``டி.டி.வி.தினகரனோடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் தம்பிதுரை!" - அஸ்லம் பாஷா குற்றச்சாட்டு | congress Aslam Bhasha slams Thambidurai

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (03/04/2019)

கடைசி தொடர்பு:10:40 (03/04/2019)

``டி.டி.வி.தினகரனோடு ரகசிய கூட்டணி வைத்துள்ளார் தம்பிதுரை!" - அஸ்லம் பாஷா குற்றச்சாட்டு

``சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தவர்தான் தம்பிதுரை. அவர் டி.டி.வி.தினகரனோடு ரகசிய கூட்டணி வைத்து செயல்படுகிறார்" என்று காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா கரூரில் அதிரடியாக பேட்டியளித்தார்.
            

 அஸ்லம் பாஷா பேட்டி

கரூர் நாடாளுமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, பள்ளப்பட்டியில் நடைபெற்ற தெருமுனைப் பிரசாரத்தில் கலந்துகொள்வதற்காக கரூர் வருகை தந்திருந்தார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில சிறுபான்மைப் பிரிவு தலைவர் அஸ்லம் பாஷா. அதற்கு முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார்.


 ஜோதிமணி

அப்போது பேசிய அவர், ``டி.டி.வி தினகரனுடன் தம்பிதுரை ரகசிய கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார். நரேந்திர மோடி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் போட்டியிடும்போது, `வெற்றி பெற்று மக்களுக்கு சேவை செய்வேன். அதைச் செய்வேன், இதைச் செய்வேன்' என்று கூறியிருந்தார். ஆனால், நீரவ் மோடி, லலித் மோடி, மல்லையா போன்றவர்களுக்கு வெளிநாடு தப்பிச் செல்ல சேவை செய்தாரேயொழிய, மக்களுக்கு எதையும் செய்யவில்லை. தமிழக ஆளுங்கட்சிப் புள்ளிகள் தாங்கள் கொள்ளையடித்த பணத்தைப் பாதுகாக்க, `மோடிதான் சிறந்த நபர்' என்று கருதி அவரோடு கூட்டணி அமைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறார்கள்.

தம்பிதுரை

இதற்கு ஏஜென்டாக தம்பிதுரை இருக்கிறார். கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர் தம்பிதுரை சொந்தக் கட்சிக்குத் துரோகம் செய்ய நினைக்கிறார். கரூர் நாடாளுமன்றத் தொகுதி வாக்காளர்கள் எளிமை, நேர்மை, தூய்மையைக் கடைப்பிடிக்கும் கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி வேண்டுமா, சொந்தக் கட்சிக்குத் துரோகம் இழைக்கும் தம்பிதுரை வேண்டுமா என முடிவு செய்யும் நேரம் வந்துவிட்டது. அதிகாரம், பணம் ஆகியவற்றைக் கொண்டு மக்களை மண்டியிடச் செய்ய முடியாது. நாடு முழுவதும் ராகுல் அலை வீசுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் அமோகமாக வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும்" என்றார் அதிரடியாக!