‘பகிர்ந்துண்டால் பசித்தீரும், விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம்!’ - ஓ.பி.எஸ் | OPS slams stalin in vellore campaign

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:09:49 (01/04/2019)

‘பகிர்ந்துண்டால் பசித்தீரும், விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம்!’ - ஓ.பி.எஸ்

‘‘ஸ்டாலின் நகைச்சுவையாகப் பேசுகிறார். பகிர்ந்துண்டால் பசித்தீரும். விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம் என்று அம்மா சொல்லியிருப்பதால், நாட்டுக்கு நல்லது செய்யும் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து மெகா கூட்டணி அமைத்திருக்கிறோம்’’ என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்காக வாக்குசேகரித்த ஓ.பன்னீர்செல்வம்.

வேலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் மற்றும் ஆம்பூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் ஜோதிராமலிங்க ராஜா, குடியாத்தம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர் கஸ்பா மூர்த்தியை ஆதரித்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாணியம்பாடி, ஆம்பூர், குடியாத்தம் ஆகிய மூன்று பகுதிகளில் நடைபெற்ற பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஏற்கெனவே நாட்டை ஆட்சி செய்தனர். நிர்வாகத் திறமை இல்லாததால், தமிழகத்துக்கு அவர்களால் உருப்படியான திட்டங்களைக் கொண்டுவந்து சேர்க்கமுடியவில்லை. இலங்கைத் தமிழர்களை கொன்றுகுவிக்கக் காரணமாக இருந்தார்கள். போர் நடைபெற்ற நேரத்தில் கருணாநிதி நாடகமாடினார். மெரினா கடற்கரையில் உண்ணாவிரதம் என்ற பெயரில் மூன்று மணி நேரம் உட்கார்ந்திருந்த கருணாநிதி, டெல்லி அரசிடம் சொல்லி போரை நிறுத்திவிட்டேன் என்று பேட்டி கொடுத்தார். தமிழகத்தை ஆளும் கருணாநிதியே சொல்லிவிட்டார் என்று நம்பி, ஆயிரக்கணக்கான பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த 40 ஆயிரம் தமிழர்கள் வெளியே வந்தனர். இலங்கை அரசுக் குண்டு மழை பொழிந்து, அவர்களை ஒட்டுமொத்தமாகக் கொன்றது. கருணாநிதி செய்த தவறால் தான், ஈழத்தமிழர்கள் இறந்தார்கள். தி.மு.க ஆட்சியில் அக்கிரமங்கள், நில அபகரிப்புகள் அதிகம் நடந்தன. 

அ.தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்துக்காக வாக்குசேகரித்த ஓ.பன்னீர்செல்வம்.

மாமன், மைத்துனர் சண்டையில் தினகரன் பத்திரிகை அலுவலகத்தைக் கொளுத்தினார்கள். மூன்று அப்பாவி உயிர்கள் பறிபோனது. அந்த தீர்ப்பில், ஆயுள் தண்டனை வந்திருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அ.தி.மு.க காணாமல் போய்விடும் என்று ஸ்டாலின் நகைச்சுவையாகப் பேசுகிறார். அ.தி.மு.க என்பது, ஒன்றரை கோடி நல்ல தொண்டர்களால் வேரூன்றி நிற்கும் பெரிய ஆலமரம். சுனாமி, புயல், பூகம்பமே வந்தாலும் அசைக்க முடியாது. கருணாநிதியால் கூட அ.தி.மு.க-வை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஸ்டாலினால், என்ன செய்ய முடியும். தி.மு.க வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் கட்சி. யாரையாவது ஏமாற்றி ஆட்சிக்கு வந்துவிடலாம் என்று நினைக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் கடுமையான மின்வெட்டு இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழ்கிறது. நல்ல திட்டங்களை, தொலைநோக்கு பார்வையுடன் மக்களுக்காக, அம்மா செயல்படுத்தினார். இந்தியாவிலேயே, உணவு உற்பத்தியில் முதல் மாநிலமாகவும், தொழில் வளர்ச்சியில் இரண்டாவது மாநிலமாகவும் தமிழகம் சிறந்துவிளங்குகிறது. தனி நபர் வருமானம் உயர்ந்திருக்கிறது. பகிர்ந்துண்டால் பசித்தீரும். விட்டுக்கொடுத்தால் கெட்டுப்போக மாட்டோம் என்று அம்மா சொல்லியிருக்கிறார். நாட்டுக்கு நல்லது செய்யும் கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து மெகா கூட்டணி அமைத்திருக்கிறோம். சாதி, மத சண்டைகள் இல்லை. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழகம்’’ என்றார்.