ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களைப் பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை! | Prohibition to publish the Rafel corruption book

வெளியிடப்பட்ட நேரம்: 16:22 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:37 (03/04/2019)

ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்களைப் பறிமுதல் செய்தது தேர்தல் பறக்கும் படை!

பாரதி புத்தகாலயம் வெளியிடவிருந்த `நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' என்ற புத்தகத்தை வெளியிட விடாமல், தடைசெய்து புத்தகங்களையும் பறிமுதல் செய்திருக்கிறது தேர்தல் பறக்கும் படை.

                                                        ரபேல்

சென்னைத் தேனாம்பேட்டையில் உள்ள பாரதி புத்தகாலயம் சார்பில், எஸ்.விஜயன் எழுதிய `நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்' இன்று மாலை புரசைவாக்கத்தில் வெளியிடப்பட இருந்தது. ஆனால், அங்கு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பாரதி புத்தகாலயத்திலேயே வெளியிட இருந்தார்கள். இந்நிலையில், ஆயிரம் விளக்குப் பகுதி தேர்தல் பறக்கும் படையினர், கடையில் இருந்த சுமார் 150 புத்தகங்களை கைப்பற்றிச் சென்றிருக்கின்றனர்.

                                                   

இதுகுறித்து பாரதி புத்தகாலயத்தின் நாகராஜனைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``புத்தகங்களை விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. உலகம் முழுவதும் புத்தகங்களை வெளியிடுவது ஜனநாயக உரிமை. புத்தகங்களை ஒடுக்குவது பாசிச அரசின் அடையாளம். இந்தப் புத்தகத்தில், தேர்தல் தொடர்பாக எந்தச் செய்தியும் இல்லை. ரபேல் ஊழல் குறித்தும், நீதிமன்றத்தில் மத்திய அரசு கூறிய பொய்களைத்தான் இந்தப் புத்தகத்தில் தெரிவித்திருந்தோம்.

                                                                       நாகராஜன்

ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற அரசியல் சார்ந்த புத்தகங்களை வெளியிட்டு வருகிறோம். தேர்தல் ஆணையத்தின் இந்தப் போக்கு வருத்தமளிக்கிறது. நீதிமன்றத்தை நாடி, இந்தப் புத்தகத்தை வெளியிடுவோம். தேர்தல் ஆணையம் எழுத்துபூர்வமாக எந்தத் தடைச் சான்றும் கொடுக்கவில்லை. ஆனால், புத்தகங்களை மட்டும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்'' என்றார்.