பொள்ளாச்சி பாலியல் வழக்கு சர்ச்சை - காத்திருப்போர் பட்டியலில் கோவை எஸ்.பி பாண்டியராஜன்! | Coimbatore SP Pandiyarajan transferred

வெளியிடப்பட்ட நேரம்: 12:48 (01/04/2019)

கடைசி தொடர்பு:12:52 (01/04/2019)

பொள்ளாச்சி பாலியல் வழக்கு சர்ச்சை - காத்திருப்போர் பட்டியலில் கோவை எஸ்.பி பாண்டியராஜன்!

கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக இருந்த பாண்டியராஜன் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாண்டியராஜன்

திருப்பூர் சாமளாபுரம் டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடிய பெண்ணைக் கன்னத்தில் அறைந்து மிகப்பெரிய சர்ச்சைக்குள் சிக்கியவர் ஏ.டி.எஸ்.பி பாண்டியராஜன். ஆனாலும், அடுத்தடுத்த பதவி உயர்வுகள் அவரைத் தேடிவந்தன. இதையடுத்து, கடந்த ஆண்டு கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி.யாக பாண்டியராஜன் நியமிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, பொள்ளாச்சி பாலியல் வழக்கு, துடியலூர் சிறுமி பாலியல் கொலை என்று அடுத்தடுத்து குற்றங்கள் அரங்கேறிக் கொண்டே இருக்கின்றன.

குறிப்பாக, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்டதற்கு பாண்டியராஜனுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. மேலும், அவர் அ.தி.மு.க அரசுக்குச் சாதகமாக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, பாண்டியராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது. பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது.

புதிய எஸ்.பி. சுஜித்குமார்

புதிய எஸ்.பி. சுஜித்குமார்

இந்நிலையில், பாண்டியராஜனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பாண்டியராஜன் மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் சுஜித் குமார், கோவை மாவட்ட போலீஸ் எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். பாண்டியராஜனுடன் சேர்த்து டி.எஸ்.பி ஜெயராமன் மற்றும் இன்ஸ்பெக்டர் நடேசன் ஆகியோரும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி, பொள்ளாச்சி டி.எஸ்.பி ஜெயராமன் மாற்றப்பட்டு ஊட்டி சட்டம் - ஒழுங்கு ரெக்கார்ட் டி.எஸ்.பி சிவக்குமார் பொள்ளாச்சி டி.எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, பொள்ளாச்சி கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் நடேசன் மாற்றப்பட்டு, கோவை நக்ஸல் சிறப்புப் பிரிவு, இன்ஸ்பெக்டர் வெங்கடராமன், கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.