`எத்தனை சோதனைகளும் நடத்துங்க, வெற்றி எங்களுக்குத்தான்!'- திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டிய முத்தரசன் | CPI Tamil Nadu secretary R Mutharasan slams ADMK - BJP alliance

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:01 (02/04/2019)

`எத்தனை சோதனைகளும் நடத்துங்க, வெற்றி எங்களுக்குத்தான்!'- திருமாவளவனுக்கு ஆதரவு திரட்டிய முத்தரசன்

``மோடி ஒரு பொய்யர், உண்மை பேசாத கட்சி பா.ஜ.க. மத்திய -மாநில அரசுகள் தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. இன்னொரு முறை வாய்ப்புக்கொடுத்தால் இந்தியாவை பெரும் முதலாளிகளிடம் வித்திடுவார்கள்'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கடுமையாகக் குற்றச்சாட்டினார்.

முத்தரசன் பிரசாரம்

அரியலூர் அண்ணா சிலை அருகே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், வேட்பாளருமான தொல்.திருமாவளவனை ஆதரித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டு திருமாவளவனுக்கு வாக்கு சேகரித்தார். அவர் பேசும்போது, `தனிமனிதனுக்குப் பாதுகாப்பில்லாத நிலையே உள்ளது. தனியாக வெளியில் செல்லப் பயப்படும் நிலை உள்ளது. சமூக செயற்பாட்டாளர்கள் தனியாக வெளியில் நடமாட முடியவில்லை. முகிலன் காணாமல் போய் பல நாள்கள் ஆகிறது. இன்னமும் அரசால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அரியலூர் முத்தரசன் வாக்கு சேகரிப்பு

ஆளும் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பயத்தின் காரணமாகத்தான் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இவ்வாறு எத்தனை சோதனைகள் நடைபெற்றாலும் தி.மு.க கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில் ஏரி, குளங்கள் தூர்வாரப்பட்டு வருவதாகவும் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தமிழக முதல்வர் கூறி வருகிறார். ஆனால், அவரது சொந்த மாவட்டத்திலேயே 300 ஏக்கர் பரப்பளவிலிருந்த ஏரியைத் தூர்த்து அடுக்குமாடி கட்டடங்களைக் கட்ட அடிக்கல் நாட்டி உள்ளார் தமிழக முதல்வர்.  நாட்டின் விடுதலைக்கும், பாரதிய ஜனதா கட்சிக்கும் துளி அளவும் சம்பந்தமில்லை. மத்திய -மாநில அரசுகள் தமிழகத்தை அழித்துக்கொண்டிருக்கின்றன. இன்னொரு முறை வாய்ப்புக்கொடுத்தால் இந்தியாவை பெரும் முதலாளிகளிடம் விற்றுவிடுவார்கள். ஆனால், நாட்டின் காவலாளி என மோடி சொல்லிக்கொள்கிறார்'' என்று பேசினார்.

திருமாவளவனுக்கு ஆதரவாக முத்தரசன் பிரசாரம்

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முத்தரசன், ``2004-ல் எவ்வாறு 40-க்கு 40 என தி.மு.க கூட்டணி வெற்றி பெற்றதோ, அதேபோல் தற்போது நடைபெற உள்ள மக்களவை தேர்தலிலும் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளிலும் அமோக வெற்றிபெறும். அதேபோல இடைத்தேர்தல்களிலும் வெற்று பெறுவோம். எதிரணியினர் வெற்றி பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாகத்தான் எங்களை அவமானப்படுத்த வேண்டும் என்பதாலேயே துரைமுருகன் வீட்டில் சோதனை நடைபெற்றுள்ளது. மத்திய அரசு தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி எதிர்க்கட்சிகளைப் பலிவாங்குகிறது.

முத்தரசன் பேட்டி

பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி குறித்து பா.ஜ.க-வின் சாதனை என சொல்லப்பட்டது. சாதனை என்றால் தேர்தலில் பா.ஜ.க-வினர் ஏன் சொல்லவில்லை. ஏனென்றால் அதனால் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டது. இதேகாரணமாக லட்சக்கணக்கான மக்கள் வேலை இழந்தனர். நாடு வளர்ச்சி அடைந்துள்ளதாக மோடி கூறுகிறார். அது உண்மைதான். அவரோடு உள்ள கார்ப்பரேட்டுகள் வளர்ந்துள்ளது'' எனக் கூறினார்.