ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வீடுகளில் இல்லாத பணமா தி.மு.க-வினர் வீட்டில் இருக்கப்போகிறது?- முத்தரசன் | Muthurasan about money and Income tax Raid

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:35 (03/04/2019)

ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் வீடுகளில் இல்லாத பணமா தி.மு.க-வினர் வீட்டில் இருக்கப்போகிறது?- முத்தரசன்

``கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடுவதால் எங்களது கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. ஆனாலும், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்பதே எங்களின் பிரதான நோக்கம்'' என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

முத்தரசன்

புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அவர்,  'முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீடுகளில் இல்லாத பணமா தி.மு.க-வினர் வீட்டில் இருக்கப்போகிறது. வருமான வரித்துறையைக் கொண்டு அ.தி.மு.க-வை அடிபணிய வைத்துத்தான் தமிழகத்தில் அ.தி.மு.க-வோடு பா.ஜ.க கூட்டணி அமைத்தது. அதேபோல், தி.மு.க-வினர் வீடுகளில் ரெய்டு நடத்தி தி.மு.க-வினரையும் அடிபணிய வைத்துவிடலாம் என நினைப்பது ஒருபோதும் நடக்காது. அ.தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை. 

கடந்த தேர்தலில் வெளிநாடுகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வோர் இந்தியரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் வீதம் வரவு வைக்கப்படும். ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளிப்போம். விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவோம் என்று பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களைப் பா.ஜ.க அரசு நிறைவேற்றவில்லை. விரக்தியில் உள்ள நாட்டு மக்கள் மத்தியில் ஆட்சி மாற்றத்தை உருவாக்குவார்கள். அதேபோல், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். கேரளாவில் ராகுல்காந்தி போட்டியிடுவதால் எங்களது கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. ஒவ்வொரு மாநிலக் கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை உண்டு. ஆனாலும், பா.ஜ.க-வைத் தோற்கடிக்க வேண்டுமென்பதே எங்களின் பிரதான நோக்கம்" என்றார்.