துபாய் நகரில் உணவின்றி அல்லாடிய 36 தமிழர்கள் - பத்திரமாக மீட்ட 'மக்கள் பாதை'! | 36 tamilans rescued in dubai cities

வெளியிடப்பட்ட நேரம்: 15:25 (02/04/2019)

கடைசி தொடர்பு:15:25 (02/04/2019)

துபாய் நகரில் உணவின்றி அல்லாடிய 36 தமிழர்கள் - பத்திரமாக மீட்ட 'மக்கள் பாதை'!

துபாய் நகரப் பகுதிகளில் உணவு, இருப்பிடம், வேலை இல்லாமல் அல்லாடிய 36 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உதவியை சகாயம் ஐஏஎஸ்-ஸின் 'மக்கள் பாதை' அமைப்பினர் மேற்கொண்டுவருகின்றனர். 

தமிழர்கள்

இதுகுறித்து மக்கள் பாதை அமைப்பினரைத் தொடர்புகொண்டு பேசுகையில், ``துபாயின் பர்துபாய் பகுதியில், தமிழர்கள் வேலை இல்லாமல் உணவுக்குக் கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அங்கு சென்றோம். அங்கு, 11 தமிழர்கள் இருந்ததைக் கண்டுபிடித்தோம். இதுபோல, நிறையத் தமிழர்கள் தேரா உள்ளிட்ட பகுதிகளில் வேலை இல்லாமல் தெருவோரங்களில் கஷ்டப்படுவதாகக் கூறப்பட்டது. உடனே நாங்கள் கள ஆய்வில் இறங்கினோம். அப்போது  தேரா, பர்துபாய், சத்வா பகுதிகளில் உணவு, இருப்பிடம், வேலை இல்லாமல் இருந்த 36  தமிழர்களைத் தெருக்களிலும்  பூங்காக்களிலும் கண்டுபிடித்தோம்

அவர்களில் 10 பேருக்கு வேலையும் தங்கும் அறையும் உணவும் ஏற்பாடுசெய்து கொடுக்கப்பட்டுள்ளது. 4 நபர்களைத் திரும்ப அதே நிறுவனங்களில் வேலைசெய்ய சேர்த்துவிடப்பட்டுள்ளது. மற்றவர்கள், தாயகம் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். இந்திய துணைத் தூதரகத்தின் பரிந்துரைப்படி, அவீர் இமிக்ரேஷன் மூலமாக அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று, அவர்கள் அங்கு இறக்கி விடப்படுவார்கள். இமிக்ரேஷன் பரிந்துரைப்படி பயணச்சீட்டு கொடுத்து அவர்கள் தாயகம் அனுப்பிவைக்கப்படுவார்கள்.

தமிழர்கள்

இவர்களில் பலருக்கு வேலை தரப்படாமல், ஒழுங்காக சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டுள்ளனர். மேலும், விடுமுறை எடுத்தால் அடிப்பது உள்ளிட்ட பல்வேறு கொடுமைகளையும் அனுபவித்துவந்துள்ளனர். இங்கு வரும் தமிழர்கள் சந்திக்கும் முக்கியப் பிரச்னை இது தான். ``படிக்காதவர்கள் நம் ஊரிலேயே விவசாயம் அல்லது வேறு ஏதாவது வேலைசெய்து கௌரவமாக வாழுங்கள். அதை விடுத்து, இங்குள்ள போலி கம்பெனிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள்." இதுதான் வெளிநாடு வர விரும்பும் தமிழர்களுக்கு நாங்கள் சொல்லிக்கொள்ள விரும்புவது. படிக்காமல் இங்கு வருபவர்கள், மோசமான நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். வசிக்க வீடு இல்லாமல், சாப்பிட உணவு இல்லாமல் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்" என்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க