`நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றுவதுதான் பா.ஜ.க' - கனிமொழிக்கு தமிழிசை பதில்! | the BJP can only fulfill the unfulfilled schemes tamilisai answers to kanimozhi

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (02/04/2019)

கடைசி தொடர்பு:11:13 (02/04/2019)

`நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றுவதுதான் பா.ஜ.க' - கனிமொழிக்கு தமிழிசை பதில்!

``தூத்துக்குடித் தொகுதியை நன்கு ஆராய்ந்த பின்னரே பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், நிறைவேற்ற முடியாத திட்டங்களைக் கூறியுள்ளது பா.ஜ.க., கனிமொழி குறை கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றித் தருவதுதான் பா.ஜ.க.,” எனத் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.  

தமிழிசை

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து வாக்கு சேகரிப்பதற்கான பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க., அகில பாரத தலைவர் அமித் ஷா மற்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நாளை தூத்துக்குடிக்கு வருகை தர உள்ளனர். இதுகுறித்து  செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பா.ஜ.க., வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன், ``பா.ஜ.க.,வின் தேசிய தலைவர் அமித் ஷா, நாளை பகல் 12 மணி அளவில் மதுரைக்கு விமானம் மூலம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்திலிருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு வருகிறார்.

இந்தப் பிரசார பொதுக்கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராகுல் காந்தி கேரளாவில் வயநாடு தொகுதியில் போட்டியிடுகிறார் எனக் காங்கிரஸ் கட்சியின்  தலைமை அறிவித்துள்ளது. ஆனால், கேரளாவில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என பினராயி விஜயன் கூறி வருகிறார். அதே கட்சியைச் சேர்ந்த தேசிய பொதுச் செயலாளர் சிதாராம் யெச்சூரி ராகுல் காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். எனவே, காங்கிரசாரின் தோல்வி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. எனவே, காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும்.

தமிழிசை

தி.மு.க.,வும் இந்தத் தேர்தலில் தோல்வியைத் தழுவும். ஏனெனில், தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் தி.மு.க.,பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நடத்திய சோதனையே இதற்கு ஒரு சான்று. இந்த வருமான வரிச் சோதனை குறித்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத நிலையிலேயே கட்டுகட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றால், ஆட்சிக்கு வந்தால் எப்படி இருப்பார்கள்? வருமானவரித்துறை என்பது தனி அமைப்பு. தேர்தலைக் காரணம் காட்டி, அவர்களது சோதனையை தவறு எனச் சொல்வதா?

தூத்துக்குடியைப் பொறுத்தவரையில், இந்தத் தொகுதியை நன்கு ஆராய்ந்த பின்னரே பா.ஜ.க., தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில், தூத்துக்குடி மிகப்பெரிய தொழில் நகரமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டிரேட் சென்டர் அமைக்கப்படும். புல்லட் ரயில் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளோம். ஆனால், நிறைவேற்ற முடியாத திட்டங்களைக் கூறியுள்ளது பா.ஜ.க., என தி.மு.க., வேட்பாளர் கனிமொழி குறை கூறியுள்ளார். நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றித் தருவதுதான் பா.ஜ.க.,

தமிழிசை

எனவே, தூத்துக்குடியை ஒரு தொழில் முனைவோர் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் ஒருவருக்கு நிச்சயமாக அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் சுய தொழில் அல்லது பிற தனியார் துறையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படும். இதுபோல் சாலை வசதி, குடிநீர் வசதி, பனை பொருள் மறுவாழ்வுத் திட்டங்கள், வாழை நாரிலிருந்து ஆடை தயாரிப்பு உள்ளிட்ட பல திட்டங்களைச் செயல்படுத்த பா.ஜ.க., தீர்மானித்துள்ளது.” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க