`இன்னும் தனது பிஆர்ஓ வேலையை மறக்கவில்லைபோல' - மதுரை ஆதீனத்தை எச்சரித்த டி.டி.வி.தினகரன்! | ttv dinakaran warns madurai aadheenam

வெளியிடப்பட்ட நேரம்: 19:15 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:09 (02/04/2019)

`இன்னும் தனது பிஆர்ஓ வேலையை மறக்கவில்லைபோல' - மதுரை ஆதீனத்தை எச்சரித்த டி.டி.வி.தினகரன்!

'பொய்யான தகவலைப் பரப்பினால், மதுரை ஆதீனம் மீது வழக்கு தொடரப்படும்' என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை ஆதீனம்

'அ.தி.மு.க-வில் டி.டி.வி.தினகரன் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் அவர் இணைவார்' என சில நாள்களுக்கு முன் மதுரை ஆதீனம் தெரிவித்தார். அ.தி.மு.க-வுக்கு எதிராகத் தனது அரசியல் பயணத்தைத் தீவிரப்படுத்தி, தேர்தல் களத்தில் டி.டி.வி.தினகரன்  பணியாற்றிக்கொண்டிருக்கும் நேரத்தில், ஆதீனத்தின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், உடனே அதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்ட தினகரன், ``மதுரை ஆதீனம் சொல்லியிருக்கும் கருத்து அடிப்படை ஆதாரமற்றது. அது உண்மையும் அல்ல. அதற்கு அவசியமும் இல்லை" எனக் கூறியிருந்தார். 

மதுரை ஆதீனம்

இந்த நிலையில், இன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆதீனம், ``அ.தி.மு.க-வுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் கூறுவாரா. அவர், அ.தி.மு.க-வுடன் தேர்தலில் சேராமல் இருக்கலாம். ஆனால், நிச்சயமாக  இணைவார்கள். டி.டி.வி.தினகரனால் ஆளும்கட்சிக்குத்  தேர்தலில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அ.தி.மு.க-வில் தினகரனை மீண்டும் சேர்ப்பதற்கான பேச்சுவார்த்தை மறைமுகமாக நடந்துவருகிறது. தேர்தலுக்குப் பின், அ.தி.மு.க-வுடன் தினகரன் இணையும் காலம் வரும்" எனக் கூறினார். இது பரபரப்பை ஏற்படுத்த,  இதுதொடர்பாக டி.டி.வி. தினகரன் பேசியுள்ளார். 

டி டி வி தினகரன்

அதில், ``முன்பே இந்தக் கருத்தை ஆதீனம் தெரிவித்திருந்தார். ஆனால், இணைவதற்கான அவசியம் இல்லை என மிக நாகரிமாக அதற்கு நான் மறுப்பு தெரிவித்திருந்தேன். நான் அளித்த அந்தப் பதிலில் இருந்தே உண்மை நிலையை ஆதீனம் புரிந்திருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யாமல், மீண்டும் இன்று அதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். அதே கருத்தை மீண்டும் பார்க்கும்போது, தனது பழைய வேலையான தமிழரசு பத்திரிகையின் பிஆர்ஓ வேலையை இன்னும் ஆதீனம் மறக்கவில்லை போலும்.

டி.டி.வி தினகரன்

எங்களுக்கே தெரியாமல் இணைப்புப் பேச்சு நடப்பதாகத் தொடர்ந்து அவர் பொய் சொல்வதைப் பார்த்தால், யாருக்கோ ஏஜென்ட்டாக இருக்கிறார் போல. அது யாருக்கு, எங்கள் துரோகிகளுக்கா? அல்லது எதிரிகளுக்கா எனத் தெரியவில்லை. இணைப்புப் பேச்சு நடப்பது உண்மை என்றால், அதைச் செய்வது யார் என அறிவிக்க வேண்டியதுதானே? ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கட்சியையும் ஆட்சியையும் பா.ஜ.க-விடம் அடகு வைத்து ஜெயலலிதாவையே பழித்துப் பேசியவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ்ஸைக் கண்டிக்க முடியாமல், யாருக்கோ உதவுவதற்காக இப்படிப் பொய் செய்திகளைத் தொடர்ந்து பரப்பினால், மதுரை ஆதீன மடத்தின் பெயரைக் காக்கவாது அருணகிரி ஆதீனத்தின்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்" என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க