் சிறுமியின் வீட்டுக்கு அருகில் வசித்து வந்துள்ளார்.

சிறுமியின் கிராமம்

சிறுமி மாயமான தினம் தான், சந்தோஷ்குமாரின் பாட்டி உயிரிழந்திருக்கிறார், இதனால், அவர்களது வீட்டில் யாரும் சிறுமியை தேடவில்லை. இதனிடையே, சிறுமியின் வாயில் அடைத்து வைத்திருந்த துணியில் இருந்த மண்ணும், சந்தோஷ்குமார் வீட்டில் இருந்த மண்ணும் ஒத்துப்போகியுள்ளது. மேலும், சிறுமியின் உடலில் கட்டப்பட்டிருந்த டி-ஷர்ட் சந்தோஷ்குமாருடையது தான் என்றும் கூறப்படுகிறது. இதையெல்லாம் வைத்துத்தான் சந்தோஷ்குமாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்ட அதே நேரத்தில் தான் சந்தோஷ்குமாரின் பாட்டியும் உயிரிழந்திருக்கிறார்.

சந்தோஷ்குமார்

“அந்தப் பாட்டி கடந்த சில மாதங்களாகக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். குச்சி வைத்துத்தான் நடப்பார். ஆனால், சம்பவம் நடந்த 25-ம் தேதி பகலில் பாட்டியைப் பார்த்தோம். அவர் நன்றாகத்தான் இருந்தார். அவரிடம் பேசினோம்” என்று ஊர் மக்கள் சொல்கின்றனர். எனவே, சிறுமி பாலியல் கொலை செய்யப்பட்டதை, அவரது பாட்டி பார்த்திருக்கலாம் என்றும் அதனால் அவரையும் சந்தோஷ்குமார் கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அவர் பாரத்சேனா அமைப்பைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. ஆனால், DYFI அமைப்பைச் சேர்ந்தவர் என்று இந்து அமைப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

 

உயிரிழந்த சிறுமியின் தாய் பேசுகையில், அவனது பாட்டியையும் அவனே கொலை செய்திருக்க வாய்ப்புள்ளது. இதில், சம்பந்தப்பட்டிருக்கும் அனைவரையும் கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும். குறிப்பாக என் கையில் தான் தண்டனை கொடுக்க வேண்டும்" என்றார்.

சிறுமியை ஏற்கெனவே பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி செய்துள்ளதாக சந்தோஷ்குமார் போலீஸாரிடம் வாக்கு மூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆனால், "தனது மகன் இந்த செயலில் ஈடுபடவில்லை. அன்றைய தினம் முழுவதும் அவன் எங்களுடன் தான் இருந்தான். பாட்டியின் மரணமும் இயற்கையானது" என்று சந்தோஷின் தந்தை கூறியுள்ளார்.