`ஆயிரம் கோடியில் அரசியல் திட்டம்; சுயேச்சைகளைக் களமிறக்கியுள்ளேன்' - அனுபூதி சாமியார் | Anuboothi Samajam, who has Contest the Independent candidates in this election

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:26 (01/04/2019)

`ஆயிரம் கோடியில் அரசியல் திட்டம்; சுயேச்சைகளைக் களமிறக்கியுள்ளேன்' - அனுபூதி சாமியார்

உங்கள் ஊரில் சிதிலமடைந்து கிடைக்கும் ஆலயங்கள்... பூஜைகள் நடக்காத புதர் மண்டிய கோயில்களைக் குறிப்பாக  ‘சிதிலமடைந்த சிவாலயங்களைப் புதுப்பித்துக் கும்பாபிஷேகம் செய்துகொடுக்கிறோம்’ என்று சொல்லி, ‘சதுரங்க வேட்டை’ திரைப்பட பாணியில் மெகா வசூல் நடத்திய   அனுபூதி சமாஜம் அமைப்பை நடத்தி வரும் அனுபூதி மகான் சுவாமி நந்தீஷா எனும் நந்தகுமாரின் அடுத்த திட்டத்தை தொடங்கியுள்ளார்.

அனுபூதி சமாஜம்

அதுதான்  திருவாகிய நான் – மிஸ்டர் ஐ திட்டம். அதில் அனுபூதி நந்திஷா,  திருவாகிய நான் ஒரு தேசிய தலைவன்! திருவாகிய நான் உங்களில் ஒருவன்! திருவாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, நாடு, உயர்வு, தாழ்வு, அற்ற ஒரு ஞானமுள்ள தலைவன்! இறையாண்மையைக் காக்க பிறந்த இறை தூதுவர்! வேதநாயகன்!, ஆட்சி, அதிகார வர்க்கத்தின் வழிகாட்டியாக இருக்கும் ராஜரிஷி! கடைசியாக நவீன இந்தியாவின் பயாஸ் (BIOS- Basic Input Output System)!,  சமுதாய சீர்கேடுகளை சரி செய்யும் ஆன்டி வைரஸ்.! என டிசைன் டிசைனான வாசகங்களுடன்  6 கோடி வாக்காளர்கள் கொண்ட தமிழகத்தின் தலைவனாகப்போவது உங்களில் யார் என்று தமிழகம் முழுவதும் 234 சட்டமன்ற தொகுதி வாரியாக விண்ணப்பங்கள் வரவேற்று, சுமார் 1000 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை செயல்படுத்தப் போவதாக அழைப்பு விடுத்த அனுபூதி, தமிழகம் முழுவதும் திருவாகிய நான் எனும் திட்டத்தின் கீழ் சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளதாகக் கூறுகிறார்.

நந்தகுமார்

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``ஒரு விரல் புரட்சி செய்வோம், ஜனநாயகம் பாதுகாப்போம் என்கிற முழக்கத்துடன், வரும் 18-ம் தேதி நடக்க உள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், கடலூர், விருதுநகர், தென்காசி தொகுதிகளில் பேனா முள் சின்னத்திலும், மத்திய சென்னையில் காலிபிளவர் சின்னத்திலும், திருவாரூர் இடைத்தேர்தலில் மைக் சின்னம் உள்ளிட்ட பல தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளதாகக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ``மக்களின் அரசியல் உணர்வுகளைப் பாதுகாக்கவும், மக்களின் உரிமைகளை மீட்கவும் திருவாகிய நான் மிஸ்டர் ஐ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் தேர்தல் அங்கீகாரம் பெற்ற சுயேச்சை வேட்பாளர்களாகக் களமிறங்குகிறார்கள். 100 சதவிகிதம் வாக்களிக்கவும், தேர்தலில் முறைகேடுகள் நடக்காத வகையில் ஜனநாயகத்தைக் காக்கவும், நாங்கள் வேட்பாளர்களைக் களமிறக்கி உள்ளோம். தேர்தல் நல்ல முறையில் நடக்க வேண்டும் என்பதற்காக இன்று முதல் தேர்தல் நடக்கும்வரை அன்னம் தண்ணி இல்லாமல் விரதம் இருக்கப் போகிறேன். இந்தத் தேர்தல் என்பது நமக்கான தைப் பொங்கலைப் போல, புதியன புகுதல் பழையன கழிதல் என்பதுபோல பழைமைவாதிகளை கழித்துவிட்டு, மாற்றம் காண மக்கள் பேராதரவுடன் எங்கள் வேட்பாளர்கள் களம் காணுகிறார்கள்” என்றார்.

அடுத்து என்ன திட்டத்தோடு இருக்கிறாரோ என்கிறார்கள் அனுபூதி ஆதரவாளர்கள்.