`மண்புழுபோல் நானும் விவசாயிகளின் நண்பன்!’ - பிரசாரத்தில் நெகிழ்ந்த எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy election campaign in thanjavur

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:27 (01/04/2019)

`மண்புழுபோல் நானும் விவசாயிகளின் நண்பன்!’ - பிரசாரத்தில் நெகிழ்ந்த எடப்பாடி பழனிசாமி

`தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. அதை நிறைவேற்ற முடியாது என ஸ்டாலினுக்குத் தெரியும். ஆனால், மக்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளைத் தருகிறார். பொய் சொல்வதற்கான நோபால் பரிசை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்’ என தஞ்சாவூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க  வேட்பாளர் காந்தி, கூட்டணிக் கட்சியான த.மா.கா-வின் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் நடராஜன் ஆகியோரை ஆதரித்து தஞ்சாவூர் மற்றும் மாவட்டத்தின் பல இடங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார்.

பிரசாரத்தில் அவர் பேசுகையில், `மத்தியில் நிலையான ஆட்சி இருந்தால்தான் நம் நாடு பாதுகாப்பாக இருக்கும். அதற்கு மத்தியில் உறுதியான பிரதமர் வேண்டும். அப்படிப்பட்ட திறமையான, தகுதி வாய்ந்த பிரதமர் நரேந்திர மோடி. அவர் மீண்டும் பிரதமராக  வேண்டும். 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் ஏன் நடக்கிறது என உங்களுக்குத் தெரியும். சில துரோகிகளால்தான் இடைத்தேர்தல் வந்தது. இங்கு அ.தி.மு.க வேட்பாளர்களை வெற்றிபெற வைத்து அந்தத் துரோகிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும்.  

எடப்பாடி பழனிசாமி

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் சொல்கிறார், `முதல்வர் போகிற இடமெல்லாம் கூட்டமில்லை’ என்று. இந்த வெயிலையும் பொருட்படுத்தாமல் எவ்வளவு கூட்டம் வந்துள்ளது என்பதையும், இங்கு ஒலிக்கும் சத்தம், ஸ்டாலின் காது சவ்வு கிழியும் வரை ஒலிக்க வேண்டும். என்னை மண்புழு என்கிறார் ஸ்டாலின், மண்புழு விவசாயிகளின் நண்பன். அதுபோல் நானும் விவசாயிகளின்  நண்பனாக இருக்கிறேன். ஆனால், ஸ்டாலின் ஒரு வைரஸ் கிருமி மாதிரி. செடிக்கு எப்படி பூச்சிக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்துவோமோ, அதே போல் ஸ்டாலினுக்கு மருந்து தெளித்து இந்தத் தேர்தலோடு அவரது சகாப்தம் முடிவுக்கு வர அ.தி.மு.க-வுக்கு வாக்களிக்க வேண்டும்.

ஸ்டாலினுக்கு தேர்தல் ஜுரம் வந்து, என்ன பேசுவது எனத் தெரியாமல் பேசி வருகிறார். இந்தியாவிலேயே எல்லா துறைகளிலும் சிறந்து விளங்கி விருதுகளைப் பெற்றது தமிழகம்தான். எங்களுக்கு நிர்வாகம் செய்யத் தெரியவில்லை என எப்படிக் கூறலாம். ஊழல் நிறைந்ததாக ஸ்டாலின் குறை கூறுகிறார். ஊழலுக்காக கலைக்கப்பட்டது தி.மு.க., ஆட்சிதான். மக்களை மதிக்கத் தெரிய வேண்டும். அவர்களது மனது புண்படும்படி ஸ்டாலின் பேச வேண்டாம். பொங்கல் பரிசாக ஏழைகளுக்கு ரூ.1000 கொடுத்தோம், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2,000 கொடுத்தோம். ஆனால், திமுக-வினர் அதைத் தடுத்தார்கள். ஏழை மக்களுக்கு கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது?

எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் பிரசாரம்

எந்த ஆட்சியாக இருந்தாலும் மக்களின் திட்டங்களைத் தடுக்கக் கூடாது. அனைத்து திட்டங்களையும் இந்த அரசு நிறைவேற்றி வருகிறது. ஆனால், அப்படிப்பட்ட எண்ணம் தி.மு.க-விடம் கிடையாது. தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை மக்களை ஏமாற்றும் வகையில் உள்ளது. அதை நிறைவேற்ற முடியாது என ஸ்டாலினுக்குத் தெரியும். ஆனால், மக்களை ஏமாற்றும் பொய்யான வாக்குறுதிகளை தந்து வருகிறார்கள். பொய் சொல்வதற்கான நோபால் பரிசை ஸ்டாலினுக்கு கொடுக்கலாம்’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க