இயக்குநர் மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பச்சை மை கடிதம்!- உருகும் நடிகர் ராஜேஷ் | Actor Rajesh shares about Director Mahendiran

வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (02/04/2019)

கடைசி தொடர்பு:13:30 (02/04/2019)

இயக்குநர் மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்த பச்சை மை கடிதம்!- உருகும் நடிகர் ராஜேஷ்

மொழிகளைக் கடந்து நல்ல சினிமாக்களை நேசிக்கிற அத்தனை இதயங்களையும் அழ வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் இயக்குநர் மகேந்திரன். அவருடைய உறவினரும் அவருடைய 'மெட்டி' படத்தின் கதாநாயகனுமான நடிகர் ராஜேஷ், இயக்குநர் மகேந்திரனின் ஆரம்ப நாள்கள் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார். 

இயக்குநர் மகேந்திரன்

``எம்.ஜி.ஆரின் 'நாடோடி மன்னன்' ரிலீஸாகி, படம் வெள்ளி விழாக் கொண்டாடியது. அதனால், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் எம்.ஜி.ஆரை பேச அழைத்திருந்தார்கள். விழாவில் மாணவன் ஒருவன் `தமிழ் சினிமா எப்படியிருக்கிறது' என்ற தலைப்பில், எம்.ஜி.ஆர். உட்பட அனைவரையும் விமர்சித்துப் பேசுகிறார். அந்த மாணவனுடையப் பேச்சை எம்.ஜி.ஆரும் ரசித்து கைதட்டுகிறார். பிறகு, தான் மேடையில் பேசும்போது, `இந்த மாணவன் படிப்பு முடிந்ததும் தமிழ்த் திரையுலகத்துக்கு வர வேண்டும். தமிழ்த் திரையுலகை அடுத்தகட்ட வளர்ச்சிக்குக் கொண்டு செல்ல இந்த மாணவனால் முடியும்' என்று பாராட்டுகிறார். வெறும் பேச்சுடன் நின்றுவிடாமல், பச்சை நிற மையால் `அந்த மாணவரைச் சென்னைக்கு வந்து தன்னைப் பார்க்கும்படி' எழுதியும் கொடுத்துவிட்டுச் செல்கிறார். ஆனால், அந்த மாணவன் சென்னை வந்து பத்திரிகையாளர் ஆகி விட்டார்.  காலம் மறுபடியும் அந்த மாணவனையும் எம்.ஜி.ஆரையும் ஒரு பிரஸ் மீட்டில் சந்திக்க வைக்கிறது. பார்த்த முதல் பார்வையிலேயே எம்.ஜி.ஆர். அந்த மாணவனை அடையாளம் கண்டு அழைக்கிறார். அதன் பிறகு, அந்த மாணவன் எம்.ஜி.ஆரின் வீட்டில் சில வருடங்கள் தங்கியிருந்தார். `காஞ்சித் தலைவன்' படத்தின் இயக்குநர் காசிலிங்கத்திடம் உதவி இயக்குநராக அந்த மாணவரைச் சேர்த்து விடுகிறார் எம்.ஜி.ஆர். பிறகு எழுத்தாளர், பத்திரிகையாளர், சினிமாவில் இயக்கம் என்று ஓஹோவென அந்த மாணவன் வளர ஆரம்பிக்கிறார். திரையுலகம் அவரை `இயக்குநர் மகேந்திரன்' என்று கொண்டாட ஆரம்பித்தது'' என்றவர் தொடர்ந்தார். 

நடிகர் ராஜேஷ்``மகேந்திரன் 'உதிரிப்பூக்கள்' படம் எடுத்து இந்திய அளவில் பேசப்பட்ட நேரம் அது. அப்போது எம்.ஜி.ஆர். டெல்லியில் இருந்தார். அதே நேரத்தில் மகேந்திரனும் டெல்லியில் தங்கியிருப்பதை தெரிந்துகொண்ட எம்.ஜி.ஆர்,  தன்னுடைய அடையாளங்களான தொப்பி, கண்ணாடி இரண்டும் இல்லாமல் மகேந்திரன் தங்கியிருந்த ஹோட்டலுக்குச் சென்றுவிட்டார். `உனக்குள் இருந்த நெருப்பை நான் 1958-லேயே கண்டுபிடித்துவிட்டேன்' என்று பட்டு சால்வை போர்த்தி பாராட்டுகிறார். அந்தப் பட்டு சால்வை மகேந்திரனிடம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். மகேந்திரனுக்குக் கொடுத்த அந்தப் பச்சை மை கடிதத்தை மகேந்திரன் பல காலம் பத்திரமாக வைத்திருந்தார். அதை நான் அவரிடமிருந்து கேட்டு வாங்கி, ஃபிரேம் போட்டு வைத்திருக்கிறேன். இயக்குநர் மகேந்திரன் அந்தக் கடிதத்தை எம்.ஜி.ஆர். நினைவாக வைத்திருந்தார். நான், இனிமேல் அந்தக் கடிதத்தை மகேந்திரன் நினைவாக வைத்திருக்கப் போகிறேன்'' என்பவரின் குரல், தன் மதிப்புக்குரியவரை இழந்த வேதனையில் தேய்ந்து ஒலிக்கிறது.