’அனிதா மரணத்துக்குக் காரணமானவர்களைத் தண்டியுங்கள்!’ உதயநிதி ஸ்டாலின் காட்டம்! | Udhayanithi Stalin campaigned for DMK candidate in nellai

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/04/2019)

கடைசி தொடர்பு:06:00 (03/04/2019)

’அனிதா மரணத்துக்குக் காரணமானவர்களைத் தண்டியுங்கள்!’ உதயநிதி ஸ்டாலின் காட்டம்!

'நீட் தேர்வை அறிமுகப்படுத்தியதால் சாதாரண குடும்பங்கள், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்ந்துவிட்டது. நீட் தேர்வால் பலியான அனிதா மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு வாக்குகளின் மூலம் ஏப்ரல் 18-ம் தேதி தீர்ப்பு வழங்க வேண்டும்' என நெல்லையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.  

உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

நெல்லை நாடாளுமன்றத் தொகுதியின் தி.மு.க வேட்பாளரான ஞானதிரவியத்தை ஆதரித்து,  உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது , ’’கடந்த 12 நாள்களாக நான் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துவருகிறேன். நான் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் அலைமோதிவருவதைக் காண முடிகிறது. 

தற்போது  மோடி அலை இல்லை. மோடிக்கு எதிரான அலைதான் தமிழகம் முழுவதும் வீசிக்கொண்டிருக்கிறது. அத்துடன், மு.க.ஸ்டாலின் ஆதரவு அலை அனைத்துத் தொகுதிகளிலும் வீசுகிறது. அதனால், இந்தத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றுவது நிச்சயம். 

தீவிரவாதத்தை மோடி ஒழிக்கவில்லை. அவர் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. வேலைவாய்ப்பை உருவாக்கத் தவறிவிட்டார். பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி போன்றவற்றால் அப்பாவி மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளானார்கள். அதனால், வரும் 18-ம் தேதி மோடி கெட்-அவுட் ஆவார். அவர்மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். இனியும் அவரை நம்பி ஏமாற மக்கள் தயாராக இல்லை. 

உதயநிதி பிரசாரம்

ஒரு மாதத்துக்கு முன்புதான் முதல்வரை அன்புமணி ராமதாஸ், ஒன்றும் தெரியாத மண்ணு என விமர்சித்தார்.  துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை டயர் நக்கி என்று கேவலமாகப் பேசினார். ஆனால், அதே அன்புமணியுடன் அ.தி.மு.க-வினர் எந்த முகத்தை வைத்துக் கொண்டு கூட்டணி அமைத்திருக்கிறார்கள். 

 தமிழகத்தில் நீட் தேர்வைக் கொண்டுவந்ததால், கிராமங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகளின் மருத்துவக் கனவு பறிபோயிருக்கிறது. சாதாரண மாணவர்களின் கனவையும் எதிர்காலத்தையும் தமிழக அரசு கலைத்துவிட்டது. நீட் தேர்வு காரணமாகவே அனிதாவின் உயிரைப் பலிவாங்கினார்கள். அனிதாவின் மரணத்துக்குக் காரணமானவர்களுக்கு, ஏப்ரல் 18-ம் தேதி தமிழக மக்கள் நீதி வழங்க வேண்டும்’’ என  உதயநிதி ஸ்டாலின் பேசினார். நெல்லையைத் தொடர்ந்து முக்கூடல்,களக்காடு,வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அவர்  பிரசாரம் செய்தார்.