`உப்புக்கல் வைரமானாலும் ராகுல் காந்தி பிரதமராக முடியாது!’ - பி.சி.அன்பழகன் | ADMK's PC Anbazhagan slams Congress

வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (31/03/2019)

கடைசி தொடர்பு:08:12 (01/04/2019)

`உப்புக்கல் வைரமானாலும் ராகுல் காந்தி பிரதமராக முடியாது!’ - பி.சி.அன்பழகன்

ப்புக்கல் வைரம் ஆனாலும், தண்ணீரில் விண்மீன்கள் நீந்தினாலும் ராகுல் பிரதமர் ஆக முடியாது என திரைப்பட இயக்குநர் நாஞ்சில் பி.சி.அன்பழகன் கருத்து தெரிவித்திருக்கிறார்.

நாஞ்சில் பி.சி.அன்பழகன்

திரைப்பட இயக்குநரும், அ.தி.மு.க. நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன் கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து இன்று பிரசாரம் தொடங்கினார். முன்னதாக நாகர்கோவிலில் பி.சி.அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``1958-ல் பி.சி.ராய் மேற்குவங்க முதல்வராக இருந்தபோது, பிரதமராக இருந்த நேரு மேற்குவங்கத்திலிருந்து பெருவாரியான பகுதியை பாகிஸ்தானுக்கு கொடுக்கப்போகிறேன் என நாடாளுமன்றத்தில் பேசினார். அதற்கு நீங்கள் என்ன வேண்டுமானாலும் தீர்மானம் போடுங்கள், என் மண்ணை விட்டுத்தர முடியாது என பி.சி.ராய் திட்டவட்டமாக தெரிவித்தார். ஒரு மாநில முதல்வருக்கு கூட அந்த மண்ணைக் காக்கும் கடமை இருக்கிறது. அதை மறந்து, 1974-ல் முதல்வராக இருந்த கருணாநிதி கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார்.

பிரதமர் மோடி தேசத்தை காப்பத்தில் வல்லவர். மோடி மீண்டும் பிரதமாரானால் தேசத்தை வலுப்படுத்திவிடுவார் என்பதால் பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் பயப்படுகின்றன. வெளிநாடுகளில் ராகுலுக்கு சொத்து இருக்கிறது. ஆனால், பிரதமரின் அம்மா சிறிய அறையில் வசித்து வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினரை மட்டும் அல்ல பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் என்பதை மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும். பிரதமர் மோடி தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுகிறார். உப்புக்கல் வைரம் ஆனாலும், தண்ணீரில் விண்மீன்கள் நீந்தினாலும் ராகுல் பிரதமர் ஆக முடியாது.

நாஞ்சில் பி.சி.அன்பழகன்

கன்னியாகுமரி காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமாரை விசிட்டிங் கார்டு கொடுத்தால்தான் பார்க்க முடியும். அவரை பாமரன் பார்க்க முடியாது. பாமரன் பார்க்க முடிபவர்தான் நாடாளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டும். எனவே, கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க. குடத்தில் இருக்கும் தண்ணீர் போன்றது. அதில் இருந்து ஒரு கப் தண்ணீர் எடுக்கப்பட்டதால் எந்த சேதாரமும் ஏற்படாது. ஒரு கப் தண்ணீர் போன்றதுதான் தினகரன் அணி.

நடிகர் ராதாரவி நடிகை நயன்தாராவை தவறாகப் பேசியது தவறுதான். எல்லா சங்கங்களும் ஒற்றுமையாக இருந்தால் சினிமாவில் பொற்காலம் ஏற்படும். நடிகை நயன்தாரா கண்ணில் தூசி விழுந்தால் தி.மு.க. தலைவர் ஸ்டாலினும், அவரது மகனும் அளவுக்கு அதிகமாக துடித்துவிடுகிறார்கள். தேர்தல் சமயத்தில் மட்டும் நடிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்" என்றார்.