ஒரத்தநாடு கூட்டத்தில் முதல்வர் மீது செருப்பு வீசியவர் கைது! | oraththanadu man arrested for throwing slipper into chief minister

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (01/04/2019)

கடைசி தொடர்பு:11:12 (02/04/2019)

ஒரத்தநாடு கூட்டத்தில் முதல்வர் மீது செருப்பு வீசியவர் கைது!

ஒரத்தநாட்டில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி  பிரசாரம் செய்துகொண்டிருக்கும்போது செருப்பு வீசிய வாலிபரைக் கைதுசெய்த போலீஸார், அவர்மீது வழக்குப்  பதிந்து 15 நாள்கள் ரிமாண்டில் வைத்தனர்.

முதல்வர் மீது செருப்பு வீசிய நபர்

தஞ்சாவூர்  நாடாளுமன்றத் தொகுதி அ.தி.மு.க கூட்டணியில் உள்ள  த.மா.கா வேட்பாளர் நடராஜனை ஆதரித்து, ஒரத்தநாட்டில் வாக்குகள் கேட்டு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 8.45 மணியளவில் வேனில் நின்றுகொண்டு பிரசாரம் செய்தார்.முதல்வருடன் வைத்திலிங்கம் எம்.பி, வேட்பாளர் நடராஜன் ஆகியோர் நின்றிருந்தனர். எடப்பாடி பேசத் தொடங்கிய சில நிமிடங்களில், வேனின் பக்கவாட்டில் இருந்து  செருப்பு ஒன்று முதல்வரை நோக்கி வீசப்பட்டது. ஆனால் அந்த செருப்பு, முதல்வர்மீது படாமல் வைத்திலிங்கத்தின் கையில்பட்டு,அவருக்கு அருகில் வேன் மேலேயே விழுந்தது. இதில் அதிர்சியடைந்த வைத்திலிங்கம்,  செருப்பு வந்த பக்கம் கோபமாகத் திரும்பிப் பார்த்தார். பின்னர், முதல்வருக்குத் தெரியாத வகையில் செருப்பை மறைக்கும் விதமாகக் கையை வைத்துக் கொண்டு நின்றார். இதற்கிடையில், செருப்பு வீசியவரை அ.தி.மு.க-வினரே பிடித்துவிட்டனர். பின்னர், 10 நிமிடத்தில் பேச்சை முடித்துக்கொண்டு முதல்வர் புறப்பட்டுச் சென்றார். அதன்பிறகு,  செருப்பு வீசிய நபரை  அ.தி.மு.க-வினர்  சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதைக் கண்ட போலீஸார் அவரை மீட்டு, காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். செருப்பு வீசியவர், உப்புண்டார்பட்டி கிராமத்தைச்  சேர்ந்த வேல்முருகன் எனத் தெரியவந்தது. கேட்டரிங் பட்டதாரியான இவர், அ.தி.மு.க கரை வேட்டி கட்டிக்கொண்டுதான் கூட்டத்திற்கு வந்திருக்கிறார். அவரிடம் போலீஸார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். முதல்வரின் பாதுகாப்புப் பணியில் இருந்த மத்திய மண்டல ஐஜி வரதராஜு, தஞ்சை டிஐஜி லோகநாதன், எஸ்பி மகேஸ்வரன் ஆகியோர், நேற்று நள்ளிரவு 1 மணி வரை வேல்முருகனிடம் விசாரித்தனர். இன்று காலையும் விசாரணை தொடர்ந்தது. எதற்காக இப்படிச் செய்தாய் எனக் கேட்டதற்கு, அமைதியாகவே இருந்ததாக சொல்லப்படுகிறது. அதைத் தொடர்ந்து, இன்று மாலை வேல்முருகன் மீது போலீஸார்  வழக்குப்பதிவு செய்தனர்.வேல்முருகன் அ.ம.மு.க-வைச் சேர்ந்தவர். வைத்திலிங்கத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தவே இப்படிச் செய்திருக்கிறார் என அ.தி.மு.க-வினர் கூறுகின்றனர்.ஆனால் அவர், அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர்தான். அவர் அப்பா புண்ணியமூர்த்தி, அ.தி.மு.க-வில் கிளைச் செயலாளராக இருந்தவர். சொந்தக் கட்சியில் உள்ளவரே செருப்பு வீசிவிட்டார் என்பதை மறைக்கவே, எங்கள் கட்சியைச் சேர்ந்தவர் எனப் பேசிவருகின்றனர்.

மேலும், கஜா புயல் பாதிக்கப்பட்டபோது முதல்வர் பார்க்க வரவில்லை என்றும், உரிய நிவாரணம் வழங்கவில்லை  எனவும் வருத்தத்தில் இருந்திருக்கிறார். அந்தக் கோபத்திலேயே இப்படிச் செய்துள்ளார் என அ.ம.மு.க-வினர்  தெரிவித்தனர்.காவல்துறையினர் இது தொடர்பாக நடத்திய விசாரணையில், வேல்முருகன் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், அதற்கான சிகிச்சைபெற்று குணமாகியிருக்கிறார். அதற்கான ஆவணமும் வைத்திருக்கிறார் எனத் தெரியவந்ததால்,முதலில் வழக்கு எதுவும் பதியாமல் அவரை விட்டுவிடலாம் எனவும் முடிவுசெய்தனர். ஆனால், வைத்திலிங்கத்தின் தரப்பில், தொடர்ந்து இதுபோல எனக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை இப்படியே விட்டுவிட்டால், மீண்டும் இதுபோல யாரவது நடந்துகொள்வார்கள். எனவே, அவர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றதாகத் தெரிகிறது. அதன் பிறகே, வேல்முருகன் மீது வழக்கு பதியப்பட்டதோடு, 15 நாள்கள் ரிமாண்டும் செய்திருக்கிறார்கள் எனத் தெரிவித்தனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க