`ஸ்டாலின் ஒரு விஷக் கிருமி; அதை அழிக்கும் மண் புழு நான்" – எடப்பாடி பழனிசாமி காட்டம் | Stalin is a dangerous virus says edappadi palanisamy

வெளியிடப்பட்ட நேரம்: 07:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:29 (03/04/2019)

`ஸ்டாலின் ஒரு விஷக் கிருமி; அதை அழிக்கும் மண் புழு நான்" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

ஸ்டாலின் ஒரு விஷக் கிருமி.. அதை அழிக்கும் மண் புழு நான் என முதல்வர்  எடப்பாடி பழனிசாமி திருச்சி தேர்தல் பிரசார பயணப் பேச்சில் அனல் தெறித்தது.

எடப்பாடி பழனிசாமி

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தங்கள் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை, துவாக்குடி, திருச்சி காந்தி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் டாக்டர்.இளங்கோவனை ஆதரித்து தேர்தல் பரப்புரை பிரசாரம் மேற்கொண்ட அவர், இடையில் சில தினங்களுக்கு முன்பு இறந்துபோன முன்னாள் அமைச்சர் செல்வராஜ் இல்லத்துக்குச் சென்று அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து தேர்தல் பிரசாரத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நாடு வளர்ச்சி பெறவும், பாதுகாப்புடன் இருக்கவும், நாட்டுக்குத் தகுதியான பிரதமர் தேவை என்பதை உணர்ந்து அ.தி.மு.க., தலைமையில் தமிழகத்தில் மெகா கூட்டணியை அமைத்துள்ளோம். மத்தியில் திறமையான வலிமையான நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், மோடி பிரதமராக வரவேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் கூட்டணி. எனவே,  நமது கூட்டணி சார்பில் போட்டியிடும் டாக்டர் இளங்கோவனுக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றவர். திருச்சிக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கொண்டு வரப்படும். திருச்சி முக்கொம்பில் ரூ.350 கோடி மதிப்பில் தடுப்பணை கட்ட அனுமதி வழங்கி டெண்டர் விடப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. மேலும், திருச்சி பால்பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்கப்படும் எனக் கூறியவர்.

பிரசாரம்

நம் கூட்டணி கொள்கைக் கூட்டணி, தி.மு.க., அமைத்துள்ள கூட்டணி முற்றிலும்  சந்தர்ப்பவாத கூட்டணி. கொள்கை இல்லாத கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. உதாரணத்துக்கு வைகோ, தி.மு.க.,வை எதிர்த்து தனியாக கட்சி கண்ட வைகோ, இன்று அதே தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதிலிருந்து அவர்களின் கொள்கை கூட்டணி என்பது விளங்கும். நமது கூட்டணி என்பது மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் சேர்ந்துள்ள கூட்டணி.

தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள தி.மு.க., தலைவர் ஸ்டாலின், போகிற இடங்களில் அ.தி.மு.க., அரசு என்ன செய்தது என பேசி வருகிறார். நான் கடந்த 22-ம் தேதி முதல் இன்று வரை பிரசாரம் மேற்கொண்டுள்ள இடங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அ.தி.மு.க என்னென்ன திட்டங்களைச் செய்தார்கள் என்றும், ஜெயலிதா ஆசியுடன் நடைபெறும் இந்த அரசு என்ன செய்தது என்பதைப் புள்ளிவிவரங்களுடன் விளக்கிக் கூறிவருகிறேன். ஆனாலும் அவற்றைப் புரிந்துகொள்ளாமல் ஸ்டாலின், தொடர்ந்து வாக்காளர்களைக் குழப்பிவருகிறார். அ.தி.மு.க. மெகா கூட்டணியைப் பார்த்து ஸ்டாலின் மிரண்டு போய், என்ன பேசுவதென்று தெரியாமல் உளறி வருகிறார்.

நேற்று முன் தினம் ஒரு தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், என்னை மண்புழு என்று தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார். விவசாயிகளின் நண்பனாக இயற்கை உரமாக மண்புழு பயன்படும். அதேபோல் நான் மக்களின் நண்பன். வளர்ந்து வரும் செடியில் உண்டாகும் வைரஸ் கிருமியை அழிக்க மண்புழு உதவி செய்யும். ஸ்டாலின் ஒரு வைரஸ் கிருமி. வைரஸ் பூச்சியான ஸ்டாலினை தேர்தல் மூலம் மக்கள் அகற்ற வேண்டும்.

தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. நான்கு நாள்களுக்கு முன்புகூட ஒரு கர்ப்பிணியை ரயிலில் தி.மு.க நிர்வாகி பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக செய்திகள் வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல், தனியார் ஹோட்டலில் உணவு சாப்பிட்டுவிட்டு பில் கொடுக்காமல் அதன் உரிமையாளரை தி.மு.க-வினர் அடித்ததைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பிரியாணி, புரோட்டா சாப்பிட்டுவிட்டு அராஜகத்தில் ஈடுபடுகிறார்கள்.

அடுத்த நாள் தகராறு செய்த ஹோட்டலுக்கு ஸ்டாலின் சென்று கட்டப் பஞ்சாயத்து செய்கிறார். ஆனால் அராஜகத்தில் ஈடுபடுபவர்களை எல்லாம் அ.தி.மு.க., சட்டப்படி தண்டனை வழங்கி வருகிறது. தலைவர்கள் எவ்வழியோ அவ்வழியே தொண்டர்களும் அவ்வழி. எடப்பாடி பழனிசாமி வருகைக்காக சமூக ஆர்வலர்கள் கைதுஎதிர்க்கட்சியாக இருக்கும்போதே இப்படி என்றால், ஆளும் கட்சியாக வந்தால் என்ன செய்வார்கள். ஒருபோதும் அவர்கள் ஆளும் கட்சியாக வர முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ஜெயலலிதாவின் மரணத்தைக் கண்டுபிடிப்போம் என்கிறார் ஸ்டாலின், ஜெயலலிதா யாரால் பாதிக்கப்பட்டார் என மனசாட்சி உள்ளவர்கள் யோசிக்க வேண்டும். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது,  அந்த வழக்கில் நிரபராதி என்று தீர்ப்பு வந்த பிறகும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மன உளைச்சலுக்கு ஆளாக்கி ஜெயலலிதாவை இறக்க வைத்துவிட்டனர். ஆனால், தற்போது இதுகுறித்து நீதி விசாரணை நடைபெறுகிறது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் சரி, அவரின் ஆசி பெற்ற இந்த ஆட்சியிலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இதுபோல் தி.மு.க. ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பு கேள்விக் குறிதான். பெண்களைப் பற்றி பேச தி.மு.க.-வுக்கு தகுதி கிடையாது. ஸ்டாலின் அ.தி.மு.க. அரசை விமர்சிப்பது ஏன் குறிக்கோளாகக் கொண்டுள்ளார். அவர் பூதக்கண்ணாடியை போட்டுப் பார்த்தால் கூட அ.தி.மு.க., ஆட்சியில் ஒரு குறையும் கண்டுபிடிக்க முடியாது. அப்பாவின் செல்வாக்கால் முன்னுக்கு வந்தவர் உதயநிதி ஸ்டாலின். அவர் தற்போது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு மரியாதை என்னவென்றே தெரியவில்லை. எனது அனுபவம்கூட உதயநிதியின் வயது இல்லை” என்றார்.

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் காலையில் இருந்தே மக்கள் காத்திருந்தார்கள். 11.மணி வாக்கில் அங்கு வந்த முதல்வர் வாகனம், ஒரு மரத்தடி நிழலில் நின்றதும், பேச ஆரம்பித்தார். இதில் கடுப்பான மக்கள் நடையைக் கட்டினார்கள். இதேபோல் திருச்சியின் திட்டங்களுக்காக திருச்சி சோமரசம்பேட்டையில் முதல்வரிடம் கேள்வி எழுப்புவதாகச் சமூக வலைதளங்களில் பதிவிட்ட சமூக நீதிப்பேரவை மாவட்டச் செயலாளர் ரவி, தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை ஆகியோரை முன்னெச்சரிக்கையாக போலீஸார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க