ஜெயலலிதாவை எதிர்த்த சிம்லா முத்துச்சோழனை மறந்துவிட்டதா தி.மு.க... விலக முடிவு? | simla muthuchozhan decide to left dmk party?

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:07 (02/04/2019)

ஜெயலலிதாவை எதிர்த்த சிம்லா முத்துச்சோழனை மறந்துவிட்டதா தி.மு.க... விலக முடிவு?

தி.மு.க-வில் இருந்து சிம்லா முத்துச்சோழன் விலகும் முடிவில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவர், ஆர்.கே. நகரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டவர்.

திமுகவில் இருந்து விலகும் சிம்லா முத்துச்சோழன்

தி.மு.க-வில் உள்ள முன்னாள் பெண் அமைச்சர்களில் எஸ்.பி.சற்குணபாண்டியனும் ஒருவர். இவரின் மருமகள்தான் சிம்லா முத்துச்சோழன். ஆர்.கே. நகரில் சற்குணபாண்டியன் பலமுறை வெற்றிபெற்றுள்ளார். மாமியாருக்கு இந்தத் தொகுதியில் உள்ள செல்வாக்கு, ஜெயலலிதாவை வீழ்த்த பலமாக இருக்கும் என்று கணித்துத்தான் அவரை எதிர்த்து சிம்லா முத்துச்சோழன் நிறுத்தப்பட்டார். ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்டதால், சிம்லா முத்துச்சோழன் தமிழகம் முழுவதும் பிரபலமானார். வழக்கமாகப் போட்டியிடும் இடங்களில் இமாலய வெற்றிபெறும் ஜெயலலிதா,  வெறும் 30,000 ஓட்டு வித்தியாசத்தில்தான்  சிம்லா முத்துச்சோழனை வெல்ல முடிந்தது. 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இடைத்தேர்தலில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று சிம்லா நினைத்தார். மாறாக, மருதுகணேசுக்கு வழங்கப்பட்டது. இந்த நாடாளுமன்றத் தேர்தலில், வடசென்னையில் போட்டியிட தி.மு.க-வில் சிம்லா முத்துச்சோழன் விருப்ப மனு அளித்திருந்தார். ஆற்காடு வீராசாமியின் மகன் கலாநிதிக்கு சீட் கொடுக்கப்பட்டது. சிம்லா முத்துச்சோழனுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. தேர்தல் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இதனால், கட்சித் தலைமை தன்னை அவமதித்ததாக சிம்லா முத்துச்சோழன் வருத்தத்தில் இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். 

சற்குணபாண்டியன் குடும்பம், பாரம்பர்ய தி.மு.க குடும்பம். இந்தக் குடும்பத்திலிருந்து ஒருவர் விலகி மாற்றுக் கட்சியில் இணைந்தால், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும். இதனால், சிம்லா முத்துச்சோழனை சமாதானப்படுத்தும் வேலையில் தி.மு.க அனுதாபிகள் இறங்கியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க