ஒரத்தநாடு பிரசாரத்தில் முதல்வர் மீது செருப்பு வீசிய அ.ம.மு.க தொண்டர்! - மறைக்க முயன்ற வைத்திலிங்கம் | Chappal hurls towards EPS in Orathanadu election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 10:30 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:27 (01/04/2019)

ஒரத்தநாடு பிரசாரத்தில் முதல்வர் மீது செருப்பு வீசிய அ.ம.மு.க தொண்டர்! - மறைக்க முயன்ற வைத்திலிங்கம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒரத்தநாட்டில் பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போது, கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர் அவர் மீது செருப்பை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

முதல்வர் பிரசாரத்தில் செருப்பு வீச்சு

தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் காந்தி, கூட்டணிக் கட்சியான த.மா.கா வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் ஆகியோருக்கு வாக்குகள் சேகரித்து தஞ்சாவூரில் பல பகுதிகளில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அதன் பிறகு இரவு சுமார் 8.45 மணியளவில் ஒரத்தநாடு பேருந்து நிலையத்தில் பிரசாரம் செய்தார். 

பிரசார வேனின் மேல்பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வேட்பாளர் நடராஜன், அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் ஆகியோர் நின்றுகொண்டிருந்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசின் சாதனைகளைச் சொல்லி தா.மா.கவுக்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் வாக்களிக்குமாறு பேசிக்கொண்டிருந்தார். அப்போது வேனின் பக்கவாட்டில் இருந்து முதல்வரை நோக்கி மர்ம நபர் ஒருவர் செருப்பை வீசினார். நல்ல வேளையாக செருப்பு முதல்வர் மேல்படாமல் அவரின் பின்புறம் வேனின் மேற்பகுதியில் விழுந்து அப்படியே கிடந்தது. இதை வைத்திலிங்கத்திடம் ஒருவர் தெரிவிக்க, அதிர்ச்சியடைந்த அவர் முதல்வர் செருப்பை பார்த்து விடக்கூடாது என மறைக்க முயற்சி செய்தார். இருப்பினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதைப் பார்த்துவிட்டதாகத் தெரிகிறது.

எடப்பாடி பழனிசாமி

இதனால் எடப்பாடி பழனிசாமி கடும் கோபம் அடைந்து, உடனே பேச்சை முடித்துக்கொண்டு சென்றதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு செருப்பு வீசிய மர்ம நபரை அ.தி.மு.க-வினர் பிடித்துவிட்டனர். அந்த நபரை வைத்திலிங்கத்தின் மகன் பிரபு கடுமையாகத் தாக்கியதாகச் சொல்கிறார்கள். இதில் அவர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து விபரமறிந்தவர்களிடம் விசாரித்தோம். `கஜா புயல் சமயத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை செங்கோட்டையன் உட்பட 4 அமைச்சர்கள் பார்வையிட வந்தனர். அப்போது வைந்திலிங்கத்தின் சொந்த ஊரான தெலுங்கன் குடிகாட்டில் சாலைமறியல் செய்து அமைச்சர்களை மக்கள் முற்றுகையிட்டனர். சொந்த ஊரிலேயே இப்படிச் செய்கிறார்களே என கடும் கோபம் கொண்ட வைத்திலிங்கம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கடுமையாகப் பேசினார்.

எடப்பாடி பழனிசாமி

அதேபோல் நேற்று முதல்வர் மீது செருப்பு வீசப்பட்டிருக்கிறது. ஒரத்தநாடு வைத்திலிங்கத்தின் சொந்தத் தொகுதி. தனது சொந்தத் தொகுதியில் செருப்பு வீச்சு சம்பவம்  நடந்துவிட்டதால் அவர் கடும் கோபம் அடைந்து விட்டார். இதற்குக் காரணமான நபர் அ.ம.மு.கவைச் சேர்ந்தவரா, இல்லை, குடி போதையில் இதுபோல் செய்துவிட்டாரா எனத் தெரியவில்லை. மேலும், செருப்பு வீசிய மர்ம நபரை உடனேயே பிடித்துவிட்டனர். அவரை வேறு இடத்துக்கு கொண்டு போய் கடுமையாகத் தாக்கியுள்ளனர். காவல்துறையினருக்குத்தான் இதனால் பெரும் டென்ஷன். பிடிபட்ட அந்த நபரை காவல்துறையினர் மீட்டுக் கொண்டு வருவதற்கே பெரும் பாடாகி விட்டது. அவரை ஒரத்தநாடு காவல் நிலையத்தில் வைத்துள்ளதாகத் தெரிகிறது. செருப்பு வீசியதற்கு என்ன காரணம் என்றும் அவர் கைது செய்யப்பட்டுள்ளது குறித்தும் முறையாகக் காவல்துறையினர் இன்று அறிவிக்க வாய்ப்பு இருக்கிறது’’ என்றனர்.

இந்த சம்பவம் குறித்து அ.தி.மு.க நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ``உப்புண்டார்பட்டியைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர்தான் செருப்பை வீசியுள்ளார். இவர் தினகரன் கட்சியில் இருக்கிறார். அவரை உடனே போலீஸார் பிடித்து காவல்நிலையத்திற்குக் கொண்டுசென்று விட்டனர். நாங்கள் அவரை அடிக்கவில்லை’’ என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க