`இதைப் பெரிசு பண்ணாதீங்க!'- 3 வயதுக் குழந்தைக்கு நடந்த கொடுமையை மறைத்த தாயார்... சிக்க வைத்த டாக்டர் | sexual abuse of a child by mom's lover, caught arrest

வெளியிடப்பட்ட நேரம்: 15:46 (01/04/2019)

கடைசி தொடர்பு:15:46 (01/04/2019)

`இதைப் பெரிசு பண்ணாதீங்க!'- 3 வயதுக் குழந்தைக்கு நடந்த கொடுமையை மறைத்த தாயார்... சிக்க வைத்த டாக்டர்

பாலியல் வன்கொடுமை


திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 வயதுப் பெண் குழந்தைக்குப் பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அவரின் அம்மா உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்தக் குடும்பத்தின் தலைவர், பெட்ரோல் பங்கில் வேலை பார்த்துவருகிறார். இந்தநிலையில் குழந்தையுடன் அவரின் அம்மா கடந்த 10 நாள்களுக்கு முன் மாயமாகிவிட்டார். மனைவியையும் குழந்தையையும் காணவில்லை என போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் இருவரையும் தேடிவந்தனர். 

இதையடுத்து சில தினங்களுக்கு முன் குழந்தையுடன் அந்தப் பெண் வீட்டுக்கு வந்தார். அவரிடம் விசாரித்தபோது ஆந்திராவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதாகக் கூறினார். இந்தநிலையில் குழந்தைக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த டாக்டர் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து குழந்தையின் பெற்றோரிடம் டாக்டர் விசாரித்தார். அப்போது குழந்தையின் அம்மா முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்தார். இருப்பினும் டாக்டர் உண்மையைக் கண்டுபிடித்தார். 

இந்தக் குழந்தையை ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இதனால் குழந்தையின் அப்பா அதிர்ச்சியடைந்தார். குழந்தையின் அம்மாவோ, இந்தச் சம்பவத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால், டாக்டரோ, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

 பாலியல் வன்கொடுமை

குழந்தையின் அம்மாவிடம் போலீஸார் விசாரித்தனர். முதலில் எந்தத் தகவலையும் சொல்ல மறுத்தார். இருப்பினும் போலீஸார், அந்தப் பெண்ணின் செல்போன் எண்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆந்திராவில் அவரிடம் பேசிய இளைஞர்கள் குறித்த தகவல் தெரியவந்தது. அந்த இளைஞர்கள் குறித்து விசாரித்தபோது குழந்தையின் அம்மா எந்தவித தகவல்களையும் தெரிவிக்கவில்லை. தொடர்ந்து குழந்தையின் அம்மாவின் செல்போனிலிருந்தே அந்த இளைஞர்களை போலீஸார் தொடர்பு கொண்டபோதுதான் முழுவிவரம் தெரியவந்தது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``குழந்தையுடன் மாயமான அந்தப் பெண் ஆந்திராவில் உள்ள சிவா மற்றும் அவரின் நண்பர் மணி ஆகியோரைச் சந்தித்துள்ளார். அங்கு 10 நாள்களாக தங்கியுள்ளார். குழந்தையின் அம்மாவுடன் சிவாவுக்கும் மணிக்கும் நட்பு இருந்துவந்துள்ளது. ஆந்திராவில் தங்கியிருந்த அந்தப் பெண்ணின் அனுமதியோடு 3 வயது குழந்தையை சிவாவும் மணியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதை எங்களின் விசாரணையில் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இருவரையும் கைது செய்தோம். அவர்கள் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளோம். தொடர்ந்து நடந்த விசாரணையில் இந்தச் சம்பவத்தில் குழந்தையின் அம்மாவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனால் அவரையும் கைது செய்துள்ளோம். தற்போது சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம்" என்றனர். 

பாலியல்

குழந்தையின் தந்தையும் அவரின் உறவினர்களும் இந்தச் சம்பவத்தையடுத்து அந்தப் பெண் மீது கடும் ஆத்திரத்தில் உள்ளனர். குழந்தையின் அம்மாவிடம் ஏன் இப்படிச் செய்தாய் என்று கேட்டதற்கு அவரால் எந்த பதிலும் சொல்லவில்லை. அமைதியாக இருந்துள்ளார். கைதான மூன்று பேரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

சமீபகாலமாக பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். துடியலூரில் சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சந்தோஷ்குமார் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சுவடு மறைவதற்குள் கும்மிடிப்பூண்டியில் இன்னொரு சம்பவம் நடந்துள்ளது. எனவே, பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதைத் தடுக்க கைதானவர்களுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் முன்வைத்துள்ளனர்.