`கைச்சின்னத்துல அடிச்சுருக்கிற வர்ணம் எங்க கட்சியோடது!'- ஜோதிமணியை கமென்ட் அடிக்கும் கரூர் தி.மு.க-வினர் | Black red colored hand! - karur constituency campaign

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:34 (03/04/2019)

`கைச்சின்னத்துல அடிச்சுருக்கிற வர்ணம் எங்க கட்சியோடது!'- ஜோதிமணியை கமென்ட் அடிக்கும் கரூர் தி.மு.க-வினர்

அந்த சுவர் விளம்பரம்

`படையப்பா' படத்தில் நடிகர் செந்திலுக்கும் இடையிலான, `மாப்பிள்ளை அவருதான்; ஆனா, அவர் போட்டிருக்கிற சட்டை என்னுடையது' என்ற டயலாக் ஏக பிரசித்தம். அதேபோல், கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கு செய்யப்பட்டிருக்கும் விளம்பரத்தைப் பார்த்து தி.மு.க-வினர், `காங்கிரஸ் வேட்பாளரின் சின்னம் கைச்சின்னம். ஆனால், அதுல அடிச்சுருக்கிற வர்ணம் எங்க கட்சியோடது' என்று கமென்ட் அடிக்கிறார்கள். அந்த அளவுக்கு, தொகுதியில் பல இடங்களில் கைச்சின்னத்தை கறுப்பு, சிகப்பு வர்ணத்தில் வரைந்திருக்கிறார்கள்.

கறுப்பு சிவப்பு வர்ணத்தில் கை சின்னம் விளம்பரம்

வரும் 18-ம் தேதி தமிழகத்தில் மக்களவை தேர்தல் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் உள்ள பிரதானக் கட்சிகள், மற்றக் கட்சிகளோடு கூட்டணி வைத்து, தேர்தலை சந்திக்கிறார்கள். தேர்தலைச் சந்திக்கும் எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து, பிரசாரத்தை முடுக்கிவிட்டிருக்கின்றன. அந்த வகையில், கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரை களத்தில் இருக்கிறார். தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி வேட்பாளராகி இருக்கிறார். தவிர, அ.ம.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர் ஹரிஹரனும் போட்டிப்போடுகிறார்கள். அனைவரும் தீவிர பிரசாரத்தில் இறங்க, கரூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது.

செந்தில் பாலாஜி

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோதிமணி கூட்டணிக் கட்சியான தி.மு.கவினரை முழுவீச்சில் தனக்காக தேர்தல் பணியாற்றவைக்க ஏதுவாக, புதிய உத்தியைக் கையாளுகிறார். அதாவது, அவர் தி.மு.க ஓட்டுகளையும், குறிப்பாக தி.மு.க கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜியின் தேர்தல் வியூகத்தை மட்டுமே நம்பி இருக்கிறார். அவர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க-வினரும் தனக்காக தேர்தல் பணியாற்ற ஆர்வமாக களமிறங்க, ஜோதிமணி ஒரு நவீன யுக்தியைக் கையாண்டிருக்கிறார். தொகுதி முழுக்க எழுதப்பட்ட தேர்தல் விளம்பரத்தில் கைச்சின்னத்தை பல இடங்களில் காங்கிரஸ் கட்சி நிறத்தில் வரையாமல், தி.மு.க-வின் கறுப்புச் சிகப்பு வர்ணத்தில் வரைய வைத்திருக்கிறார். அதேபோல், பல இடங்களில் சுவர் விளம்பரங்களில் ராகுல்காந்தி, சோனியாகாந்தி என்று எழுதாமல், 'கலைஞர், தளபதி ஆதரவுபெற்ற சின்னம், வேட்பாளர்' என்று மட்டும் எழுத வைத்திருக்கிறார்.

ஜோதிமணி பிரசாரம்

இதுபற்றி நம்மிடம் பேசிய, கரூர் தொகுதி காங்கிரஸ் புள்ளிகள் சிலர், ``ஜோதிமணி தனது வெற்றிக்காக தி.மு.க-வினரை மட்டுமே நம்பி இருக்கிறார். அதுவும், குறிப்பாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அதிரடியான தேர்தல் வியூகத்தை மட்டுமே நம்பியிருக்கிறார். செந்தில் பாலாஜியும் ஜோதிமணியை வெற்றி பெற வைப்பதில்தான், ஸ்டாலினுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என நினைக்கிறார். அதனால், கடுமையாக வியூகம் வகுத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சியின் சுவர் விளம்பரம்

இருந்தாலும் மொத்த தி.மு.க-வினர்களையும் உற்சாகப்படுத்த வேண்டும் என்று நினைத்த ஜோதிமணி, கைச்சின்னத்தை தி.மு.க கட்சி வர்ணத்தில் பூச வைத்திருக்கிறார். கலைஞர், தளபதியை மட்டும் முன்னிலைப்படுத்தி இருக்கிறார். இது வெற்றிக்கான வியூகம் என்றாலும், பிரதமர் வேட்பாளர் ராகுலையும், கட்சியின் தலைவி சோனியாவையும் இருட்டடிப்பு செய்கிறாரோனு எங்க கட்சிக்குள்ள முனுமுனுப்பும் கேட்கக் தொடங்கியிருக்கு" என்றார்கள்.