ராமநாதபுரம் அருகே அமைச்சர் பிரசாரக் கூட்டத்தில் பாட்டில் வீச்சு - அ.தி.மு.க தொண்டர் மண்டை உடைப்பு! | The bottle delivery at minister's campaign meeting near Ramanathapuram; Dismemberment of the Volunteer Skull

வெளியிடப்பட்ட நேரம்: 15:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:14 (02/04/2019)

ராமநாதபுரம் அருகே அமைச்சர் பிரசாரக் கூட்டத்தில் பாட்டில் வீச்சு - அ.தி.மு.க தொண்டர் மண்டை உடைப்பு!

ராமநாதபுரம் அருகே அமைச்சர் மணிகண்டன் தேர்தல் பிரசாரத்தில் பாட்டில் வீச்சு. காயமடைந்த தொண்டர் ராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காயம் அடைந்தவருக்குச் சிகிச்சை அளிப்பதில் மருத்துவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பிரசார கூட்டத்தில் பாட்டில் வீச்சு. காயமடைந்த அ.தி.மு.க தொண்டர்

ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளராக முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதையொட்டி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அமைச்சர் மணிகண்டன், தற்போதைய எம்.பி அன்வர்ராஜா உள்ளிட்ட அ.தி.மு.க-வினரும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்புல்லாணி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியபட்டினம் பகுதியில் அமைச்சர் மணிகண்டன் மற்றும் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இன்று பிரசாரம் செய்யச் சென்றுள்ளனர். அங்குள்ள வீதி ஒன்றில் வாக்குகேட்டு பேசிக்கொண்டிருந்தபோது பா.ஜ.க தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். அப்போது பிரசார வாகனத்தை நோக்கி பீர் பாட்டில் வீசப்பட்டுள்ளது.

இதில் பிரசாரக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த திருப்புல்லாணி ஒன்றிய அ.தி.மு.க தலைவர் உடையத்தேவர் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ராமநாதபுரம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அமைச்சர் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் பாட்டில் வீசப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அமைச்சர் பங்கேற்ற கூட்டத்தில் பாட்டில் வீசிய மர்ம நபர் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அ.தி.மு.க பிரமுகருக்குச் சிகிச்சை அளிப்பது தொடர்பாக அரசு மருத்துவர்கள் ஆனந்த் - மனோஜ்குமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நோயாளிகள் முன்னிலையில் இருவரும் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசிக்கொண்டனர். இதையடுத்து, அங்கு வந்த மற்ற மருத்துவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.