போலி பேராசிரியர் கொடுத்த சரியான விடை!- போலீஸ் ஐ.ஜி செயலால் கடுகடுத்த நீதியரசர் | TNPSC Examination issue Chennai Hc Questioned

வெளியிடப்பட்ட நேரம்: 13:22 (02/04/2019)

கடைசி தொடர்பு:13:22 (02/04/2019)

போலி பேராசிரியர் கொடுத்த சரியான விடை!- போலீஸ் ஐ.ஜி செயலால் கடுகடுத்த நீதியரசர்

சீருடைப் பணியாளர்கள் தேர்வில் மதிப்பெண் விவகாரத்தில், இல்லாத பேராசிரியர் பெயரில் போலியான ஆவணங்களைத் தாக்கல் செய்த விவகாரத்தில் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக காவல்துறையில் விரல் ரேகைப் பிரிவு உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்தாண்டு டிசம்பர் மாதத்தில் நடைபெற்றது. 202 காலிப் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட தேர்வின் முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியானது. இந்தத் தேர்வில் தமிழக காவல்துறையில் தலைமைக் காவலராக பணியாற்றும் அருணாச்சலம் என்பவர் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் சரியான பதிலளித்தும் இவருக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவில்லை எனத் தெரிகிறது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த அருணாச்சலம்,  கணிதத்தில் வரைபடம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் 6-க்கு நேர் எதிர் எண் எது எனக் கேட்கப்பட்டது. நான் ஒன்று எனச் சரியான பதிலளித்தும் எனக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவில்லை. எனக்குத் தகுந்த மதிப்பெண்கள் வழங்க தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத் ஆஜரானார். கணிதம் தொடர்பான கேள்விக்கு மனுதாரர் 5 என்ற சரியான விடைக்குப் பதிலாக 1 எனத் தவறாக பதிலளித்துள்ளதாகக் கூறினார். இதைக்கேட்ட நீதிபதி, ஐஐடி பேராசிரியரிடம் இதுதொடர்பாக அறிக்கை பெற்று தாக்கல் செய்யுமாறு தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, ஐஐடி பேராசிரியர் டி.மூர்த்தி என்பவரிடம் அறிக்கை பெற்றதாகவும் அவரும் 5 தான் சரியான விடை என்றார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணையின்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தான் பெற்ற ஒரு தகவலின் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதைப் பார்த்ததும் நீதிபதி கடும் கோபமடைந்தார். அதாவது அப்படி ஒரு பேராசிரியர் சென்னை ஐஐடியின் கணிதப்பிரிவில் பணியாற்றவில்லை என்பதுதான் அந்தத் தகவல். இது எப்படி நடந்தது என அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். 

இந்த விவகாரத்தில் சில முறைகேடுகள் நடந்துள்ளது என அரசுத் தரப்பு வழக்கறிஞர் கூறினார். மேலும் சீருடைப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் செயலாளர் ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் அளித்த கடித்தத்தை சமர்ப்பித்தார். அதில்  ‘இந்த விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையரிடம் சீருடைப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாணையத்தை ஏமாற்றும் நோக்கில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்த ஜி.வி.குமார் , டி.மூர்த்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதனால் மேலும் கோபமடைந்த நீதிபதி, எதற்காகப் போலி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஜி.வி.குமார், டி.மூர்த்தி இவர்கள் யார். இதுதொடர்பாக ஐ.ஜி செந்தாமரைக்கண்ணன் இன்று விரிவான பதிலளிக்க வேண்டும் என வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.