`உங்கள் ஒரே வாக்கு இரண்டு அரசாங்கத்தை மாற்றிவிடும்!' - மாணிக்கம் தாகூர் பிரசாரம் | vote will Change the Government - Manickam Tagore

வெளியிடப்பட்ட நேரம்: 17:45 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:08 (02/04/2019)

`உங்கள் ஒரே வாக்கு இரண்டு அரசாங்கத்தை மாற்றிவிடும்!' - மாணிக்கம் தாகூர் பிரசாரம்

மாணிக்கம் தாகூர்

``அ.தி.மு.க கூட்டணிக் கட்சியினர், பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால், எனக்கு ஓட்டு போடுங்கள்'' என காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் பிரசாரம் மேற்கொண்டார்.

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், தி.மு.க, கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் போட்டியிடுகிறார். திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லுப்பட்டி, பேரையூர், வன்னிவேலம்பட்டி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில், இன்று அவர் கூட்டணிக் கட்சியினருடன் பொதுமக்களைச் சந்தித்து பிரசாரம் மேற்கொண்டார்.

மாணிக்கம்தாகூர்

அப்போது அவர், ``இந்தத் தேர்தலில் நீங்கள் அளிக்கும் ஒரே வாக்கால் இரண்டு அரசாங்கத்தை மாற்றிவிடலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாளொன்றுக்கு 300 ரூபாய் சம்பளத்தில் 100 நாள் வேலை கிடைக்கும். கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயக்கடன் தள்ளுபடி செய்யப்படும். ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.6000 வழங்கப்படும். அ.தி.மு.க கூட்டணி கட்சிகள் ஓட்டுக்குப் பணம் கொடுத்தால் வாங்கிக்கொள்ளுங்கள். பணம் தராவிட்டாலும் அவர்களிடம் கேட்டு வாங்கிக்கொள்ளுங்கள்.

இது அவர்கள் உழைத்து சம்பாதித்த பணம் இல்லை. உங்கள் பணம்தான். அதனால், அவர்களிடம் பணம் வாங்கிக்கொள்ளுங்கள். ஆனால் ஓட்டு எனக்கு போடுங்கள். இதற்காக சாமி கோபித்துக்கொள்ளாது'' என்று தெரிவித்தார்.