`முகிலன் மீது பாலியல்ரீதியான புகார்!' - கரூர் பரபரப்பு | Sexual complaint against activist Mugilan

வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:31 (01/04/2019)

`முகிலன் மீது பாலியல்ரீதியான புகார்!' - கரூர் பரபரப்பு

சூழலியல் போராளி முகிலன், தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக, அவருடன் போராட்டக் களத்தில் இருந்த பெண் ஒருவர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முகிலன்

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகிலன். கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராட்டம், கரூர் மாவட்டத்தில் மணல் பிரச்னை, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பிரச்னை என்று சூழலியலை பாழாக்கும் சக்திகளுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்தி வந்தார். இதற்காக, பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். இந்நிலையில், நாற்பது நாள்களுக்கு முன்பு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை வீடியோவாக வெளியிட்டார். அதன்பின்னர், சென்னை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து அடுத்தநாளே மர்மமான முறையில் காணாமல் போனார். இதுகுறித்து ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்யப்பட்டு, சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சமூகவலைதளங்களில், `முகிலன் எங்கே?' என்ற ஹேஷ்டேக் வைரலானது. ஐ.நா சபை வரை அவரது விவகாரம் எதிரொலித்தது. 'ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக முக்கிய ஆவணங்களை வெளியிடப்போய்தான் அவர் காணாமல் போயுள்ளார். அவர் காணாமல் போன விவகாரத்தில் அவர்களின் பங்களிப்பு இருக்கலாம்' என்றும்,  'காவல்துறை அவரை கடத்தி இருக்கலாம்' என்கிற ரீதியிலும் பரபரப்பு புகார்கள் முன்வைக்கப்பட்டன. 

இதற்கிடையில், போராட்டக் களங்களில் முகிலனோடு பயணித்த பெண் ஒருவர் குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் அவர் மீது பாலியல் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, முகிலன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, புகார் கொடுத்த அந்தப் பெண்ணிடம் பேச பலமுறை முயன்றோம். நம் அழைப்பை அவர் ஏற்கவே இல்லை.

குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பேசினோம்.``உண்மைதான், அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் முகிலன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மற்றபடி, எந்த விஷயத்தையும் இப்போதைக்குச் சொல்ல முடியாது’’ என்றார்கள். காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தினரோ, ``அவர் முழுக்க முழுக்க பொய்யான அவதூறு செய்திகளை முகிலன் மீது பரப்பி வருகிறார். முகிலனோடு இருந்தவரை இவர் அவர்மீது எந்தப் புகாரையும் வாசிக்கவில்லை. அவர் காணாமல் போனபிறகு, திட்டமிட்டு வேகவேகமாக அந்தப் பெண் அவதூறு பரப்புவதின் மர்மம் என்ன. அவரை இயக்குவது ஆளுங்கட்சியின் காவல்துறையும், ஸ்டெர்லைட் ஆலை தரப்பும்தான். இதற்கான முக்கிய ஆதாரம் எங்கள் கைகளில் கிடைத்திருக்கிறது. அதை விரைவில் வெளியிடுவோம்" என்றார்கள்.