"கல்லாப்பெட்டிக்கும் பரிசுப்பெட்டிக்கும் நடக்கும் போட்டி" - டி.டி.வி.தினகரன் | TTV Dinakaran campaign in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 07:45 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (03/04/2019)

"கல்லாப்பெட்டிக்கும் பரிசுப்பெட்டிக்கும் நடக்கும் போட்டி" - டி.டி.வி.தினகரன்

“கல்லாப்பெட்டி ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வர பரிசுப்பெட்டி சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

அ.ம.மு.க துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் இன்று கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார். கோவை வேட்பாளர் அப்பாத்துரை மற்றும் பொள்ளாச்சி வேட்பாளர் முத்துக்குமார் ஆகியோருக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார் தினகரன்.

டி.டி.வி. தினகரன்

அப்போது பேசிய டி.டி.வி.தினகரன், “தமிழகத்தின் உரிமைகளையும் கட்சியையும் துரோகிகள் மோடியின் காலடியில் அடகு வைத்துவிட்டனர். அம்மா வழியின்படி இயங்கிக்கொண்டிருப்பது அ.ம.மு.க-தான். அதனால்தான் நாம் தனித்துப் போட்டியிடுகிறோம். நமக்குச் சின்னம் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். காயலாங் கடையில் கிடக்கும் பொருள்களைப் போன்ற சின்னங்களைக் கொடுத்தனர். அதையெல்லாம் மீறி, தற்போது பரிசுப் பெட்டகம் என்ற சிறப்பான சின்னம் நமக்குக் கிடைத்துள்ளது. மோடியும் பழனிசாமியும் என்னைத்தான் முதல் எதிரியாகப் பார்க்கின்றனர்.

ஆர்.கே.நகரில் அ.தி.மு.க வாக்காளர்களுக்கு 6,000 ரூபாய் பேசினாலும், அவர்களால் வெற்றி பெற முடியவில்லை. சுயேச்சையாக போட்டியிட்டு, இடைத்தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க-வை வீழ்த்தினோம். இந்தத் தேர்தலிலும் அது நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கக் கூடாது, அவரது படத்தை சட்டசபையில் திறக்கக் கூடாது என்று சொன்னவர்களுடன்தான் தற்போதைய துரோக அரசு கூட்டணி வைத்துள்ளது. கேரளத்தில் போட்டியிடும் ராகுல் காந்தியை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்கள்தான், இங்கு அதே காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர்.

இவர்கள் யாருக்கும் மக்கள் நலனில் அக்கறை இல்லை. நாங்கள்தான் மக்களுக்காகப் போராடி வருகிறோம். மோடியின் தவறான பொருளாதார கொள்கையால் கோவையில் சிறு, குறு நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பழனிசாமி ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது. குறிப்பாக, கொங்கு மண்டலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லை என்பதற்குப் பொள்ளாச்சி மற்றும் துடியலூர் சம்பவங்கள்தான் உதாரணம்.

மத்தியில் மோடி, மாநிலத்தில் எடப்பாடியின் ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இது கல்லாப்பெட்டிக்கும் பரிசுப்பெட்டிக்கும் நடக்கும் போட்டி. கல்லாப்பெட்டியை வீட்டுக்கு அனுப்ப, பரிசுப் பெட்டிக்கு வாக்களியுங்கள்” என்றார். இதனிடையே, வடவள்ளி பகுதியில் பிரசாரம் செய்துகொண்டிருந்த டி.டி.வி.தினகரன் அங்கு ஓர் பெண் குழந்தைக்கு `அம்மு’ (ஜெயலலிதா பெயர்) என்று பெயர் சூட்டினார்.