‘காட்பாடி சிமென்ட் குடோனில் சாக்குமூட்டையில் இருந்த 10 கோடி ரூபாய்!’- துரைமுருகனுக்கு சொந்தமானதா? | IT captured 10 Crore rupees Cash in Katpadi cement factory

வெளியிடப்பட்ட நேரம்: 11:42 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:29 (01/04/2019)

‘காட்பாடி சிமென்ட் குடோனில் சாக்குமூட்டையில் இருந்த 10 கோடி ரூபாய்!’- துரைமுருகனுக்கு சொந்தமானதா?

காட்பாடி அருகே தி.மு.க பிரமுகரின் சிமென்ட் குடோனில் கட்டு, கட்டாகப் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ.10 கோடி பணம் சிக்கியது. இந்தப் பணம் தி.மு.க பொருளாளர் துரைமுருகனுக்கு சொந்தமானதா? என்று வருமானவரித் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்திவருகின்றனர்.

கட்டுகட்டாக சிக்கிய ரூ.10 கோடி பணம்

தி.மு.க பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 29-ம் தேதி இரவு முதல் 30-ம் தேதி இரவு வரை காட்பாடி காந்தி நகரில் உள்ள துரைமுருகன் வீடு, கிறிஸ்டியான்பேட்டையில் உள்ள துரைமுருகனின் கிங்க்ஸ்டன் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டிலிருந்து, ரூ.10 லட்சம் ரொக்கப் பணத்தை கைப்பற்றினர். ‘‘என்னுடைய கைச் செலவுக்காக வைத்திருந்த பணம். நான் பனங்காட்டு நரி. இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன்’’ என்று துரைமுருகன் காட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், காட்பாடி அடுத்த பள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள தி.மு.க பகுதி செயலாளர் பூஞ்சோலை சீனிவாசன் சிமென்ட் குடோனில் கட்டு, கட்டாகப் பணம் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை பாதுகாப்புடன் வருமானவரித் துறை அதிகாரிகள், அந்தக் குடோனுக்கு சென்று அதிரடியாகச் சோதனை செய்தனர். அங்கு, ஏராளமான அட்டைப் பெட்டிகள் மற்றும் சாக்கு மூட்டைகளில் கட்டு, கட்டாக ரூ.10 கோடிக்கும் அதிகமான பணம் இருந்தன. அட்டைப் பெட்டிகளில், வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வார்டு வாரியாக வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்வதற்கான வார்டு பொறுப்பாளர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலும் இருந்தன.  

தி.மு.க பகுதி செயலாளர் சீனிவாசன் வீடு

இந்தப் பணம் துரைமுருகனுக்குச் சொந்தமான கிங்க்ஸ்டன் கல்லூரியிலிருந்து குடோனுக்கு வாகனங்களில் கொண்டுவந்ததாக தகவல் கிடைத்ததன் அடிப்படையில்தான் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தியிருக்கிறார்கள். அந்தப் பணத்தைக் கைப்பற்றிய வருமானவரித் துறை அதிகாரிகள், பள்ளிக்குப்பம் அருகே கீழ்மோட்டூரில் உள்ள சீனிவாசன் வீடு, அவரின் அக்காள் வீடு, வஞ்சூரில் உள்ள உறவினரின் வீடு மற்றும் துரைமுருகனின் கல்லூரி உட்பட பல்வேறு இடங்களில் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்தப் பணம் துரைமுருகனுக்குச் சொந்தமானதா, வேலூர் தொகுதி வாக்காளர்களுக்குப் பட்டுவாடா செய்யப்பட இருந்ததா என்பது குறித்து தீவிர விசாரணையும் நடத்தப்பட்டுவருகிறது. ரூ.10 கோடி சிக்கிய இந்த விவகாரத்தில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.