`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு! | chennai girl mohalakshmi was selected as a chairman for Global entrepreneurs council of asia

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (01/04/2019)

கடைசி தொடர்பு:14:55 (01/04/2019)

`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' சேர்மனாக சென்னைப் பெண் தேர்வு!

கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்’ என்ற அமைப்பின் ஆசிய சேர்மனாக சென்னைப் பெண் மோகனலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த அமைப்பு தங்களுடைய பணியை இந்தியாவில் தொடங்கியதற்கு இந்திய முதலீட்டாளர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து மோகன லட்சுமியிடம் பேசினோம்.

சென்னைப் பெண்

 

`குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில் என்ற அமைப்பானது உலகம் முழுவதும் உள்ள வணிகங்களையும் வணிகர்களையும் ஒன்றிணைப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இதற்கு முன் பல்வேறு நாட்டிலும் இந்த அமைப்பு செயல்பட்டு அங்கிருக்கும் வணிகங்களை உலகளவில் கொண்டு சேர்த்துள்ளது. இந்த ஆண்டு ஆசியாவில் அமல்படுத்தப்பட்டது உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது. நான் சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைகளுக்கான பிசினஸ் தொடர்பான பாடத்திட்டத்தை உருவாக்கியிருந்தேன். அது சிங்கப்பூர் அரசின் மூலம் அங்கிருக்கும் பள்ளிகளில் பாடத்திட்டம் ஆக்கப்பட்டது. பின் கனடா நாட்டில் உள்ள பள்ளிகளிலும் பிசினஸ் தொடர்பான வழிகாட்டுதல்கள் வழங்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது இந்தியாவிலும் பிசினஸ் செய்யும் குழந்தைகளுக்கு வழிகாட்டுதல் வழங்கி வருகிறேன்.

மேலும், பின்தங்கிய நிலையில் உள்ள கிராமப்புற பெண்களுக்கான தொழில்களையும் உருவாக்கிக் கொடுத்துள்ளேன். அதன் மூலம்தான் உலகளவில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது. ஆசிய அளவில் சேர்மனாகத் தேர்வு செய்யப்பட்டாலும்.இந்திய வணிகத்தில் அதிக கவனம் செலுத்த உள்ளேன். வெளிநாட்டுப் பொருள்களை நாம் அதிகளவில் பயன்படுத்துவதுபோல் இனி நம்முடைய பொருள்களையும் சேவைகளையும் வெளிநாட்டினர் அதிக அளவில் பயன்படுத்துவதை அதிகரித்து, இந்திய வணிகத்துக்கு உயிர் கொடுக்க முடிவெடுத்துள்ளேன். இதன் முதல்கட்டமாக வருகிற ஜூன் மாதம் சென்னையில் ஆசிய அளவிலான வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளேன். இதன் மூலம் நம்முடைய சிறிய அளவிலான வணிகம்கூட உலகளவில் பிரபலமடைய வாய்ப்புகள் அதிகம். இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருள்கள் உலகளவில் விற்பனையாக எல்லாவித நடவடிக்கைகளையும் எடுக்க உள்ளேன்’’ என்கிறார் உறுதியுடன்.