`தி.மு.கவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்'! - முதல்வர் எடப்பாடி சாடல் | Chief minister Edappadi Palanisamy Slams DMK

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:11:13 (02/04/2019)

`தி.மு.கவினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள்'! - முதல்வர் எடப்பாடி சாடல்

தி.மு.க-வினர் விஞ்ஞான மூளை படைத்தவர்கள். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க தான். 2ஜியில் 1, 47,000 கோடி வரையிலும் கொள்ளை அடித்து இருக்கின்றனர் என தி.மு.கவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாடினார். 

திருச்சி, கரூர், சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதுக்கோட்டையில் கந்தர்வக்கோட்டை, கீரனூர், திருவப்பூர், புதுக்கோட்டை, ஆலங்குடி, திருமயம் பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பிரசார வாகனத்தில் நின்று பேசினார். பிரசார வாகனத்தில் எடப்பாடி பழனிசாமி அருகே கரூர் வேட்பாளர் தம்பிதுரை கைகூப்பியவாறு நின்று கொண்டிருந்தார். முன்புறம் இருக்க வேண்டிய திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் இளங்கோவனோ முதலமைச்சருக்குப் பின்புறம் ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தார். புதுக்கோட்டையின் பெரும்பாலான பகுதிகள், கந்தர்வக்கோட்டை பகுதி திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருவதால், தம்பிதுரை இருந்த இடத்தில் திருச்சி வேட்பாளர் இளங்கோவன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கூட்டத்தில் இருந்த தே.மு.தி.க-வினர் முணுமுணுத்தனர். இதனால், சிறிது பரபரப்பு ஏற்பட்டது.


 

கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் நாங்கள் மெகா கூட்டணி அமைத்துள்ளோம். தி.மு.க அமைத்துள்ளதோ சந்தர்ப்பவாதக் கூட்டணி. ஒவ்வொரு வருடமும் தேர்தலின் போது, தி.மு.க தேர்தல் அறிக்கை வெளியிடுவதுடன் சரி, அதில் இடம்பெற்றுள்ள ஒரு அம்சங்களைக் கூட நிறைவேற்றுவதில்லை. காவிரி நதி நீர்ப் பிரச்னையில் தி.மு.க குரல் கொடுக்கவில்லை. அதே நேரம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, உச்ச நீதிமன்றத்தில் வாதாடி, நல்ல தீர்ப்பை பெற்றுத் தந்தார்கள். அந்தச் சமயம் 37 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒருசேரக் குரல் கொடுத்தனர். தி.மு.கவை சேர்ந்தவர்கள் விஞ்ஞான மூளை  படைத்தவர்கள். கண்ணுக்குத் தெரியாத காற்றில் கூட ஊழல் செய்த கட்சி தி.மு.க தான். 1,74,000 கோடி வரையிலும் கொள்ளை அடித்து இருக்கின்றனர். அ.தி.மு.க ஊழல் செய்தது என்று சொல்லும் தி.மு.க ஆதாரத்துடன் சொல்ல வேண்டும். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஆட்சி தி.மு.க. எங்களைப் பேசுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி, அருகதை இருக்கிறது. சில தினங்களுக்கு முன் கர்ப்பிணிப் பெண்ணை  பலாத்காரம் செய்ய முயன்ற தி.மு.க செயற்குழு உறுப்பினரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தி.மு.கவின் அராஜகம் எல்லை மீறிக் கொண்டு போகிறது.

சட்டமன்றத்தில் நீதிபதிக்குச் சமமான பேரவை தலைவரை இழுத்துத் தள்ளிவிட்டு, சட்டையைக் கிழித்து சபாநாயகர் இருக்கையில் தி.மு.கவினர் அமர்ந்து அராஜகம் செய்தனர். ஸ்டாலின் தலைமையில்தான் அனைத்தும் நடந்தது. அதன்பிறகு சட்டமன்றத்திற்குள் உள்ளே இருக்கும் போது, நல்ல நிலையில்தான் இருந்தார். ஆனால், வெளியில் வந்ததும் சட்டையைக் கிழித்துக்கொண்டு வந்தார். நாங்கள் எல்லாம் ஏதோ அவருக்கு ஆகி விட்டது என்று நினைத்துக்கொண்டோம். என்னைப்பார்த்து மண்புழு என்கிறார். மண்புழுவை இயற்கை உரமாக நாம் பயன்படுத்துகிறோம். இயற்கை உரமாக இருந்து அ.தி.மு.கவின் திட்டங்களுக்கு ஊக்கம் கொடுத்து சிறப்பாகச்  செயல்படுத்துகிறேன். மண்புழு உரத்தால், செடிகள் செழித்து வளரும் போது, வைரஸ் பூச்சி அதனைத் தாக்குகிறது. அதற்கு விவசாயிகள் பூச்சி மருந்து அடிப்பார்கள். அதுபோல, மண்புழுவாக இயற்கை உரம் கொடுத்து நான் செயல்படுத்தி வரும் திட்டங்களை, ஸ்டாலின் என்ற வைரஸ் பூச்சி தாக்குகிறது. மக்களாகிய நீங்கள் தேர்தல் என்ற பூச்சி மருந்தை அடித்து தி.மு.க என்ற நச்சு வைரசினை விரட்டுங்கள். தி.மு.கவின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுப்போம்.

தமிழகத்தில் எந்தப் பிரச்னை நடந்தாலும், எடப்பாடி பழனிசாமி, பதவி விலக வேண்டும் என்கிறார் ஸ்டாலின். அவர் சொல்வது போல ராஜிநாமா செய்வது என்றால் 100 தடவை ராஜிநாமா செய்து இருக்க வேண்டும். உடனே நான் முதலமைச்சராக ஆகிவிடவில்லை. 1974ல் கிளைக்கழகச் செயலாளராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி பல்வேறு  நிலைகளைக் கடந்து முதலமைச்சராக ஆகி உள்ளேன். ஆனால், ஸ்டாலினோ தந்தையின் செல்வாக்கில் தற்போது பதவிக்கு வந்துள்ளார். எங்களை மிரட்டிப் பார்த்தோ, ஏளனமாகப் பேசியோ, எங்களை வீழ்த்தி விடலாம் என்று ஒருபோதும் கனவு காண வேண்டாம். புதுக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க அரசால் மருத்துவக் கல்லூரி உருவாக்கப்பட்டது. புதுக்கோட்டையில் 150 கோடி மதிப்பீட்டில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 2 ஆயிரம் வீடுகள் கட்டப்பட்டு விரைவில் அதனை நான் திறந்து வைப்பேன்.புதுக்கோட்டையில் புதிய செயற்கைக்கோள் நகரம் உருவாக்கப்படும்.கஜா புயலில் வேகமாக துரிதமா செயல்பட்டு மின்சாரம் வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டியினை அம்மா அரசுதான் வழங்கி உள்ளது. கோதாவரி-காவிரி நதி நீர் இணைப்புத்திட்டம் நிறைவேற்றப்படும் போது, காவிரி-கொள்ளிடம் உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இப்பகுதி மக்களுக்குத் தண்ணீர் முறையாகக் கிடைக்கும்" என்றார்.

தொடர்ந்து, மீண்டும் பாரத பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக வருவதற்குக் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தம்பிதுரைக்கு இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களியுங்கள். அதேபோல், திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் இளங்கோவனுக்கு முரசு சின்னத்தில் வாக்களியுங்கள் எனக் கேட்டுக்கொண்டார். புதுக்கோட்டை பகுதிக்குள் கரூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரை முன்னிறுத்தி வாக்குக் கேட்டதால், அங்கிருந்த தொண்டர்கள் குழப்பமடைந்தனர்.