`சிசிடிவி பதிவு என்னிடம் இருக்கு, உடனடியாக கடற்கரைக்கு வாருங்கள்!'- மாணவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த காவலர் | police gives punishment for students who throw the garbages

வெளியிடப்பட்ட நேரம்: 16:16 (02/04/2019)

கடைசி தொடர்பு:09:28 (05/04/2019)

`சிசிடிவி பதிவு என்னிடம் இருக்கு, உடனடியாக கடற்கரைக்கு வாருங்கள்!'- மாணவர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த காவலர்

காவலர்

சென்னை பெசன்ட் நகரில் பிறந்தநாள் கொண்டாடி, குப்பைகளை வீசிச்சென்ற மாணவர்களுக்கு, காவலர் நூதன முறையில் தண்டனை கொடுத்த சம்பவம், காவலர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. 

சென்னை சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர், எபின் கிறிஸ்டோபர். இவருக்கு, கடந்த 29-ம் தேதி பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரையில் பணி ஒதுக்கப்பட்டது. கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட இவர், அங்கு குப்பைகள் சிதறிக்கிடந்ததைப் பார்த்ததும், அவர் மனவேதனையடைந்தார். குப்பையில் கிடந்தது, கேக் வைக்கும் அட்டைப் பெட்டிகள் எனத் தெரியவந்தது. பிறந்தநாள் கொண்டாடியவர்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதைக் கண்டுபிடித்த காவலர் எபின் கிறிஸ்டோபர், அவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடிவுசெய்தார். 

இதையடுத்து, கேக் அட்டைப் பெட்டியில் உள்ள விவரங்கள் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கினார். சிசிடிவி கேமரா மூலம் பிறந்தநாள் கொண்டாடியவர்களை அடையாளம் கண்டார். விசாரணையில், சாஸ்திரி நகரில் உள்ள பேக்கரியில் கேக்குகள் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து, பிறந்தநாள் கொண்டாடியவர்களின் செல்போன் நம்பர்களைப் பெற்ற காவலர், அவர்களுக்கு போன் செய்தார். அப்போது அதில் பேசியவர்கள், 'எங்களுக்கும் அதற்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை' என்று மறுத்தனர். அப்போது காவலர், 'நீங்கள் பிறந்தநாள் கொண்டியதற்கான சிசிடிவி கேமரா பதிவுகள் என்னிடம் உள்ளன. நீங்கள் உடனடியாக கடற்கரைக்கு வாருங்கள்' என்று போனில் தெரிவித்தார். 

 காவலர்

இதையடுத்து, பிறந்தநாள் கொண்டாடியவர்கள் அங்கு வந்தனர். காவலர் எபின் கிறிஸ்டோபர், அவர்களிடம் பேசினார். ``நாம்தான் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் எல்லோரும் மாணவர்கள். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய நீங்களே இப்படிச் செய்யலாமா'' என்று கூறினார். அதைக் கேட்ட மாணவர்கள் தர்மசங்கடமாக உணர்ந்தனர். இதையடுத்து, கேக் வைத்திருந்த அட்டைப் பெட்டிகளைச் சுத்தம்செய்து, குப்பைத் தொட்டியில் போடும்படி காவலர் கூறினார். இதையடுத்து, துடைப்பம் மூலம் மாணவர்கள் அந்த இடத்தை சுத்தம்செய்தனர். 

இதையடுத்து காவலர், வழக்கம்போல பணிக்குச் சென்றுவிட்டார். இந்தத் தகவல், காவல் உயரதிகாரிகளின் கவனத்துக்குச் சென்றுள்ளது. அவர்கள், காவவர் எபின் கிறிஸ்டோபரை அழைத்து விவரம் கேட்டனர். அப்போது அவர், நடந்த விவரங்களைத் தெரிவித்தார். இதையடுத்து, காவலர் எபின் கிறிஸ்டோபரைப் பாராட்டினர். 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``கடற்கரையில் குப்பை கிடந்தால் நமக்கு என்ன என்று பலர் அந்த இடத்தைக் கடந்து செல்வதுண்டு. ஆனால், காவலர் எபின் கிறிஸ்டோபர், சமூக அக்கறையோடு செயல்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கவும் அவர் முடிவுசெய்துள்ளார். இதற்காக, பிறந்தநாள் கொண்டாடியவர்களைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாகவே அந்த இடத்தை சுத்தம்செய்துள்ளார். காவலர் எபின் கிறிஸ்டோபரின் செயலை துணை கமிஷனர் செஷாங்க் சாய் மற்றும் அவருடன் பணியாற்றும் சக காவலர்கள் பாராட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் ஒரு முன்னுதாரணம். இனிமேல், ஒவ்வொரு காவலரும் சமூக அக்கறையோடு செயல்பட வேண்டும் என்று காவலர் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்" என்றனர்.  

காவலர்

இதுகுறித்து எபின் கிறிஸ்டோபர் கூறுகையில், ``எனக்கு சொந்த ஊர் நெல்லை மாவட்டம், நாங்குநேரி அருகில் உள்ளது அம்பலம் கிராமம். மவுன்ட் ஆயுதப்படையில் பணியாற்றிவிட்டு, சாஸ்திரி நகரில் தற்போது வேலைபார்த்துவருகிறேன். எலியர்ட்ஸ் பீச்சில், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 1 மணி வரை எனக்குப் பணி. கடந்த வாரத்தில் நான் பணிக்கு வந்தபோது, அந்தப் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபடும் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகளில் சிலர் என்னிடம், பீச்சில் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் அசிங்கப்படுத்திவிட்டு சென்றுள்ளதாகக் கூறினர். இதனால், சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தேன்.

கேக் அட்டைப் பெட்டியில் இருந்த பேக்கரியின் முகவரிக்குச் சென்று விசாரித்தேன். 19 கேக் பெட்டிகளைப் பிறந்தநாள் கொண்டாடியவர்கள் வாங்கியது தெரியவந்தது. இரண்டு கார்களில் வந்து, பிறந்தநாளைக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அவரின் நண்பர்கள் கொண்டாடியுள்ளனர். அவர்களைத் தொடர்புகொண்டு, கடற்கரையில் வீசிச்சென்ற குப்பைகளை அகற்றினேன். சம்பந்தப்பட்டவர்கள் மாணவர்கள் என்பதால், காவல் உயரதிகாரிகள் மன்னித்து விட்டுவிட்டனர். சமூக அக்கறையோடு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும்" என்றார்.

காவலர் எபின் கிறிஸ்டோபரின் இந்தச் செயல்குறித்து கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. இதனால், விரைவில் ஏ.கே.விஸ்வநாதனிடம் காவலர் எபின் கிறிஸ்டோபர் பாராட்டப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.