மாதவிடாய் நேரத்தில் வலி குறைய காய்ச்சல் மாத்திரை எடுப்பவர்கள் கவனத்துக்கு! | Shall we take fever tablet for menstrual pain

வெளியிடப்பட்ட நேரம்: 11:40 (02/04/2019)

கடைசி தொடர்பு:11:40 (02/04/2019)

மாதவிடாய் நேரத்தில் வலி குறைய காய்ச்சல் மாத்திரை எடுப்பவர்கள் கவனத்துக்கு!

மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் வலியைக் குறைக்க எப்போதாவது மருத்துவர்கள் மாத்திரைகளைப் பரிந்துரைப்பார்கள். அவற்றில் தீங்கு விளைவிக்காத காய்ச்சல் மாத்திரைதான் உள்ளடங்கியிருக்கும். அந்த மாத்திரைகளை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து எடுப்பவரா நீங்கள்... இந்த செய்தி உங்களுக்கானதுதான்.

மாதவிடாய்

``மாதவிடாய் நேரத்தில் பெண்களுடைய கருப்பையானது தனக்குள் இருக்கிற மாதவிடாய் உதிரத்தை வெளியேற்றுவதற்காகச் சுருங்கி, விரிய ஆரம்பிக்கும். அது சுருங்குவதற்கு காரணம் அந்த நேரத்தில் பெண்களின் உடம்பில் பிராஸ்டாகிளாண்டின் என்கிற ஹார்மோன் அதிக அளவில் தூண்டப்படுவதுதான் காரணம்.

இயற்கை மருத்துவர் யோ. தீபாகருப்பைச் சுருங்குவதில் இரண்டு விதங்கள் இருக்கின்றன. ஒன்று அளவுக்கு அதிகமாகச் சுருங்கும். இல்லையென்றால், சரியான அளவில் சுருங்காது. இந்த இரண்டு நிலைகளிலுமே பெண்களின் உடலில் வெப்பம் அதிகமாகும். கூடவே தூக்கமின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சிலருக்கு வாந்தி வந்தே விடுவது, அதிகமான ஏப்பம் என்று பல பிரச்னைகள் இருக்கும். இதெல்லாம் மாதவிடாய் நேரத்தில் இயல்பாக நடக்கிற ஹார்மோன் மாற்றங்கள். இந்த நேரத்தில் பல பெண்கள், 'உடம்பு சுடுது; காய்ச்சலடிக்குது' என்று நினைத்துக்கொண்டு காய்ச்சல் மாத்திரையைச் சாப்பிட்டு விடுகிறார்கள். காய்ச்சல் மாத்திரைகளுக்கு வலியைக் குறைக்கிற தன்மையும் இருப்பதால், உடல் உஷ்ணம் குறைவதோடு, மாதவிடாய் நேரத்து வலியும் குறையும். `ஆஹா... காய்ச்சல் மாத்திரைப் போட்டால் பீரியட்ஸ் வலி குறைகிறதே' என்று இந்தப் பழக்கத்தை மாதந்தோறும் தொடர்ந்தீர்களென்றால், கருப்பையில் நீர்க்கட்டி, நார்க்கட்டி ஏன் குழந்தையின்மை பிரச்னைகூட உங்களுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. 

தவிர, கர்ப்பப்பை சுருங்கி விரியும்போதுதான் ரத்தப்போக்கு மாதவிடாயாக வெளியேற முடியும். அந்த சுருங்கி விரிதல்தான் பெண்களுக்கு வலியை ஏற்படுத்துகிறது. இதைத் தடுப்பதற்கு மாத்திரை போட்டுக்கொண்டால் கர்ப்பப்பை சுருங்கி விரியாது. அதனால், கர்ப்பப்பையில் இருக்கிற மாதவிடாய் ரத்தம் முழுமையாக வெளியேறுவதும் தடைப்படும்” என்று எச்சரிக்கிறார் இயற்கை மருத்துவர் யோ. தீபா.