ஐ.டி ரெய்டுக்கு காரணமான ஆம்பூர் தொழிலதிபர்?- அடுத்த குறி `காஸ்ட்லி வேட்பாளர்' | Income tax raid in vellore news

வெளியிடப்பட்ட நேரம்: 13:01 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:35 (03/04/2019)

ஐ.டி ரெய்டுக்கு காரணமான ஆம்பூர் தொழிலதிபர்?- அடுத்த குறி `காஸ்ட்லி வேட்பாளர்'

ஐடி ரெய்டில் சிக்கிய துரைமுருகன், வேட்பாளர் கதிர்ஆனந்த்


காட்பாடியில் துரைமுருகனின் ஆதரவாளர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இந்த ஐ.டி ரெய்டுக்குப் பின்னணியில் ஆம்பூர் தொழிலதிபர் ஒருவர் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

வேலூர் மாவட்டம், காட்பாடி காந்தி நகரில் தி.மு.க பொருளாளர் துரைமுருகனின் வீடு உள்ளது. துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அ.தி.மு.க. கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இருந்தாலும் பெரும்பாலான வன்னியர்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு உள்ளது. இதுதொடர்பாக ரகசிய ரிப்போர்ட்டை உளவுத்துறை அ.தி.மு.க. தலைமைக்கும் பா.ஜ.க. தலைமைக்கும் அனுப்பியது. இதையடுத்து பா.ம.க. தலைமையுடன் அ.தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் ஆலோசனை நடத்தினர். 

கதிர்ஆனந்த்தை எதிர்த்து அ.தி.மு.க.கூட்டணியில் உள்ள புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுகிறார். ஏ.சி.சண்முகத்திடம், பா.ம.க. மூத்த தலைவர்கள், `நீங்கள் வெற்றி பெற்றுவிட்டதாக நினைத்துக்கொள்ளுங்கள்' என்று கூறிவருகின்றனர். ஆனால், களநிலவரம் வேறுமாதிரியாக இருக்கிறது. இந்த நிலையில்தான் கதிர்ஆனந்த் எம்.டி.யாக இருக்கும் கிங்க்ஸ்டன் கல்லூரி, துரைமுருகனின் வீடு ஆகிய இடங்களில் கடந்த 29-ம் தேதி வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். துரைமுருகன் வீட்டிலிருந்து 10 லட்சம் ரூபாய் கைப்பற்றியதாக ஐ.டி. அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல் 1-ம் தேதி மீண்டும் வருமானவரித் துறை அதிகாரிகள் காட்பாடி பள்ளிக்குப்பத்தில் உள்ள துரைமுருகனுக்கு மிகவும் வேண்டப்பட்ட தி.மு.க பிரமுகர் சீனிவாசன் வீடு மற்றும் அவரின் சிமென்ட் குடோனில் சோதனை நடத்தினர். சீனிவாசனின் அக்காள் விஜயா வீட்டிலும் சோதனை நடந்தது. சிமென்ட் மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை ஐ.டி.அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து, தி.மு.க பிரமுகர்களான பெருமாள், கல்புதூரைச் சேர்ந்த தாமோதரன் மற்றும் துரைமுருகன் உதவியாளர் அஸ்கர் அலி வீடுகள் உட்பட மொத்தம் ஏழு இடங்களில் வருமானவரித் துறை அதிகாரிகள்  சோதனையில் ஈடுபட்டனர். கோடிக்கணக்கான ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். 

 ஐ.டி.ரெய்டில் சிக்கிய பணம்

ஐ.டி சோதனைக்குப்பிறகு துரைமுருகனும் அவரின் மகனும் வேட்பாளருமான கதிர்ஆனந்த்தின் நடவடிக்கைகளை ஐ.டி. அதிகாரிகளும் தேர்தல் அதிகாரிகளும் உன்னிப்பாக கவனித்துவருகின்றனர். வேலூரைத் தொடர்ந்து தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான காஸ்ட்லி வேட்பாளரின் தொகுதியில் சோதனை நடத்த ஐ.டி. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. 

ஐ.டி. சோதனைக்கு யார் காரணம் என்று தி.மு.க.வின் உ.பி.க்கள் தீவிர ஆலோசனையில் உள்ளனர். கட்சித் தலைமையிலும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் நிதியுதவி பெறப்பட்டதாகவும் ஆம்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் லட்சக்கணக்கில் நிதியுதவி கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் மீதுதான் வேலூர் தி.மு.க-வினரின் சந்தேகப்பார்வை விழுந்துள்ளது. தற்போது அந்த தொழிலதிபர், ஐ.டி. அதிகாரிகளின் வளையத்துக்குள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஐ.டி. அதிகாரிகள், ``வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய கோடிக்கணக்கான ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனால் பணத்தைப் பறிமுதல் செய்ய மாஸ்டர் பிளான் போட்டோம். ஐ.டி.ரெய்டு குறித்த தகவலை ரகசியமாக வைத்திருந்தோம். எங்களுக்குக் கிடைத்த தகவல் அடிப்படையில் ரெய்டுக்கான குழுவை வேலூருக்கு அனுப்பினோம். குழுவில் உள்ளவர்களுக்குகூட யாருடைய வீட்டில் ரெய்டு என்ற தகவல் தெரியாது. 

 ஐடி ரெய்டு நடந்த சீனிவாசனின் வீடு

துரைமுருகனின் வீட்டுக்குள்ளேயும் வேட்பாளர் நிர்வகிக்கும் கல்லூரிக்குள் நுழைந்தபோதுதான் ரெய்டு குறித்த தகவல் வெளியானது. அங்கு கிடைத்த சில ஆவணங்கள் அடிப்படையில் தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் சிமென்ட் குடோன் மற்றும் அவரின் சகோதரி வீடு, துரைமுருகனுக்கு வேண்டப்பட்டவர்களின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் சோதனை நடத்தினோம். நாங்கள் எதிர்பார்த்தபடி அங்கு கட்டுக்கட்டாக பணம் இருந்தன. அவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். பணத்துக்கான விளக்கத்தை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டுள்ளோம். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் சோதனையில் தொடர்ச்சியாக இன்னும் சில இடங்களில் ரெய்டு நடத்தப்படவுள்ளது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து இனிமேல் யாரும் பணத்தை வெளியில் கொண்டு செல்ல முடியாதளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். பணத்தை இடமாற்றினால்கூட அதை மோப்பம் பிடிக்கவும் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளோம். இந்தப் பணம் யாருடையது என்பது எங்களுக்குத் தெரியும். விசாரணைக்குப்பிறகு அதுகுறித்த தகவல்கள் ஆதாரங்களுடன் வெளியிடப்படும்" என்றனர். 

துரைமுருகன் தரப்பில் பேசியவர்கள், ``கதிர்ஆனந்த்துக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தோல்வி பயத்தில் ஐ.டிரெய்டு நடந்துள்ளது. பிடிப்பட்ட பணத்துக்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் சமர்ப்பிப்பார்கள். வேலூர் தொகுதியில் என்றுமே துரைமுருகன்தான் அமைச்சர். அவர் பார்க்காத அரசியல் சதுரங்க விளையாட்டா... அதுபோல கதிர்ஆனந்த், கல்லூரியில் எம்.டி.யாக இருக்கிறார். இதனால் அவரை எம்.டி. என்றுதான் அழைப்போம். அமைச்சருக்கும் எம்.டி-க்கும் சட்ட ரீதியான பாதுகாவலனாக இருக்க வழக்கறிஞர்கள் டீம் சென்னையிலிருந்து வந்துள்ளது. தீவிர ஆலோசனை நடந்துவருகிறது.

ஐ.டி.ரெய்டு போன்ற சலசலப்புக்கெல்லாம் இந்த பனங்காட்டு நரி அஞ்சாது. ஏனென்றால் நாங்கள் ஜெயலலிதாவிடமே அரசியல் செய்தவர்கள். மேலும், சென்னையில் நடந்த ஐ.டி.ரெய்டில் 15 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. அந்த நபர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர். கொங்கு மண்டலத்தில் உள்ள தொகுதிகளில் உள்ள வார்டுகளின் நம்பரோடு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். வேலூரில் தேர்தலை ரத்து செய்தால் கொங்கு மண்டலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட தொகுதியிலும் தேர்தல் ரத்து செய்யப்பட வேண்டும்" என்றனர். 

தி.மு.க. தரப்பினரிடமிருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் எதிரணியில் இருப்பவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதை வைத்தே பிரசாரத்தில் எதிரணியினர் ஈடுபட்டுவருகின்றனர். ஆனால், தி.மு.க. கட்சித் தலைமையோ எதுகுறித்தும் கவலைவேண்டாம். சட்டரீதியாக பிரச்னைகளை எதிர்கொள்ளலாம் என்ற மெசேஜை வேலூர் தி.மு.க.வினருக்கு அனுப்பியுள்ளது. இதனால் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து துரைமுருகனும் கதிர்ஆனந்த்தும் எதிரணியினரை வீழ்த்துவதற்கான தேர்தல் வியூகங்களை வகுத்துவருவதாக துரைமுருகனுக்கு வேண்டப்பட்டவர்கள் தெரிவித்தனர்.  

வேலூர் மாவட்ட கலெக்டர் ராமனை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க.தரப்பில் முன்வைக்கப்பட்டது. இந்தச் சூழ்நிலையில் ஐ.டி.ரெய்டு நடந்துள்ளதால் பா.ஜ.க-வினர் மீது குற்றம் சாட்டுகின்றனர் தி.மு.க-வினர். இதற்கிடையில் வேலூர் நாடாளுமன்றத் தேர்தல் ரத்தாகுமா என்ற கேள்வி பரபரப்பாக கேட்கப்பட்டுவருகிறது. ஆனால், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக முடிவெடுக்கும் என்று பதிலளித்துள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி.