`தம்பிதுரைக்கு ஆரத்தி எடுத்தோம், கிழிந்த ரூபாய் கொடுத்துட்டாங்க!' - அ.தி.மு.க-வினரை வசைபாடிய பெண்கள் | ``50 rupee note given was damaged!" - Ladies angry in Thambidurai campaign!

வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:36 (03/04/2019)

`தம்பிதுரைக்கு ஆரத்தி எடுத்தோம், கிழிந்த ரூபாய் கொடுத்துட்டாங்க!' - அ.தி.மு.க-வினரை வசைபாடிய பெண்கள்

தம்பிதுரை பிரசாரம்

தம்பிதுரை பிரசாரம் செய்யப் போகும் இடங்களில் எல்லாம், அந்தந்தப் பகுதி பெண்களை ஆரத்தி எடுக்க வைக்க அ.தி.மு.கவினர் மெனக்கெடுகிறார்கள். இந்நிலையில், ஒரு பகுதியில் அப்படி தம்பிதுரைக்கு ஆரத்தி எடுத்த பெண்கள் சிலருக்கு, கிழிந்த 50 ரூபாய் தாள்களை கொடுத்து ஏமாற்றிவிட்டதாக சம்பந்தப்பட்ட பெண்கள் குமுறுகிறார்கள்.

தம்பிதுரைக்கு ஆரத்தி எடுத்த பெண்கள் வரிசையில்

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி நடைபெற இருக்கும் மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் சூடுப்பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் தம்பிதுரையும், தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியும் களத்தில் இருக்கிறார்கள். தவிர, அ.ம.மு.க சார்பில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.எஸ்.என்.தங்கவேலுவும், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மருத்துவர் ஹரிஹரனும் களமிறங்கி இருக்கிறார்கள். அனைவரும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் குதிக்க, களைகட்டத் தொடங்கி இருக்கிறது கரூர் நாடாளுமன்றத் தொகுதி. இந்நிலையில், தம்பிதுரை தேர்தல் பிரசாரம் போகும் இடங்களில் எல்லாம் அவரை ஆரத்தி எடுத்து வரவேற்க பெண்களை அ.தி.மு.கவினரே தலைக்கு 50 கொடுத்து தயார்ப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. அப்படி, கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் உள்ள வெள்ளியம்பாளையம் காலனிப் பகுதியில் தம்பிதுரை பிரசாரம் மேற்கொண்டபோது, அவருக்கு ஆரத்தி எடுத்த பெண்கள் சிலருக்கு, கிழிந்த ஐம்பது ரூபாய் தாள்களை வழங்கிவிட்டதாக சம்பந்தப்பட்ட பெண்கள் குமுறுகிறார்கள். 

ஆரத்தி எடுத்த பெண்கள்

இதுபற்றி, அந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், ``எங்களை உள்ளூர் அ.தி.மு.கவினர் சிலர் அணுகி, `தம்பிதுரை அண்ணன் ஓட்டு கேட்டு வர்றார். நீங்க எல்லாம் வந்து ஆரத்தி எடுக்கணும்' என்று கேட்டதும். அதுக்கு நாங்க, 'எங்களுக்கு சோலி இருக்கு. இந்த வேகாத வெயில்ல அவருக்காக கால்கடுக்க காத்திருக்க முடியாது'னு முதல்ல மறுத்துட்டோம். ஆனால், பிடிவாதம் பண்ணி எங்களை கூப்புட்ட அவங்க, 'அவர் வர்ற நேரத்துல வந்தா போதும். ஆரத்தி எடுக்கிற உங்க ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஐம்பது ரூபாய் தர்றோம்'னு சொன்னாங்க. மனசு கேட்காமப் போனோம். தம்பிதுரை வந்ததும், அவருக்கு ஆரத்தி எடுத்தோம். அவர் போனபிறகு, தலைக்கு ஐம்பது ரூபாய் கொடுத்தாங்க. ஆனா, ஆரத்தி எடுத்த பத்து பெண்களுக்குப் பணம் தரலை. `ஏன்'னு கேட்டதுக்கு, `எங்ககிட்ட உங்களிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்த பணம் அவ்வளவுதான்'னு கையை விரிச்சுட்டாங்க. அதைவிட கொடுமையா, நாலஞ்சு பேருக்கு கிழிஞ்ச, செல்லாத ஐம்பது ரூபாய் தாள்களை கொடுத்துட்டாங்க. இது நம்பிக்கை துரோகம்" என்றார்கள் கொதிப்பாக!.