'அன்புமணியிடமே கேள்வியா... இந்தா வாங்கிக்க!'- அ.தி.மு.க தொண்டரை வாயிலேயே அடித்த செம்மலை | semmalai MLA attacked admk cadre in dharmapuri

வெளியிடப்பட்ட நேரம்: 11:07 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:17 (01/04/2019)

'அன்புமணியிடமே கேள்வியா... இந்தா வாங்கிக்க!'- அ.தி.மு.க தொண்டரை வாயிலேயே அடித்த செம்மலை

`ஐந்து ஆண்டுகளாக எங்கே போயிருந்தீர்கள்' என்று அன்புமணியிடம் கேள்வி எழுப்பிய அ.தி.மு.க தொண்டரை செம்மலை எம்.எல்.ஏ தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அதிமுக தொண்டரை வாயிலேயே அடித்த செம்மலை

தர்மபுரி மக்களவைத் தேர்தல் பிரசாரம் நடைபெற்றபோது மேச்சேரியில் இந்த சம்பவம் நடைபெற்றது. தர்மபுரி தொகுதியில் மீண்டும் அன்புமணியே போட்டியிடுகிறார். மேச்சரி பகுதியில் நேற்று அன்புமணி வாக்கு சேகரிக்கச் சென்றார். அன்புமணியுடன் பா.ம.க தலைவர் ஜி.கே. மணி, அ.தி.மு.க எம்.எல்.ஏ செம்மலை உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.

வாக்கு சேகரிக்க வந்த அன்புமணியிடம் அ.தி.மு.க-வை சேர்ந்த தொண்டர் தங்கராஜ் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 'கடந்த முறை வெற்றி பெற்றீர்கள். இந்த 5 ஆண்டுகளாக எங்கே போனீர்கள் எட்டு வழிச் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடினார்களே. அந்தச் சமயத்தில் எங்கே சென்றீர்கள்' என்று கடும் கோபத்துடன் அன்புமணியை பார்த்துக் கேள்வி எழுப்பினார்.  

அருகில் இருந்த செம்மலை எம்.எல்.ஏ அந்தத் தொண்டரை சமாதானப்படுத்த முயன்றார். ஒரு கட்டத்தில் கோபமடைந்த செம்மலை 'கேள்வியா கேட்கிறாய்' என்றவாறே கேள்வி கேட்ட தொண்டரின் வாயிலேயே அடித்தார். இதனால், பயந்துபோன தங்கராஜ் கேள்வி கேட்பதை நிறுத்தினார்.

அன்புமணியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸார், தங்கராஜை செம்மலையிடம் இருந்து மீட்டு வெளியே கொண்டு சென்றனர். அங்கும் சிலர் தங்கராஜை தாக்கினர். பிரசாரத்தில்  இத்தகைய எதிர்ப்பை எதிர்பார்க்காத அன்புமணி , குறைவான நேரமே பேசி விட்டு இடத்தைக் காலி செய்தார். 

அன்புமணியிடம் கேள்வி கேட்ட அ.தி.மு.க தொண்டரை அந்தக் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ தாக்கியது மற்ற தொண்டர்களை வேதனைக்குள்ளாகியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க