``ப்ளூவேல் கேம் பாசிட்டிவா இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன்'' - மரம் வளர்க்க கேம் ஆப், அசத்தும் சுட்டி ஷஷாங்க் | Global warming application developed by a 12 year old boy

வெளியிடப்பட்ட நேரம்: 20:23 (02/04/2019)

கடைசி தொடர்பு:20:23 (02/04/2019)

``ப்ளூவேல் கேம் பாசிட்டிவா இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன்'' - மரம் வளர்க்க கேம் ஆப், அசத்தும் சுட்டி ஷஷாங்க்

`கேப்டன் என்விரான்மென்ட்' என்ற ஒரு கேம் அப்ளிகேஷனை உருவாக்கி அதன் மூலம் சிறுவர்களிடம் மரம் வளர்ப்பை அதிகப்படுத்தி வருகிறார் ஷஷாங்க். இது குறித்து அவர் பகிரும் தகவல்கள்.

``ப்ளூவேல் கேம் பாசிட்டிவா இருந்தா எப்படியிருக்கும்னு நினைச்சேன்'' - மரம் வளர்க்க கேம் ஆப், அசத்தும் சுட்டி ஷஷாங்க்

``இயற்கையைப் பாதுகாக்கும் கடமை நம்ம எல்லோருக்கும் இருக்கு. நாம் அன்றாடம் செய்யும் செயல்பாடுகளிலுள்ள சின்னச் சின்ன விஷயங்களை மாத்திக்கிட்டாலே போதும் இயற்கை வளத்தை நிச்சயம் இன்னும் அதிகரிக்க முடியும்" எனச் சமுதாய அக்கறையுடன் பேசுகிறார் ஷஷாங்க் .12 வயதுச் சிறுவரான ஷஷாங்க், சுற்றுச்சுழலைப் பாதுகாக்க பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். மேலும் `கேப்டன் என்விரான்மென்ட்' என்ற ஒரு கேம் அப்ளிகேஷனை உருவாக்கி அதன் மூலம் சிறுவர்களிடம் மரம் வளர்ப்பை அதிகப்படுத்தி வருகிறார். இது குறித்து ஷஷாங்க் பகிரும் தகவல்கள்.

``எனக்குச் சின்ன வயசிலிருந்தே மரம் வளர்ப்பு மீது ஆர்வம் அதிகம். நான் வளர்க்கிறது மட்டுமல்லாமல் மத்தவங்ககிட்டேயும் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி இந்தியாவைப் பசுமை நிறைந்த நாடாக மாத்தணும் என்பதுதான் என்னுடைய ஆசை. இப்போது அதற்கான முயற்சிகளில்தான் ஈடுபட்டிருக்கேன். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது மரம் வளர்க்கிறது தொடர்பாக ஒரு ஸ்கூல் புராஜெக்ட் இருந்துச்சு. அந்தச் சமயத்தில் நிறைய விஷயங்களை ஆன்லைனில் தேடித்தேடி கத்துக்கிட்டேன். அப்போதான் குளோபல் வார்மிங், ஓசோன் படல பாதிப்பு, சுற்றுச்சுழல் மாசுபாடு என எல்லாவற்றையும் ஆன்லைன் மூலமாக தெரிஞ்சுகிட்டேன். நாம் தெரியாமல் பண்ற ஒரு சின்ன விஷயத்தால்கூட இயற்கை பெரியளவில் பாதிக்கப்படும்னு தெரிஞ்ச பிறகு, இயற்கை வளம் சார்ந்த விஷயத்தில் பெரிய  அக்கறையே வந்திருச்சு. அதுக்கு அம்மாவும் முழு சப்போர்ட் பண்ணாங்க'' என ஷஷாங்க் தன்னுடைய அம்மாவைப் பார்க்க, மகனைக் கட்டி அணைத்துப் பேச ஆரம்பிக்கிறார் மனு.

``நான் டாக்டர்ங்கிறதுனால என் பையனை அந்த ரூட்ல பயணிக்க நான் கட்டாயப்படுத்தலை. அவன் இஷ்டத்திற்கு முடிவு எடுக்கட்டும்னு சுதந்திரமாக விட்டுட்டோம். ஆனால் அவனே நான் டாக்டர்னு அடிக்கடி சொல்லிட்டு இருப்பான். மூன்றாம் வகுப்பு முடிந்ததும் ஸ்கூல் லீவ் விட்டிருந்த சமயத்தில் எதாவது க்ளாஸ் போறியான்னு கேட்டதுக்கு விவசாயம் கத்துக்கணும்னு சொன்னான். அதனால் எங்க சொந்த ஊரான தஞ்சாவூருக்குக் கூட்டிட்டுப் போனேன். அங்க இருந்த விவசாயிகள் கிட்ட மரம் வளர்க்கிறது, இயற்கை உரம் தயாரிக்கிறது, தண்ணீர் பாய்ச்சுறது போன்ற விஷயத்தை ரொம்ப ஆர்வமாக கத்துக்கிட்டான். விவசாயம் மேல ஆர்வம் இருக்குனு ஆரம்பத்தில் விளையாட்டா சொல்றானுதான் நினைச்சேன். ஆனால் லீவ் முடிஞ்சு வந்து செடி வளர்ப்பில் இன்னும் அதிக ஆர்வம் காட்ட ஆரம்பித்தான். வீட்டில் இருக்கும் பழைய வாட்டர் பாட்டில்கள், குடங்களில் அவன் செடி வளர்க்கிறதை பார்த்துட்டு மண் தொட்டிகள் வாங்கிக் கொடுத்தேன். காய்கறிக் கழிவுகளை சேகரித்து உரங்கள் தயாரித்தான்'' என்று சீரியஸாகப் பேசிய தன் அம்மாவை நிறுத்திப் பேச ஆரம்பிக்கிறான் ஷஷாங்க்.

ஷஷாங்க்

``ப்ளாஸ்டிக் ஒழிப்பு, மரம் வளர்ப்பு என இயற்கை சார்ந்த தகவல்களை தினமும் என் ஃப்ரெண்ட்ஸ் கிட்ட ஷேர் பண்ணிப்பேன். அவங்களுக்கும் காய்கறிக்கழிவுகளில் உரம் தயாரிக்க லீவ் நாளில் சொல்லிக் கொடுத்தேன். ஃப்ரெண்ட்ஸ்களும் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சாங்க. எங்களுக்குள்ள போட்டி போட்டு செடிகள் வளர்க்க ஆரம்பிச்சோம். வீட்டில் வளர்த்த செடி கொஞ்சம் வளர்ந்ததும் தெருக்கள் மற்றும் பொது இடங்களில் நட்டு வைத்தும் தினமும் பராமரிக்க ஆரம்பிச்சோம். இன்னும் நிறைய ஃப்ரெண்ட்ஸ்களை எங்களுடைய பசுமை க்ரூப்பில் சேர்த்துக்க என்ன வழினு யோசிச்சப்பதான் `ஆப் ஐடியா ஸ்பார்க் ஆச்சு" என்ற ஷஷாங்க் தன்னுடைய கேம் டெவலப்பிங் ஆப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்தார்.

``கொஞ்ச நாளைக்கு முன்னாடி ப்ளூ வேல் கேம் னு ஓர் ஆபத்தான விளையாட்டு டிரெண்ட் ஆச்சு. ஒரு முறை அதை ட்ரை பண்ணிட்டா அதுல வர்ற டாஸ்க்குகளையெல்லாம் செய்து போட்டோ எடுத்து அப்லோடு பண்ணணும். நிறைய பேர் அதுல இறந்தும் போனாங்கனு செய்திகள் வந்துச்சு. அதையே எப்படி பாசிட்டிவாக மாற்றலாம்னு யோசிச்சுதான் 'கேப்டன் என்விரான்மென்ட்' என்ற என்னுடைய இந்த ஆப்பை டெவலப் பண்ணேன். அதன்படி இந்த ஆப்பில் விதை வாங்குறது, செடி வளர்க்கிறது,தண்ணீர் ஊற்றுவது, உரம் தயாரிக்கிறது என நிறைய டாக்ஸ்க்குகள் வந்து கொண்டே இருக்கும். ஒவ்வொரு டாஸ்கின் முடிவிலும் அதைச் செய்து முடித்தற்காக கேம் விளையாடுறவங்க ஒரு போட்டோ எடுத்து ஆப்பில் அப்லோடு பண்ணணும். ஒவ்வொரு டாஸ்கிற்கும் ஒரு ஸ்டார் கொடுத்துட்டே வருவோம். இறுதியாக ஒரு குறிப்பிட்ட டாஸ்க்கை ஜெயிச்ச பிறகு அவங்களுக்கு சின்னச் சின்ன பரிசுகள் கொடுக்கப்படும் என்ற முறையில் என்னுடைய இந்த கேம்மை டெவலப்பர்கள் உதவியுடன் உருவாக்கினேன்.

நான் தரப்போகும் பரிசுகளுக்குப் பெரிய நிறுவனங்களிலிருந்து ஸ்பான்சர்கள் வாங்கினேன். என்னுடைய இந்த ஆப் நிறைய சுட்டிஸ்களை ஈர்க்க நிறைய பேர் டவுன்லோடு பண்ணாங்க. டாஸ்க்கை வின் பண்றவங்களுக்கு அப்பப்போ சின்ன பரிசுகள் வழங்கிட்டு இருக்கேன். குளோபல் வார்மிங் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த என் ஃப்ரெண்ட்ஸ் 300 பேருடன் இணைந்து சென்னை மெரினா பீச்சில் மினி மாரத்தான் ஒன்று நடத்தினேன். என்னால் முடிந்த அளவு இப்போ மக்களிடம் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திட்டு வர்றேன்'' என்கிறார் ஷஷாங்க்.


டிரெண்டிங் @ விகடன்