`புதுக்கோட்டையில் ஆளில்லாமல் நடந்த அமித் ஷாவின் பிரசாரக் கூட்டம்' - அ.தி.மு.க-வினர் அப்செட்! | 5 crore has been allocated to the state in 5 years says Amit Shah

வெளியிடப்பட்ட நேரம்: 07:20 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (03/04/2019)

`புதுக்கோட்டையில் ஆளில்லாமல் நடந்த அமித் ஷாவின் பிரசாரக் கூட்டம்' - அ.தி.மு.க-வினர் அப்செட்!

மத்திய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த 5 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத் திட்டங்களுக்காக ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி நிதி அளித்துள்ளது எனப் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா பேசினார்.

அமித்ஷா

பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து புதுக்கோட்டை அருகே திருமயம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட லேணா விளக்கு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக பொதுக்கூட்டத்துக்காக, சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் அ.தி.மு.க-வினர் பொதுமக்களை லாரி, டெம்போ உள்ளிட்ட வாகனங்களில் அழைத்து வந்தனர். 2.30 மணிக்கு அமித் ஷா பேச உள்ளார் என்று கூறி மதியம் 12 மணிக்கெல்லாம் ஆண்கள், பெண்கள் என  அனைத்து தரப்பினரையும் அமர வைத்தனர். 3.30 மணி வரையிலும் பொறுமையாக இருந்தவர்கள். அமித் ஷா வருவதற்கு முன்னதாகவே பொறுமை இழந்து மெல்ல, மெல்ல கலைந்து சென்றனர்.

4.30 மணிக்கு விழா மேடைக்கு அமித் ஷா வந்தார். அப்போது, பெண்கள் கூட்டம் முற்றிலும் கலைந்தது. உடனே, ஹெச்.ராஜா அமித்ஷா காதில் இதைக் கூற உடனே  எழுந்து உரையை ஆரம்பித்தார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றதால், அ.தி.மு.க நிர்வாகிகள் அப்செட் ஆகினர்.

தொடர்ந்து பேசிய அமித் ஷா,  ``மறைந்த  எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன் என பேச்சைத் தொடங்கினார். ``மத்திய பா.ஜ.க அரசு 7 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு, 8 கோடி வீடுகளுக்குக் கழிவறை வசதி, இரண்டரை கோடி வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டிருக்கிறது. 2 கோடியே 35 லட்சம் வீடுகளுக்கு மின்சார வசதி ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கிறது. பிரதம அமைச்சரின் மருத்துவக்காப்பீட்டு திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் 50 கோடி மக்களுக்கும் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் தற்போது போல் மெகா கூட்டணி அமைக்கவில்லை. பொன். ராதாகிருஷ்ணன் தமிழகத்தில் வெற்றி பெற்றார். அவரை மத்திய அமைச்சராக்கினோம். தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி நிர்மலா சீதாரமனுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவி வழங்கினோம். தற்போது, மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதலமைச்சர் மற்றும் துணை முதல்வர் தலைமையில் செயலாற்றிக் கொண்டு இருக்கும் இந்தக் கூட்டணி 30-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற்று நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஒருபுறம் நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் நரேந்திர மோடி தலைமையிலான கூட்டணி. மறுபுறம் 12 லட்சம் கோடிக்கும் மேல் ஊழல் செய்திருக்கும் கனிமொழி, ஆ.ராசா, கார்த்தி சிதம்பரம் போன்ற ஊழல்வாதிகள் நிறைந்த கூட்டணி. சமீபத்தில் ராகுல்காந்தி அனைவருக்கும் தக்க திட்டங்கள் கொடுக்க வேண்டும். யாரும் சிறைச்சாலைக்குச் செல்லக்கூடாது என்று கூறியுள்ளார். ஒருவேளை கார்த்தியை மனதில் வைத்துத்தான் சொல்லி இருக்கிறார் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏற்கெனவே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தமிழகத்துக்கு ரூ.94 ஆயிரத்து 940 கோடி நிதி அளித்து இருந்தது. அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நம்முடைய தேசிய ஜனநாயகக் கூட்டணி 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சத்து 42 ஆயிரத்து 68 கோடி முன்னேற்ற திட்டங்களுக்காக தமிழகத்துக்கு நிதி அளித்திருக்கிறோம். நம் நாட்டில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி செய்யும் ராணுவ தடவாள பூங்கா கொண்டு வந்திருக்கிறோம். மீனவர்களின் நலனுக்காக, தனித் துறையை ஏற்படுத்தியுள்ளோம். சாகர்மாலா திட்டத்துக்காக, 2 லட்சத்து 25 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1,264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 5 லட்ச ரூபாய்க்குக் கீழ் வருமானம் உள்ளவர்கள் வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளார்கள். சமீபத்தில் பாகிஸ்தான் அரசாங்கம் நம் நாட்டின் துணை ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேர்ந்தது. மோடி அரசாங்கம் சம்பவம் நடந்த 13 நாள்களுக்குள் பாகிஸ்தானுக்குள் நுழைந்து அங்கிருந்த தீவிரவாதிகளைத் தாக்கி  நம் வீரர்களின் தியாகத்துக்காக தக்கப் பதிலடி கொடுத்தோம். ஊழல் நிறைந்த கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக, பா.ஜ.க வேட்பாளர் ஹெச்.ராஜாவுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்து நரேந்திர மோடியின் கரங்களை வலுப்படுத்துங்கள்" என்றார். 

கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சிவகங்கை எம்.பி செந்தில்நாதன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.