`15 பேர்தான் தீயை அணைக்கிறோம், தண்ணீரில்ல!'-குன்னூர் வனத்தில் மூச்சுத்திணறலால் தவிக்கும் வீரர்கள் | Firefighters battle to control forest fire in Coonoor

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (01/04/2019)

கடைசி தொடர்பு:13:40 (01/04/2019)

`15 பேர்தான் தீயை அணைக்கிறோம், தண்ணீரில்ல!'-குன்னூர் வனத்தில் மூச்சுத்திணறலால் தவிக்கும் வீரர்கள்

நீலகிரி மாவட்டம், குன்னூர் வனப் பகுதிகளில் தொடரும் காட்டுத் தீயை அணைக்க தண்ணீர் இன்றி வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அரு‌கேயுள்ள  சரவணமலை வனப்பகுதியில்  காட்டுத்தீ

நீலகிரி மாவட்ட வனப் பகுதிகள் தற்போது கடும் வறட்சியை சந்தித்து வருகிறது. தண்ணீர் தேடி வனவிலங்குகள் தொடர்ந்து இடம் பெயர்கின்றன. ஊட்டி, குன்னூர், முதுமலை உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது காட்டுத் தீ ஏற்பட்டுவருகிறது. இந்த நிலையில் குன்னூர் அருகே சரவணமலை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவியது. இதில் 20 ஏக்கர் பரப்பளவுள்ள வனப்பகுதியில் இருந்த மரங்கள் எரிந்தன.

பற்றி எரியும் காட்டுத் தீ

இரண்டாவது நாளாக நேற்றும் தீயணைப்புத் துறையினர் 10 பேர் மற்றும் வனத்துறை ஊழியர்கள் இணைந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் ஊழியர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாலும் தீயை முழுமையாக அணைக்காமல் திரும்பினர். தீயணைப்புத் துறையினர் கூறுகையில், ``சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் தீ பரவியுள்ளது. இரண்டு நாள்களாக 15 பேர் மட்டுமே ஈடுபட்டு வருகிறோம். தொடர்ந்து புகையை சுவாசிப்பதால் அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. போதிய அளவு தண்ணீரும் இருப்பில் இல்லை. இதுவரை 12,000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தியுள்ளோம். தீ அணைந்த பாடில்லை'' என்றார்.