`நாங்க கடனைத் தள்ளுபடி செய்கிறோம்...நீங்க தம்பிதுரையைத் தள்ளுபடி செய்யுங்கள்!’ - ஜோதிமணி பிரசாரம் | Karur Congress candidate Jothimani slams ADMK's Thambidurai in election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:28 (01/04/2019)

`நாங்க கடனைத் தள்ளுபடி செய்கிறோம்...நீங்க தம்பிதுரையைத் தள்ளுபடி செய்யுங்கள்!’ - ஜோதிமணி பிரசாரம்

``நாங்கள் விவசாயக் கடனையும், கல்விக் கடனையும் தள்ளுபடி செய்வதாக கூறுகிறோம். அதேபோல, நீங்களும் இந்தத் தேர்தலில் தம்பிதுரையை தள்ளுபடி செய்ய வேண்டும்" என்று தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வித்தியாசமாகப் பேசி வாக்குகள் சேகரித்தார்.

ஜோதிமணி பிரசாரம்

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட கரூர் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் வரும் வேலாயுதம்பாளையம், கட்டிப்பாளையம், வேட்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிரசாரத்தின்போது ஜோதிமணி பொதுமக்களிடம் பேசுகையில்,``வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் நீங்கள், 'என்ன செய்ய உள்ளீர்கள்?' என்பதைக் கேட்க வேண்டும். ஏற்கெனவே 5 ஆண்டுகள் பதவி வகித்த தம்பிதுரையிடம், `என்ன செய்தீர்கள்?' எனக் கேளுங்கள். இல்லாவிட்டால், இப்படியே நின்றுகொண்டே இருக்க வேண்டியதுதான்.

ஜோதிமணி பிரசாரம்...

தம்பிதுரை பத்தாண்டுகள் கரூர் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். இந்தப் பகுதியில் உள்ள அ.தி.மு.க-வின் ஊராட்சிச் செயலாளரிடம், அதாவது தம்பிதுரையின் கைப்பேசி எண் உள்ளதா, அ.தி.மு.க-வில் உள்ள மற்ற உறுப்பினர்களிடமாவது எம்.பியின் கைப்பேசியின் உள்ளதா. அ.தி.மு.க கட்சியினரிடமே தொடர்பில்லாமல், தம்பிதுரையை சந்திக்க முடியாத நிலை உள்ளபோது, எப்படி சாதாரண பொதுமக்கள் அவரைச் சந்திக்க முடியும். கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்கு கேட்டு வருகிறோம். செல்லும் இடமெல்லாம், `தம்பிதுரை வரவில்லை. வரவே இல்லை.. வரவே இல்லை. எதுவும் செய்யவில்லை' எனக் கூறுகிறார்கள்.

தம்பிதுரை

தற்போது பிரசாரத்துக்கு செல்லுமிடத்தில், பெண்கள் வழிமறித்து கேள்வி கேட்கும்போது, தம்பிதுரை கோபமடைந்து, 'ஓட்டு போட்டா போடுங்க. இல்லாவிட்டால் போங்க' எனப் பேசுகிறார். ஓட்டுபோட்ட மக்கள் கேள்வி கேட்கத்தான் செய்வார்கள். மக்களுக்கு ஏதேனும் செய்திருந்தால், `இதைச் செய்திருக்கிறேன், அதைச் செய்திருக்கிறேன்' என்று விளக்க வேண்டும். இல்லாவிட்டால், குறைந்தபட்சம் மக்களிடம், 'மன்னித்துக் கொள்ளுங்கள்' என்றாவது தம்பிதுரை கூற வேண்டும். ஆனால், அவர் வாக்காளர்களை கண்டபடி பேசுகிறார். அதனால், விவசாயக் கடனையும், கல்விக் கடனையும் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் தள்ளுபடி செய்கிறோம் என்று சொல்கிறோம். அதேபோல், வாக்காளராகிய நீங்களும் இந்தத் தேர்தலில் தம்பிதுரையை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என வித்தியாசமான வேண்டுகோள் விடுத்தார்.