`இவர் வல்லமைமிக்க வேட்பாளர், உங்களுக்காக வாதாடுவார், போராடுவார்!'- அ.தி.மு.க-வுக்கு வாக்கு கேட்ட ஜி.கே.வாசன் | He is a formidable candidate, will argue with you, will fight! '- GK Vasan to vote for AIADMK

வெளியிடப்பட்ட நேரம்: 17:10 (02/04/2019)

கடைசி தொடர்பு:10:37 (03/04/2019)

`இவர் வல்லமைமிக்க வேட்பாளர், உங்களுக்காக வாதாடுவார், போராடுவார்!'- அ.தி.மு.க-வுக்கு வாக்கு கேட்ட ஜி.கே.வாசன்

``தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லவும், 100 சதவிகிதம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைக் கொண்டுவரவும் வேண்டும் என்றால் எல்லோராலும் எளிமையாக அணுகக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரால் மட்டுமே முடியும்" என்று ஜி.கே.வாசன் பேசினார்.

ஜி.கே.வாசன்

பெரம்பலூர் மக்களவை தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் சிவபதியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் பெரம்பலூர் மேற்கு வானொலி திடலில் நடைபெற்றது. கூட்டத்துக்குப் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் ஆர்.டி.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், `அ.தி.மு.க தலைமையில் அமைந்துள்ளது ஒரு வெற்றிக் கூட்டணி. உள்ளொன்று வைத்து புறம் ஒன்று பேசாத கூட்டணி. தி.மு.க தலைமையிலான கூட்டணி பெரும் சந்தர்ப்பவாத கூட்டணி. இதற்கு ஓர் உதாரணம் கேரளாவில் போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை எப்படியாவது தோற்கடிக்கப்போவதாக அம்மாநில கம்யூனிஸ்ட் கட்சியினர் பகிரங்கமாகக் கூறி வருகின்றனர்.

அதே கம்யூனிஸ்ட் கட்சியினர் தமிழகத்தில் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினருடன் அமர்ந்து வாக்கு கேட்டு பிரசாரம் செய்கின்றனர். இவர்களால் தமிழக மக்களை ஏமாற்ற முடியாது. மக்கள் ஏமாறவும் மாட்டார்கள். மதவாதம் எனும் வார்த்தையை எதிர்க்கட்சியினர் உச்சரிக்காதபடி தமிழக மக்கள் அந்த அணியினருக்கு வரும் தேர்தலில் தீர்ப்பு வழங்குவார்கள். சிறுபான்மையினர் நலன் பற்றிப் பேசும் காங்கிரஸ் கட்சி தற்போது நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராகப்  போட்டியிடச் சிறுபான்மையினர் ஒருவருக்குக்கூட சீட் வழங்காதது ஏன்?

தமிழகம் தொடர்ந்து வளர்ச்சிப் பாதையை நோக்கிச் செல்லவும், 100 சதவிகிதம் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைக் கொண்டுவரவும் வேண்டும் என்றால் எல்லோராலும் எளிமையாக அணுகக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோரால் மட்டுமே முடியும். மக்களாகிய நீங்கள் வளர்ச்சிக்காக வாக்களியுங்கள். உங்களுக்கான நலத்திட்டங்களை வாதாடி, போராடிப் பெற்றுத் தரும் வல்லமை மிக்க வேட்பாளர் சிவபதிக்கு வாக்களியுங்கள்" எனப் பேசினார்.

இக்கூட்டத்தில் பெரம்பலூர் தொகுதி எம்.எல்.ஏ இரா.தமிழ்ச்செல்வன், நகரச் செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.