`காவிரி ஏன் இடம்பெறவில்லை?'- தி.மு.க, அ.தி.மு.க-வைச் சாடும் காவிரி மீட்புக்குழு | Why did not Cauvery take place in election promises: DMK and AIADMK condemned by CPI

வெளியிடப்பட்ட நேரம்: 16:50 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:36 (03/04/2019)

`காவிரி ஏன் இடம்பெறவில்லை?'- தி.மு.க, அ.தி.மு.க-வைச் சாடும் காவிரி மீட்புக்குழு

``நாடாளுமன்றத் தேர்தல் பிரசார கூட்டங்களில், தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் காவிரிப் பிரச்னைகுறித்துப் பேசாமல் இருப்பது தமிழ்நாட்டிற்கு செய்யும் துரோகம்'' என காவிரி உரிமை மீட்புக்குழு ஆலோசகர் டாக்டர் பாரதிசெல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஸ்டாலின்

இதுகுறித்து நம்மிடம் பேசிய டாக்டர் பாரதிசெல்வன், ‘’காவிரிப் பிரச்னையில் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் கண்டிக்க விரும்பாத தி.மு.க தலைவர் ஸ்டாலினும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தமிழக உரிமைகளை எப்படி மீட்டெடுப்பார்கள். இவர்களுக்கு, தமிழ்நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும். நாகப்பட்டினத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’’நாங்கள் நீருக்கான சட்டப்போராட்டத்தில் களைத்துபோய்விட்டோம். அதனால், மாறுபட்டு சிந்திக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. கோதாவரி இணைப்பின்மூலம் நீர்ப் பிரச்னையைத் தீர்ப்போம் எனக் கூறியுள்ளார். உரிமையுள்ள காவிரி நீரைப் பெற்றுத்தர முடியாத முதல்வர், நமக்கு உரிமை இல்லாத கோதாவரி நீரைப் பெற்றுத்தருகிறேன் என்று கதைவிட்டு, நமது காதில் பூ சுற்றுகிறார். இதை நம்புவதற்கு தமிழர்கள் ஏமாளிகள் அல்ல.

மத்திய அரசு, முழுநேரத் தலைவரைக்கொண்ட, அதிகாரமுள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைக்காதது பற்றியோ, மேக்கேதாட்டு அணைக்கு திட்ட அறிக்கை தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது பற்றியோ, எடப்பாடி பேசாமல் தவிர்ப்பது ஏன்? நமது பாரம்பர்ய காவிரி நீர் உரிமையைக் காப்பாற்றவேண்டிய மாநில முதல்வரே இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற தொனியில் பேசினால், பாரதிசெல்வன்இனி, கர்நாடகமும் மத்திய அரசும் எப்படி நமக்கு காவிரி நீர் உரிமையைக் கொடுப்பார்கள்? கூட்டணிக் கட்சியான பா.ஜ.க தமிழ் இனத்திற்கு இழைக்கும் துரோகத்தை வாக்காளர்களின் கவனத்திலிருந்து மறைப்பதற்காகவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்படி நடந்துகொள்கிறார். எதிர்காலத்தில், தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தமிழக உரிமைகளை மத்திய அரசுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் காவு கொடுக்கத் தயங்க மாட்டார்.

தி.மு.க தலைவர் ஸ்டாலினின் போக்கும் இதேபோல்தான் இருக்கிறது. அவரும் தனது தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் அதிகாரமுள்ள காவிரி ஆணையம் பற்றியோ, மேக்கேதாட்டு அணைப் பிரச்னை பற்றியோ பேசுவதில்லை. அவருடைய நோக்கமும் பல ஆண்டுகளாக மத்திய ஆட்சியில் இருந்த காவிரிப் பிரச்னையில் தமிழகத்தை வஞ்சித்த கூட்டணிக் கட்சியான காங்கிரஸின் துரோகத்தை தமிழக வாக்காளர்களின் கவனத்திலிருந்து மறைக்க முயல்கிறார். மத்திய அரசையும், கர்நாடகத்தையும் கண்டிக்கக் கூடாது என்ற தனது தந்தை கருணாநிதியின் கொள்கையை ஸ்டாலின் தீவிரமாகக் கடைப்பிடிக்கிறார். இந்த இரண்டு கூட்டணிகளுமே தமிழக நலன்களை மத்திய அரசுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் காவுகொடுத்துவிட்டு, மாநில ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்து, தமிழக இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கும் கூட்டணிகள்தான்“ என்று கொந்தளிப்புடன் தெரிவித்தார்.