`கேப்டன்னா அடிக்கத்தான் செய்வாரு..!'- பிரசாரத்தில் கலகலத்த விஜயகாந்த்தின் மகன் | Vijayakanth's son election campaign in chennai

வெளியிடப்பட்ட நேரம்: 12:34 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:00 (02/04/2019)

`கேப்டன்னா அடிக்கத்தான் செய்வாரு..!'- பிரசாரத்தில் கலகலத்த விஜயகாந்த்தின் மகன்

பிரசாரத்தில் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன்

வடசென்னை தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் வாக்குசேகரித்தார். அப்போது, ``கேப்டன் ஏதார்த்தமானவர். சிரிப்புன்னா சிரிப்பு, கோபம் என்றால் கோபம். அடி என்றால் அடி'' என்று பேசினார். 

வடசென்னை தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து ஆர்.கே.நகர் பகுதியில் விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன் பேசினார். பேச்சை தொடங்கும்போது ``பேரன்பு கொண்ட பெரியவர்களே தாய்மார்களே, அன்பு கொண்ட சகோதர சகோதரிகளே, என் உயிரினின் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஆண்டவனின் அருளோடும் மக்களின் ஆதரவோடும் என் தாய் தந்தை நல்லாசியோடு மோகன்ராஜை ஆதரித்து வடசென்னைக்கு வந்துள்ளேன்" என்றார். 

 விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன்

தொடர்ந்து பேசிய அவர், ``வடசென்னை என்றாலே தனி கெத்து. வடசென்னை என ஒரு படம் வந்திருக்கிறது. வடசென்னை மக்கள் என்றாலே மாஸ். கெத்தான, மாஸான வேட்பாளர் மோகன்ராஜ். வேட்பாளர் வயதில் ஜாஸ்தி என்றாலும் மனதளவில் இளைஞர். அவரை எனக்கு நல்லா தெரியும். அண்ணனுடைய அனுபவம் ஜாஸ்தி. மோகன்ராஜ்தான் சரியான வேட்பாளர். நான் ஒரு வீடியோ பார்த்தேன். வைகோ பேசிக்கொண்டிருக்கும்போது தி.மு.க. வேட்பாளர் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த மாதிரி வேட்பாளர் இந்தத் தொகுதிக்கு வேண்டுமா. தி.மு.க. கூட்டத்தில் துரைமுருகனும் தூங்கிக் கொண்டிருப்பாருன்னு அப்பா சொல்லியிருக்காங்க. இதனால் தி.மு.க.  தூங்கிகொண்டிருக்கிறதுபோல. அ.தி.மு.க கூட்டணி மெகா கூட்டணி. அம்மா, அய்யா ஆதரவு பெற்ற கூட்டணி. 

தங்கபாலு ஆதரவு பெற்ற கூட்டணி. சாரி.... என்.ஆர்.தனபாலன் ஆதரவு பெற்ற கூட்டணி. நம்ம தலைவர் கேப்டன் ஆதரவு பெற்ற வேட்பாளர் மோகன்ராஜ். இந்தக் கூட்டணியைத் தாண்டி வாக்கு கேட்கவே கூடாது. இந்த மெகா கூட்டணியைத் தாண்டி எதுவும் பண்ண முடியாது. 

விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன்

இந்தத் தொகுதி எம்.எல்.ஏ. பொய் வாக்குறுதி கொடுத்து ஜெயித்தவர். நான் முன்பு பேசினதற்கு அவர் பதில் சொன்னாரு. நீங்கள் எனக்கு அரசியல் சீனியர். காலேஜில்ல சீனியர்ஸ் ராக்கிங் பண்ணத்தான் செய்வார்கள். அன்பாக சொன்னால் கேட்போம். அதுவே அடக்குமுறையில் சொன்னால் என் ரத்தமும் அதுவல்ல, என் கட்சியும் அதுவல்ல. ரொம்ப பேச வேண்டாம். 

உங்கள் (தினகரன்) சின்னம் வேண்டும் என்றாலே கிஃப்ட் பாக்ஸாக இருக்கலாம். நான் ஒரு கிஃப்ட் பாக்ஸை வாட்ஸ்அப்பில் அனுப்பிவிடட்டுமா உண்மையைச் சொன்னால் உங்களுக்குத்தான் கேவலம். அரசியல் நாகரிகம் கருதி பேச மாட்டேன். மோகன்ராஜ் பொய் வாக்குறுதி கொடுக்க மாட்டார். கேப்டனின் வளர்ப்பு அப்படி. மக்கள் மக்கள் என்றுதான் கேப்டன் உழைத்தார். தினரகரன் வெற்றி பெற்ற பிறகு இந்தத் தொகுதிக்கு வந்தாரா.. அந்த கிஃப்ட் பாக்ஸை திறந்தால் காலிப் பெட்டியாகக் கூட இருக்கலாம். ஜெயித்ததும் சென்றுவிட்டார். பதிவு செய்யப்படாத ஒரு கட்சியை வைத்துக்கொண்டு மாயை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். மாயை  இங்கு நடக்காது. 

 விஜயகாந்த்தின் மகன் விஜயபிரபாகரன்

கேப்டன்னா எதார்த்தமாக இருப்பார். சிரிப்புன்னா சிரிப்பு. கோபம்ன்னா கோபம். அடின்னா அடி அதுதான் கேப்டன். கேப்டன் பிரசாரத்துக்கு வருவார். சூப்பரா ரெடியாகிக் கொண்டிருக்கார். கண்டிப்பாக வடசென்னைக்கு வந்து ஒரு கலக்குவார். இது மாம்பழம் சீசன். மாம்பழம் சாப்பிட்டுவிட்டு கொட்டும் முரசுக்கு ஓட்டுபோடுங்க. நாலும் நமதே, நாற்பதும் நமதே. நாளையும் நமதே. இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்பதால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். டெல்லிக்குப் போகிறோம். எது என்றாலும் மூன்று தடவை சொல்லுங்கள்"  என்று பேசினார். 

விஜயபிரபாகரன் பேசிக் கொண்டிருக்கும்போது அவருக்குப் பின்னால் நின்ற வேட்பாளர் மோகன்ராஜ், சில தகவல்களைச் சொல்லிக் கொடுத்தார். அதைக்கேட்டபடி அவரும் பேசினார். என்.ஆர்.தனபாலனின் ஆதரவு பெற்ற கூட்டணி என்று சொல்வதற்கு பதிலாக தங்கபாலு என்று கூறினார். அதைக்கவனித்த வேட்பாளர், தனபாலன் என்று சொல்லிக் கொடுத்தார். அதுபோல தினகரனை விமர்சித்தபோது பதிவு செய்யப்படாத கட்சி என்றும் சொல்லிக் கொடுத்தார். 

 விஜயபிரபாகரன் வடசென்னையில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது பா.ம.க., ச.ம.க. ஆகிய கட்சிகளின் கொடிகள் அதிகளவில் தெரிந்தன. அ.தி.மு.க. சார்பில் போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று தே.மு.தி.க-வினர் குற்றம்சாட்டினர்.