'அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான தேர்தல் ஆணையம்' - சுயேச்சை வேட்பாளர் ஆதங்கம் | election commission supporting to political parties - independent candidate Complaint

வெளியிடப்பட்ட நேரம்: 19:55 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:09 (02/04/2019)

'அரசியல் கட்சிகளுக்கு ஆதரவான தேர்தல் ஆணையம்' - சுயேச்சை வேட்பாளர் ஆதங்கம்

அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் செயல்படுவதாகக் கூறி, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே சுயேச்சை வேட்பாளர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

சுயேட்சை வேட்பாளர்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தைச் சேர்ந்தவர், வள்ளிநாயகம். இவர், மக்கள் சட்ட இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் பேனா முனை சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில், சட்டமன்றம் மற்றும் மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாகத் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்படுகிறது; வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே வள்ளிநாயகம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

இதுகுறித்து வள்ளிநாயகம் பேசுகையில்,  “தமிழ்நாடு முழுவதும் சுயேச்சை  வேட்பாளர்கள் ஒன்றிணைந்து, திருவாகிய நான் என்ற தலைப்பின் கீழ் போட்டியிடுகிறோம். பொதுச்சின்னம் கேட்டும் கிடைக்கவில்லை. சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 3 நாள்களாகியும், இதுவரை வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள சுவீதா என்ற அப்ளிகேஷனில் எங்கள் விவரம் ஏற்றப்பட்டால்தான் பிரசாரத்துக்கு அனுமதி வாங்க முடியும். ஆனால், உண்ணாவிரதம் தொடங்கி 7 மணி நேரத்துக்குப் பின்புதான் என்னுடைய பெயரை ஏற்றக்கூடிய சாதாரண பணிகூட நடந்துள்ளது.

வேட்பாளர்

 

சட்டமன்ற, மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரின் முழுத் தகவலையும் ஊடகங்கள் வாயிலாகத் தேர்தல் நடத்தும் அலுவலர் வெளியிட வேண்டும். வாக்காளர்களுக்குப் பணம், பொருள் விநியோகம் தொடர்பாக வேட்பாளர் அல்லது வாக்காளர் மீது புகார் பதிவு செய்யப்பட்டால், அதை சட்டவிரோதமாகக் கருதி, அவர்களை உடனடியாகத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும். டெபாசிட் தொகைக்கு மேல் ஒரு ரூபாய்கூட செலவிட அனுமதிக்கக் கூடாது. சுவீதா அப்ளிகேஷனில் பெயரை இணைத்தால்தான் பிரச்சாரத்துக்கு கூட அனுமதி வாங்க முடியும். இப்போது என்னுடைய விவரம் சேர்க்கப்பட்டால், பிரசாரம் செய்வதற்கு குறைந்தது இன்னும் இரண்டு நாள்கள் ஆகும். ஆனால், அரசியல் கட்சிகள் மட்டும் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டன. இது விதிமீறல்தான். எனவே, தேர்தல் நடைமுறையில் உள்ள குறைகளை நீக்க வேண்டும்.

 நான் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின், என்னுடைய செயல்பாடுகள் பிடிக்கவில்லை என எனக்கு முன்மொழிந்த 10 பேர் மற்றும் வாக்களித்த 30 சதவிகிதம் வாக்காளர்கள், என் செயல்பாடுகள் பிடிக்கவில்லை எனக் கூறினால், என் பதவியை ராஜினாமா செய்வேன். இதைத் தனிநபர் சட்ட மசோதாவாகத் தாக்கல்செய்வேன் எனத் தெரிவித்தார். ஆட்சியரின் அறை முன்பே சுயேச்சை வேட்பாளர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.