அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த ராஜகண்ணப்பன் - தேர்தல் பிரசாரம் தொடங்கினார் | raja kannappan started election campaign

வெளியிடப்பட்ட நேரம்: 08:05 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (03/04/2019)

அ.தி.மு.க-விலிருந்து பிரிந்த ராஜகண்ணப்பன் - தேர்தல் பிரசாரம் தொடங்கினார்

மக்களவைத் தேர்தலில் சீட் வழங்காததால் அ.தி.மு.க.விலிருந்து வெளியேறிய முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன், தற்போது அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பிரசாரப் பயணத்தைத் தொடங்கியுள்ளார். இது அ.தி.மு.க கூட்டணி வேட்பாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஜ கண்ணப்பன்


ஜெயலலிதா முதன் முறையாக முதலமைச்சர் ஆனபோது, அதில் அதிகாரம் மிகுந்த அமைச்சராக பொறுப்பு வகித்தவர் ராஜகண்ணப்பன். கட்சியில் மட்டுமல்லாமல் தமிழகத்தில் யாதவ சமூகத்திலும் செல்வாக்குள்ள தலைவராக ராஜகண்ணப்பன் இருந்தார். பின்பு  அ.தி.மு.க.வை விட்டு விலகி `மக்கள் தமிழ் தேசம்' என்ற கட்சியைத் தொடங்கினார். அதற்குப் பிறகு அதை கலைத்துவிட்டு தி.மு.க-வில் இணைந்து எம்.எல்.ஏ.வாக இருந்தார். அதைத் தொடர்ந்து மீண்டும் அ.தி.மு.க-வில் இணைந்து செயல்பட்டு வந்தார். 

ஜெயலலிதா மறைவுக்குப்பின் ஓ.பி.எஸ். தர்மயுத்தம் தொடங்கியபோது அவருடன் இணைந்து தென்மாவட்டங்களில் ஆதரவாக கூட்டங்கள் நடத்தினார். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஓ.பி.எஸ். தனக்கு சீட் வாங்கித்தருவார் என்று நம்பியிருந்தார். ஆனால், ஏமாற்றப்படவே, உடனே அ.தி.மு.க.வை விட்டு வெளியேறினார். மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இவரைப்போல மதுரை சிட்டிங் எம்.பி.கோபாலகிருஷ்ணனுக்கும் சீட் வழங்காததால் யாதவ சமூகத்தினர் மத்தியில் எதிர்ப்புக் குரல் கேட்டு வருகிறது. இந்த நிலையில் `தமிழ்நாடு இளைஞர் யாதவ மகாசபை' என்ற அமைப்பு ஏற்பாடு செய்துள்ள பிரசார பயணத்தில் நேற்று முதல் வருகின்ற 16-ம் தேதி வரை தமிழகத்தில் யாதவர் சமூகத்தினர் அதிகமுள்ள தொகுதிகளில் ராஜகண்ணப்பன் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளனர்.  இது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க