`இனிமேல்தான் பிரச்னையே!' வரப்போகும் வறட்சியும், மிரட்டும் புள்ளிவிவரங்களும் | Data shows we will suffer from big drought

வெளியிடப்பட்ட நேரம்: 16:56 (02/04/2019)

கடைசி தொடர்பு:16:56 (02/04/2019)

`இனிமேல்தான் பிரச்னையே!' வரப்போகும் வறட்சியும், மிரட்டும் புள்ளிவிவரங்களும்

பிரசார பாணியில் சொல்லவேண்டும் என்றால் `வரப்போகிறது வறட்சி; அதற்கு இந்தப் புள்ளிவிவரங்களே சாட்சி!'

`இனிமேல்தான் பிரச்னையே!' வரப்போகும் வறட்சியும், மிரட்டும் புள்ளிவிவரங்களும்

ர்நாடக மாநிலம், பெங்களூரின் தென் கிழக்குப் பகுதியில் உள்ள பெல்லண்டூர், பரந்து விரிந்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள், கேளிக்கை விடுதிகள், மால்கள் மற்றும் மல்டிபிளெக்ஸ்கள் ஆகியவை அதிகமாகக் கொண்டு தகவல்தொழில்நுட்பப் புரட்சியால் முன்னேறியிருக்கிறது. ஆனால், இப்போது அவையனைத்தும் வெறும் காட்சிப்பொருள்களாக நிற்கின்றன. இதற்கு முன்னர் அப்பகுதியில் தண்ணீர் உபயோகம் அமெரிக்க சிலிக்கான் வேலியின் நீர்ப் பயன்பாட்டை ஒத்திருந்தது. குழாயைத் திறந்தால் தண்ணீர் வந்துகொண்டிருந்தவரை எல்லாம் சரியாகத்தான் போய்க் கொண்டிருந்தது. சரமாரியாகத் தண்ணீரை உபயோகித்துக் கொண்டிருந்தனர், அம்மக்கள். ஆனால், இப்போது நகருக்குள் வரும் டேங்கர் லாரிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீர் கொடுக்கும் டேங்கர் லாரிகள்தாம் இப்போது அவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்கிறது, காரணம் தண்ணீர்ப் பற்றாக்குறை.

வறட்சி

தண்ணீர்ப் பற்றாக்குறைக்குப் பின்னர், டேங்கர் உரிமையாளர்கள், அப்பகுதியில் டேங்கருக்கு 100 ரூபாய் விலை உயர்த்தி விற்பனை செய்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன்னர் பெங்களூருவில் உள்ள 110 கிராமங்களில் ஒன்றாக பெல்லண்டூர் இருந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர்தான் நகரத்தின் வரம்புக்குள் வந்தது. அங்கு இன்னும் குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. ஆனால் பெங்களூருவின் அதிகமான வருமானவரி செலுத்தும் வார்டு பெல்லண்டூர் இருந்தும் கூட, தண்ணீர் சரியாக கிடைக்கவில்லை எனக் குற்றம் சாட்டுகிறார்கள் அம்மக்கள். அப்பகுதியில் சுமார் 800 அடிக்கும் மேல் போர்வெல் அமைத்தும் தண்ணீர் வரவில்லை, அதனால் 6,000 லிட்டர் கொண்ட தனியார் டேங்கர் லாரிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆண்டின் தண்ணீர்ப் பற்றாக்குறை முன்பே ஆரம்பித்துவிட்டது. இப்போது ஒரு டேங்கருக்கு 700 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை தண்ணீருக்காக அம்மக்கள் செலவழித்துக் கொண்டிருக்கிறார்கள். தண்ணீருக்கான வரி ஒழுங்குபடுத்தப்படாததால், 300 வீடுகள் கொண்ட அப்பார்ட்மென்ட் ஒன்றின் தண்ணீருக்கான செலவு, கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 4,50,000 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. அப்போது தண்ணீர்ப் பற்றாக்குறையின் அளவை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். இந்தத் தீவிர பாதிப்பு அடுத்ததாக இந்திய நகரங்களில் பிரதிபலிக்கலாம். அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்தியாவின் பல நகரங்களில் தண்ணீர்ப் பிரச்னை உச்சத்தில் இருக்கும். சாதாரண பருவமழையைக் கூட சேமித்து வைக்க முடியாமல் இருப்பதாலும், அதிக பயன்பாடும் தண்ணீர்ப் பிரச்னையை அதிகப்படுத்துகின்றன. 

வறட்சி

மும்பை அதிகாரிகள் கடந்த நவம்பர் மாதமே தண்ணீரை பத்து சதவிகிதம் வரை குறைத்து வழங்க ஆரம்பித்துவிட்டனர். சென்னையில் வழக்கமாகக் கொடுக்க வேண்டிய தண்ணீரை விட 300 மில்லியன் தண்ணீரின் அளவு குறைவாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறது சென்னை மாநகராட்சி. இன்னும் வறட்சி வரவில்லை, அடுத்த பருவமழை வரைக்கும் இப்போது வழங்கப்படும் நீரைத் தொடர்ந்து வழங்குவதாக உறுதியாகச் சொல்கிறது, சென்னை நகர நீர் வழங்கல் துறை.

ஆனால், நிலை முற்றிலும் மாறாக இருக்கிறது. உதாரணத்திற்கு சென்னை வேளச்சேரிப் பகுதியில் வறட்சியை மக்கள் உணர ஆரம்பித்துவிட்டனர். சென்னை மாநகர குடிநீர் ஆணையத்தில் மூன்று நாள்களுக்கு முன்னரே முன்பதிவு செய்து தண்ணீரைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள், மக்கள். கடைசியாக முன்பதிவு செய்து 7 நாள்கள் வரை தண்ணீர் வராமல் அவதிப்பட்டிருக்கிறார்கள். அப்பகுதி மக்கள் தனியாரிடம் 1200 லிட்டரை 1500 ரூபாய்க்கு வாங்கிப் பயன்படுத்தி வருகிறார்கள். இதுவே மாநகர குடிநீர் ஆணையத்திடமிருந்து 9,000 லிட்டருக்கு 700 ரூபாய் செலவாகிறது. இது மிகவும் மோசமான ஒரு நிலை. ஆனால், மாநகர குடிநீர் ஆணையம் தண்ணீரை விரைவாகக் கொண்டு வருவது இல்லை.

நகரங்களின் நீர் வழங்கல் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது கொஞ்சம் அச்சம் எழத்தான் செய்கிறது. கடந்த ஆண்டு நிதி ஆயோக் தெரிவித்த தகவலின்படி, டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை உட்பட 21 நகரங்கள் 2020-ம் ஆண்டில் நிலத்தடி நீரை முற்றிலுமாக இழக்கும் எனத் தெரிவித்தது. இதனால் 100 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவர் என எச்சரித்தது. சில மாதங்களுக்கு முன்பு அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் தெரிவித்த தகவலில், தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் நிலைமை, உலகெங்கிலும் பெங்களூரு உட்பட 10 நகரங்களில் ஏற்படும் என அதிர்ச்சி தகவலைக் கொடுத்திருக்கிறது. 

ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் நிலத்தடி நீர் குறைந்து வருவது கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் 30 முதல் 32 கன மீட்டர் நிலத்தடி நீரை இழந்து வருவதாக தேசிய புவிசார் ஆராய்ச்சி மைய இயக்குநர் விரேந்திர திவாரி தெரிவித்திருக்கிறார். 
 

வறட்சி

வாட்டர் எயிட் (Water Aid) அறிக்கையானது, 2000-ம் ஆண்டிற்கும், 2010-ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் நிலத்தடி நீர்ப் பற்றாக்குறை அதிகமாகியிருப்பதை உணர்த்துகிறது. ஒரு நபருக்குக் கிடைக்கும் தண்ணீரின் அளவு 70 சதவிகிதமாகக் குறைந்திருப்பதைக் காட்டுகிறது. 

நகரங்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நதிகள் `நதிகளாக' இல்லை என்பதே அதற்குக் காரணம். மேலும், முக்கிய பருவகாலங்களில் நீர் சேமிப்பின்மை, நீர்க் கசிவு மற்றும் நீர்த் திருட்டைக் கண்காணிக்க எந்தவிதமான முன்னெடுப்பையும் அரசு எடுக்கவில்லை. கர்நாடகா தொடங்கி, மும்பை, டெல்லி, சென்னை உட்பட இந்திய நகரங்கள் இனி வறட்சியின் பிடியில் இருக்கும். அதனால் இரண்டு மாதங்களுக்கு முன்பே அந்த நகர மக்கள் கோடைக்கால பற்றாக்குறைக்குத் தயாராவது அவசியம். கடந்த ஆண்டு கேப்டவுன் நெருக்கடி உச்சகட்டத்தில், உள்நாட்டுப் பயனர்கள் ஒரு நாளுக்கு 50 லிட்டர் தண்ணீருக்கு மேல் பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை. அனைத்து இந்திய நகரங்களுக்கு இதேபோன்ற நிலை ஏற்படும் முன்னர் தவிர்ப்பது அரசின் முக்கியக் கடமையாகும். அதில் மக்களின் பங்கும் இருக்கிறது.  


டிரெண்டிங் @ விகடன்