பெற்றோர் இல்லை... உணவில்லாமல் தவிக்கும் 4 குழந்தைகள்! - சேலம் சோகம் | There is no one to wipe the tears of those four children. Unclear sad story.

வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (31/03/2019)

கடைசி தொடர்பு:15:54 (08/04/2019)

பெற்றோர் இல்லை... உணவில்லாமல் தவிக்கும் 4 குழந்தைகள்! - சேலம் சோகம்

பெற்றோர் இல்லை... உணவில்லாமல் தவிக்கும் 4 குழந்தைகள்! - சேலம் சோகம்

`கல்லுமாவு மில்லுக்குள் கள்ளக்காதலி படுகொலை’ என்ற செய்தியைக் கேட்டுச் சாதாரணமாகக் கடந்துபோகத்தான் நினைத்தோம். ஏதோ ஒன்று நம்மை உறுத்த, தேடியபோது தெரியவந்தது, அந்தக் கண்ணீர்க் கதை. ``சில ஆண்டுகளுக்கு முன்பு தந்தையை இழந்த குழந்தைகள் தாயின் அரவணைப்பில் இருந்தார்கள். தற்போது தாயும் இறந்துபோக, ஆதரவற்றவர்களாக அடுத்தவேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் வாடி நிற்கிறார்கள்’’ என்ற தகவல் நம் காதுகளுக்கு எட்ட, அவர்களைச் சந்திப்பதற்காக சேலம் கொண்டாலம்பட்டியை அடுத்த இச்சமரத்துகாட்டு கிராமத்துக்குக் கிளம்பினோம். 

செல்லும் வழியில் ஒரு பெரியவரிடம் பேசினோம்... ``பாவம் சாமி... நாங்களும் கேள்விப்பட்டுப் போயி பார்த்தோம். குழந்தைங்க என்ன பாவம் பண்ணுச்சோ தெரியல. அப்பனையும் அம்மாவையும் இழந்து ஆதரவில்லாம நிக்குதுங்க. அந்த நாலு குழந்தைகளும் கதறி அழுததைப் பார்த்து ஊரே கண்ணீர் வடித்தோம். இப்ப அவுங்க கண்ணீரைத் துடைத்துவிடக்கூட ஆள் இல்லை. உங்களால முடிஞ்ச உதவிய அந்தக் குழந்தைகளுக்குப் பண்ணுங்க புண்ணியமா போகும்’’ என்றார்.  

வாசகர்களின் கவனத்துக்கு...

இந்த குழந்தைகளுக்கு நீங்கள் நிதியுதவி அளிக்க விரும்பினால், கீழ்க்கண்ட வழிமுறைகளில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தவும்..!

வங்கிப் பரிவர்த்தனைகளுக்கு `For Salem Kids’ என description-ல் குறிப்பிடுமாறு வேண்டிக்கொள்கிறோம்!

1. இந்தியாவில் இருக்கும் வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் ஹெச்.டி.எஃப்.சி வங்கி சேமிப்பு கணக்கு எண் 00040330019032 (ஆர்.டி.ஜி.எஸ்./ ஐ.எஃப்.எஸ்.சி கோட்:  HDFC 0000004, ஐடிசி மையம் கிளை, சென்னை-600002) மூலம் அனுப்பலாம்.

2. வெளிநாட்டு வாசகர்கள் வாசன் சாரிட்டபிள் டிரஸ்ட்டின் இந்தியன் வங்கி கரன்ட் அக்கவுன்ட் எண் 443380918 (ஐ.எஃப்.எஸ். கோட்:  IDIB000C032, ஸ்விப்ட் கோட்:  IDIBINBBESI எத்திராஜ் சாலை கிளை, சென்னை - 600008) மூலம் அனுப்பலாம். 

3. நேரில் வந்து நிதி அளிக்க விரும்புவோர், விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-2 முகவரியில் அளித்து உரிய ரசீதை உடனே பெற்றுக்கொள்ளலாம்.

4. மேலதிக தகவல் மற்றும் நிதி உதவிக்கான ரசீதுகளைப் பெற help@vikatan.com மின்னஞ்சலுக்கு தொடர்புகொள்ளவும்.

 

சேலம் கொண்டாலம்பட்டியை அடுத்த இச்சமரத்துகாட்டைச் சேர்ந்த லட்சுமி, ``அவுங்க எங்க பக்கத்து வீடுதான். வாங்கனு’’ நம்மை கூட்டிச்  சென்றார். சீமைக் கருவேல மரங்கள் சூழ்ந்த குக்கிராமத்தில் ஓர் ஓலைக் குடிசைக்குள் உறங்கிக்கொண்டிருந்த குழந்தைகளைத் தட்டி எழுப்பினார். கண்களை தேய்த்துக்கொண்டு சோகம் நிறைந்த முகங்களோடு வாசற்படியில் வந்தமர்ந்தார்கள். ``இந்தக் குழந்தைகளுக்குப் பொறந்ததுல இருந்து நெல்லுச் சோறு, சாரு கிடையாது. அதனால் ரெண்டு பசங்களுக்குக் காது கேட்காது. ஒரு பையனுக்கு கண் பார்வை சரியா தெரியாது’’ என்ற தொடர்ந்த லட்சுமி... ``இவுங்க அப்பா பேரு செல்வராஜ், அம்மா பேரு பாப்பாத்தி. இவுங்களுக்கு பிரகாஷ், ஹரி, கோபி, பூபதி என நாலு பசங்க. ரொம்ப ஏழைக் குடும்பம். இந்த லட்சணத்துல செல்வராஜுக்கு ரெண்டு பொண்டாட்டி. அவுங்க பேரு சாந்தி. அவருக்கும் ரெண்டு குழந்தைங்க இருக்காங்க. அவுங்க தனியா பக்கத்து குடிசையில இருக்காங்க. செல்வராஜ் கூலி வேலைக்குப் போயிட்டு இருந்தாரு. கடைசிப் பையன் பூபதி 3 மாச கைக்குழந்தையா இருந்தபோது பெரியூர் ஈஸ்வரன் கோயில் பக்கத்துல மர்மமான முறையில் இவுங்க அப்பா இறந்துட்டாரு.

கணவனை இழந்த பாப்பாத்திக்கு, கூடப் பொறந்தவங்க யாரும் இல்லை. நடக்க முடியாத 80 வயசைக் கடந்த அம்மாவும் மாமியாரும் இருக்காங்க. இவுங்களைப் பார்த்துக்கவே ரெண்டு ஆளு வேணும். குழந்தைங்க நாலு என மொத்தம் ஆறு பேரு. இந்த ஆறு உசுரையும் தனியாளா இருந்து இரவு, பகல் பார்க்காமல் கல்மாவு மில்லுக்கு வேலைக்குப் போய் கிடைக்கிற காசில் கூழோ, கஞ்சியோ வாங்கிக் கொடுத்து காப்பாத்துனாங்க. யாருகிட்டேயும் இல்லேனு கையேந்தமாட்டாங்க. அவுங்க வேலை உண்டு வெட்டி உண்டுனு இருப்பாங்க. குழந்தைங்க மேல ரொம்ப பாசம் வச்சிருந்தாங்க. அவர்களைக் காப்பாற்றுவதற்காக ரொம்ப கஷ்டப்பட்டாங்க. இப்ப, இந்தக் குழந்தைகளைச் சாப்பிட்டீங்களானு கேட்கக்கூட ஆள் இல்லை. `ஆஸ்டலுக்குப் போறீங்களா’னு கேட்டால் ஒவ்வொருத்தனும் கட்டிப் பிடிச்சுட்டு அழுறாங்க’’ என்றார்.

செல்வராஜின் இரண்டாவது மனைவி சாந்தி, ``நானும் கணவன் இல்லாமல், ரெண்டு சின்ன பசங்கல வச்சுக்கிட்டு கூலி வேலைக்குப் போய் வயித்த கழுவிட்டு இருக்கேன். என் குழந்தைகளைக் காப்பாத்துவதே ரொம்ப சிரமமா இருக்கு. இந்த ஆறு பேரையும் வச்சு நான் என்ன பண்ண முடியும்’’ என்று கண்ணீர்விட்டவர், ``பாப்பாத்தி ஞாயிற்றுக்கிழமை காலையில வேலைக்குப் போனாங்க. ரெண்டு நாளு ஆகியும் வீட்டுக்கு வரலை. செவ்வாய்க்கிழமை சாயந்தரம் கல்லுமாவு மில்லு ஓனர் போன் பண்ணினார். பாப்பாத்தி செத்துட்டதா சொன்னார். எங்க ஊருக்காரங்க நாலு பேரைக் கூட்டிட்டுப் போய்ப் பார்த்தேன். அந்தக் கல்லுமாவு மில்லுக்குள் ரத்த வெள்ளத்துல செத்துக் கிடந்தாள். அந்த ஓனருதான் பாப்பாத்தியை அடிச்சுக் கொன்னுட்டாரு’’ என்றார். 

சோகமாக நம்மையே பார்த்துக்கொண்டிருந்த அந்தக் குழந்தைகளிடம், ``உங்க அண்ணன் எங்கே’’ என்று கேட்டதற்கு, ``அம்மா உடலை ஆத்துல கரைக்கறதுக்காகக் கூட்டிட்டுப் போயிருக்காங்க’’ என்றார்கள், கண்ணீருடன்.


டிரெண்டிங் @ விகடன்