`இது அ.தி.மு.க- தி.மு.க.வின் பாராசூட் வெடிகள்!'- புதுக்கோட்டையில் விறுவிறு விற்பனை | Election campaign active Parachute bombs are sold in Pudukottai

வெளியிடப்பட்ட நேரம்: 11:20 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:28 (01/04/2019)

`இது அ.தி.மு.க- தி.மு.க.வின் பாராசூட் வெடிகள்!'- புதுக்கோட்டையில் விறுவிறு விற்பனை

அரசியல் பிரசாரம் தற்போது சூடுபிடிக்கத் துவங்கியுள்ள நிலையில், புதுக்கோட்டையில் அரசியல் கட்சிகளின் வண்ணத்தில் விரியும் பாராசூட் வெடிகள் விற்பனை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

 அ.தி.மு.க- தி.மு.க.வின் பாராசூட் வெடிகள்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அரசியல் கட்சியினர் அந்தந்த கட்சியினரின் வேட்பாளர் தேர்வு நடைபெறும். தொடர்ந்து, அந்தக் கட்சியின் முக்கியத் தலைவர்கள் நட்சத்திரப் பேச்சாளர்கள் தமிழகம் முழுவதும் அந்தந்தத் தொகுதி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வார்கள். அப்படி பிரசாரத்துக்கு வரும் தலைவர்களை பிரமிக்க வைக்கும் வகையில், அந்தந்தப் பகுதி அரசியல் கட்சியினர் பட்டாசுகள் வெடித்து அமர்க்களப்படுத்தி விடுவார்கள். அந்த வகையில், இந்த வருடம் தற்போது, நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, புதுக்கோட்டையில் அரசியல் கட்சிகளின் வண்ணம் விரியும் பாராசூட் வெடிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாராசூட் வெடிகள், கட்சிக்கொடிகள், தோரணங்களை அதிகளவில் அரசியல் கட்சியினர் ஆர்வமுடன் வாங்கிச்செல்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வியாபாரிகளிடம் பேசினோம்,  `பாராசூட் வெடிகளுக்கு அரசியில் கட்சியினர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது, அ.தி.மு.க- தி.மு.க கட்சிகளின் வண்ணத்தில் பாராசூட் வெடிகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த வெடிகளை வெடிக்கும்போது, சத்தத்துடன் வானில் அந்தந்தக் கட்சிகளின் வண்ணத்தில் குடை வடிவிலான பாராசூட் விரியும். இந்த பாராசூட் வெடிகள் ரூ.360 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது புதுக்கோட்டையில் தமிழக முதலமைச்சர் பிரசாரம் செய்ய உள்ளதால், அ.தி.மு.க பாராசூட் வெடிகள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன. புதிதாக ஆர்டர் கொடுத்துள்ளோம்" என்றார்.